For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வருடன் பாரதிராஜா திடீர் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதியை இயக்குனர் பாரதிராஜா திடீரென சந்தித்துப் பேசினார்.

இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய பொதுக் கூட்டத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் பேசிய பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக மதிமுக பொதுச் செயலர் வைகோவும், அவைத் தலைவர் கண்ணப்பனும் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து அமீர், சீமான், பாரதிராஜாவையும் போலீசார் கைது செய்யலாம் என்று பேசப்படுகிறது.

இந் நிலையில் நேற்று மாலை இயக்குனர் பாரதிராஜாவும், செல்வமணியும் முதல்வர் கருணாநிதி திடீரென சந்தித்தனர்.

முதல்வரின் சிஐடி நகர் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது ராமேஸ்வரம் பொதுக் கூட்டம் குறித்து பாரதிராஜா விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்தச் சந்திப்புக்கான காரணத்தைக் கூற பாரதிராஜா மறுத்துவிட்டார். செல்வமணி கூறுகையில், ஒரு விழா தொடர்பாக முதல்வரை சந்தித்தோம் என்று மட்டும் கூறினர். எந்த விழா என்பதையெல்லாம் சொல்லவில்லை.

காங். எம்எல்ஏ கடும் கண்டனம்:

இதற்கிடையே இயக்குனர் பாரதிராஜா முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசியிருப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஞானசேகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமைக்கு சவால் விடும் வகையில் பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர், சேரன், பாரதிராஜா, ராமநாராயணன் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அவர் கூறுகையில்,

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன் என்று சொன்ன வைகோவை கைது செய்ய வேண்டும் என்று பேசினேன். அப்போது முதல்வர் பதில் திருப்தி இல்லாத காரணத்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தோம்.

அப்போது, சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொன்ன முதல்வர். சட்டத்தை கடமையாற்ற அனுமதிக்காமல் விட்டுவிட்டார்.

பின்னர், சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திருமாவளவன், விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதையும் சுட்டிக் காட்டி சட்டமன்றத்தில் பேசினேன். சட்டம் இதுவரை அவரை கைது செய்யாமல் விட்டு விட்டது.

அதன் விளைவு இன்றைக்கு வைகோ ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று இந்திய திருநாட்டில் தனித்தமிழ்நாடு என்றும் பேசியுள்ளார்கள் என்றால் பிரிவினை வாதத்திற்கு இவர்கள் இன்று தோல் தட்டி புறப்பட்டுவிட்டார்கள்.

பாமக நிறுவனர் ராமதாசும் விடுதலைப் புலிகள், போராளிகள் என்று புதிதாக ஒரு அத்தியாயத்தை உருவாக்கியுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கம். ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். இதற்கு ஆதரவாக பலபேர் புறப்பட்டு வெளிப்படையாக பேசியது மட்டுமல்லாமல் மதுரையில் இரண்டு ரெயில் பெட்டிகள் எரியும் அளவுக்கு போய் இருக்கிறது. தமிழகத்தில் இனி எங்கெங்கு எது எரியும் என்று தெரியவில்லை.

வைகோ, கண்ணப்பனை கைது செய்து விட்டு சீமான், அமீர், சேரன், பாரதிராஜா, ராமநாராயணன் போன்றவர்களை கைது செய்யாதது ஏன்?

திமுக கூட்டணியில் இருந்துவரும் திருமாவளவனும் இன்றுவரை கைது செய்யாதது ஏன்?

அதைவிட கொடுமை என்வென்றால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட வேண்டிய திரைப்பட இயக்குனர்கள் நேற்று முதல்வரை சந்தித்துள்ளனர். இந்த இயக்குனர்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும் என்று தமிழக மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

இந்திய இறையாண்மைக்கு சவால் விடுகின்ற பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிற இவர்கள் போர்க்கால அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டும்.

உடனடியாக தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரையும் தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X