For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபாவில் திமுக-அதிமுக எம்பி்க்கள் மோதல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் இருந்தபோதிலும் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இதை கூட்டணியின் முக்கிய கட்சியான திமுக தடுக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அதிமுக குற்றம் சாட்டியது. இதையடுத்து திமுக-அதிமுக எம்பிக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் பேசிய திமுக எம்பி. சிவா,

இலங்கையில் தமிழ் இனத்தையே முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் செயலில் அந்த நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. தமிழர் வாழும் பகுதிகளில் ரசாயன குண்டுகள் வீசப்படுகின்றன. இதனால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றன.

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

திமுகவின் நாடகம்- அதிமுக:

இதையடுத்துப் பேசிய அதிமுக எம்பி மைத்ரேயன்,

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அது மட்டுமல்ல இலங்கை அரசுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் ரேடார் கருவிகளை வழங்கி, இனப் படுகொலைக்கு மறைமுக கூட்டாளியாகவும் செயல்படுகிறது.

தமிழகத்தில் இருந்து 13 சக்தி வாய்ந்த அமைச்சர்கள் இருந்தபோதிலும் இலங்கைக்கு தங்கு தடையின்றி ராணுவ உதவிகள் செய்யப்பட்டு வந்துள்ளன. காங்கிரசின் முக்கிய கூட்டணியும், தமிழகத்தின் ஆளும் கட்சியுமான திமுக கூட இதை தடுக்கவில்லை.

தற்போது எதிர்ப்பு வலுத்ததும், எதையோ சாதிக்கப்போவது போல மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்துள்ள திமுகவும் ஒரு பெரிய ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றி உள்ளது.

உண்மையிலேயே, இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணம் திமுக அமைச்சர்களுக்கு இருந்திருந்தால் 7, ரேஸ்கோர்ஸ் சாலைக்கு (பிரதமர் இல்லம்) தான் ராஜினாமாவை அனுப்பி இருக்க வேண்டும். சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்க கூடாது என்றார்.

அவருடைய பேச்சுக்கு, காங்கிரஸ் எம்பி ஜெயந்தி நடராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவி அளிப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது என்றார்.

மேலும் திமுக எம்பிக்களும் அதிமுகவை கண்டித்து கோஷம் எழுப்பினர். மைத்ரேயனுக்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

அப்போது பேசிய மைத்ரேயன்,

இலங்கையில் சிங்கள மக்களைப் போலவே சரி சமமான உரிமையை கோரும் தமிழர்களின் கோரிக்கையை அதிமுக அங்கீகரிக்கிறது. சட்டத்துக்கு முன் சம உரிமை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகியவற்றை ஆதரிக்கிறோம். இலங்கையில் சுயாட்சியுடன் கூடிய தமிழ் மாகாணத்துக்கான அவர்களுடைய போராட்டத்தை வரவேற்கிறோம்.

ஆனால், விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கிறோம். சுயாட்சிக்காக தமிழர்கள் போராடுவதில் இருந்து விடுதலைப் புலிகளின் தீவிரவாதம் முற்றிலும் மாறுபட்டது என்றார்.

இதையடுத்துப் பேசிய பாஜக எம்பியான திருநாவுக்கரசர்,

இலங்கை தமிழர் பிரச்சனை அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சனை மட்டுமல்ல. இந்தியாவின் தமிழகத்தின் சுமார் 1 லட்சம் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வாழ்கிறார்கள். கடும் யுத்தம் நடக்கும் போதெல்லாம் வந்த வண்ணம் உள்ளனர்.

இலங்கை ராணுவம் அப்பாவி இலங்கை தமிழர்களின் இல்லங்களில் கொள்ளை அடிக்கிறது. இலங்கை தமிழ் பெண்களை கற்பழிக்கிறது. கட்டாயப்படுத்தி அகதிகள் முகாம்களில் கொண்டு சென்று அடைக்கிறார்கள்.

வனப்பகுதிகளுக்கு தமிழர்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். வீடு இழந்து, உணவின்றி, மருந்தின்றி காடுகளில் தமிழ் மக்கள் தவிக்கிறார்கள். சொந்த மக்களை அரசாங்கமே கொல்லும் செயல் உலக வரலாற்றில் இலங்கையில் தான் நடக்கிறது.

இந்திய அரசு எவ்வளவு காலம் வெறும் பார்வையாளராக இந்த கொடுமைகளை, மனித உரிமை மீறல்களை வேடிக்கை பார்க்கப்போகிறது? மத்திய அரசை நேரடியாக குற்றம் சுமத்துகிறேன்: இலங்கை அரசுக்கு ரேடார் போன்ற போர் உதவிக் கருவிகள் கொடுத்ததும், இலங்கை ராணுவத்திற்கு ராணுவ தளவாடங்கள், கருவிகள் கொடுப்பதும் தவறாகும்.

இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுகிறது. பெருமளவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக உதவிகள் வழங்க தமிழக பிஜேபி மற்றும் நெடுமாறன் போன்றவர்கள் மருந்து உள்ளிட்ட உதவிப் பொருட்களை சேகரித்தோம். ஆனால் இவற்றை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

மத்திய அரசு உடனடியாக ஐக்கிய நாட்டு சபையில் இப்பிரச்சனையை எடுத்து, ஐ.நா. மனித உரிமைக் குழுவை இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நிலவும் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவை சங்கம் போன்ற பொது நடுநிலை அமைப்புகளைக் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ இலங்கை அரசு தடை விதிப்பது அநியாயம்.

போரை உடனே நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும், அமைதி ஏற்படவும் இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்றார்.

இந்த விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ராஜா, மார்க்சிஸ்ட் எம்பி ரங்கராஜன் ஆகியோரும் பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X