For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் 2 உறுப்பு தானம்-2 பேருக்கு வாழ்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சாலை விபத்தில் மூளை செயலிழந்த மருத்துவமனை ஊழியரின் இதயம், சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது. அதேபோல வேலூரைச் சேர்ந்த பெண்ணின் உடல் உறுப்புகள் வேறு ஒரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.

சேலம் அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (45). இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றினார். இவரது முதல் மனைவி சித்ரா. இவர்களுக்கு ரேவதி (17), பாரதி (15) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா இறந்துவிட்டார்.

இந்த நிலையில், தன்னுடன் வேலை பார்க்கும் நர்ஸ் லதாவை ராதாகிருஷ்ணன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எழிலரசன் என்ற ஒன்றரை வயது ஆண் மகன் உள்ளான்.

ராதாகிருஷ்ணன் கடந்த 22ம் தேதி மருத்துவமனையில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

ரோட்டில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை போலீசார் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் அவரது மனைவி, மகள்கள், உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

ராதாகிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரது மூளை செயல் இழந்துவிட்டதாகவும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலில் உள்ள இதர உறுப்புகள் நன்றாக இருப்பதாகவும், அவற்றை தானம் கொடுத்தால் மற்றவர்கள் உயிர் வாழ்வார்கள் என்றும் டாக்டர்கள் யோசனை தெரிவித்தார்கள்.

இதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் உள்ள டாக்டர் கே.எம்.செரியனின் பிராண்டியர் லைப்லைன் மருத்துவமனையை (திருக்கழுக்குன்றம் ஹிதேந்திரனின் இருதயத்தை சிறுமிக்கு பொருத்தியவர்கள்) தொடர்பு கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி மூலம் ராதாகிருஷ்ணனின் உடலில் உயிர் தக்க வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட அவரது உடல் டாக்டர்கள், நர்சுகள் கண்காணிப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டது. மற்றொரு காரில் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகள்கள், உறவினர்கள் வந்தனர்.

சென்னை முகப்பேரில் உள்ள டாக்டர் செரியனின் மருத்துவமனையில் நேற்று பகல் 11.30 மணிக்கு ராதாகிருஷ்ணனின் உடலில் உள்ள உறுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை தொடங்கியது.

மருத்துவமனை தலைவர் டாக்ட கே.எம்.செரியன் மற்றும் டாக்டர்கள் மது சங்கர், ரவி அகர்வால், ஆன்ட்ரோ ஆகியோர் கொண்ட குழு அறுவைச் சிகிச்சை செய்தது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் டாக்டர் பத்மநாபன் நிருபர்களிடம் கூறுகையில், ராதாகிருஷ்ணனின் உடலில் இருந்து இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், பெரிய ரத்தக்குழாய் (மகாதமணி) ஆகியவை 5 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

இருதயம் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த லதா ஸ்ரீதருக்கு (48) என்ற பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது. கல்லீரல், ஒரு சிறுநீரகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்கள் சங்கர நேத்ராலயா ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

பொதுவாக இருதய மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்து 2 நாட்கள் கழித்த பிறகுதான் மாற்றி வைக்கப்பட்ட இருதயத்தின் செயல்பாடு மற்றும் நோயாளியின் உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும்.

மாணவன் ஹிதேந்திரன் இருதயம் சிறுமி அபிராமிக்கு பொருத்தப்பட்ட பிறகு அந்தச் சிறுமி நன்றாக இருக்கிறாள். இந்த சம்பவத்திற்கு பின்னர் மக்களிடம் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. உறுப்புகளை தானம் செய்ய பலரும் முன்வருகின்றனர். அந்த வரிசையில் ராதாகிருஷ்ணன் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டு உள்ளன.

எங்கள் ஆஸ்பத்திரியில் 9 வயது முதல் 63 வயது வரை உள்ள 60-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இருதயம் தேவைப்படுகிறது என்றார்

ராதாகிருஷ்ணனின் உடல் உறுப்புகளை தானம் செய்த அவரது மனைவி லதா நிருபர்களிடம் கூறுகையில், எனது கணவர் விபத்தில் சிக்கியதை கேட்டு நிலை குலைந்துபோனேன். என் வாழ்க்கைதான் இப்படி ஆகிவிட்டது. பிறருக்கு உதவும் குணம் கொண்ட எனது கணவரின் உடல் உறுப்புகள் வீணாகிவிடக்கூடாது என்பதால் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தோம்.

அவரது உறுப்புகளை பெறுபவர்கள் மூலம் எனது கணவர் இன்னும் பல ஆண்டுகள் வாழப் போகிறார் என்பதை நினைக்கும்போது ஆறுதலாக இருக்கிறது என்றார்.

ராதாகிருஷ்ணனின் மகள்கள் ரேவதி, பாரதி ஆகியோர் கூறுகையில், அப்பாவின் உடல் மண்ணுக்குப் போவதைவிட மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்று கருதியதால் உறுப்பு தானம் செய்திருக்கிறோம். மற்றவர்கள் மூலம் எங்கள் அப்பா எப்போதும் வாழ்வார் என்று கண்கலங்கியபடி தெரிவித்தனர்.

இதேபோல, காட்பாடி அருகே சாலை விபத்தினால் மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. அவற்றை, வேறு நோயாளிகளுக்கு பொருத்தினர்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே பெரியகுக்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். அவரது மனைவி இந்திராணி (40). ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இருவரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.

இந்திராணி, தனது மகன் மணிகண்டனின் மோட்டார்சைக்கிளில் பின்புறம் உட்கார்ந்து சென்றபோது, இன்னொரு பைக் மோதி விபத்து ஏற்பட்டது. தலையில் பலத்த காயம் அடைந்த இந்திராணி மயங்கி விழுந்தார். அவரை வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்து பரிசோதனை நடத்தியபோது, அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது தெரியவந்தது. இன்னும் சிலமணி நேரங்களில் இந்திராணி மரணம் அடைந்து விடுவார்.

அதற்குள் அவருடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால் உயிருக்கு போராடும் மற்ற நோயாளிகள் பிழைப்பார்கள் என்றும் இந்திராணியின் குடும்பத்தினரிடம் டாக்டர்கள் சொன்னார்கள்.

இந்திராணியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க கணவரும் பிள்ளைகளும் முன்வந்தனர். அதன்படி இந்திராணியின் இருதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகம் ஆகியவற்றை தானமாக எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கேற்ப சம்பந்தப்பட்ட உடல்உறுப்புகளில் வியாதி உள்ள நோயாளிகளை தேடும்பணி நடந்தது. இருதயத்தை மாற்றி பொருத்தி ஆபரேஷன் செய்வதற்கு ஏற்ற நோயாளி உடனடியாக கிடைக்காததால் இருதயத்தை தானமாக எடுக்க முடியவில்லை.

கண்கள், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை இந்திராணியின் உடலில் இருந்து டாக்டர்கள் தானமாக எடுத்து பாதுகாப்பாக வைத்தனர்.

இந்த நிலையில் இந்திராணி நேற்றுமுன்தினம் மரணமடைந்து விட்டார். இதையடுத்து, இந்திராணியிடம் தானமாக எடுக்கப்பட்ட கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான அறுவைசிகிச்சை நேற்று சி.எம்.சி.ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.

இதுபற்றி இந்திராணியின் கணவர் நடராஜன் கூறுகையில், நாங்கள் ஏழைகள், எனது மனைவியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி விட்டோம். என்றாலும் உறுப்புகளை தானமாக பெற்றுள்ள நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து அவர்கள் உயிருடன் இருந்தால் அதுவே போதும். அவர்கள் மூலமாக எனது மனைவியை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X