For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: இந்திய ராணுவத்தினரை திரும்ப அழைக்க வேண்டும்-பாமக

By Staff
Google Oneindia Tamil News

GK Mani
சென்னை: இலங்கையில் உடனே போரை நிறுத்தவும், அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களை உடனே அங்கிருந்து வெளியேற்றவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக கோரியுள்ளது.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது சிங்கள ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து தமிழ் அமைப்புகளின் கூட்டு இயக்கம் சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது.

புலவர் முத்து எத்திராஜன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். போரை உடனே நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக எம்பிக்கள் ராஜினாமா கடிதமும் கொடுத்துள்ளனர்.

இதில் முதல்வர் கருணாநிதி மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளின் ஒன்றுபட்ட குரல் மேலோங்கி இருப்பதன் மூலம் இந்திய அரசு இலங்கை தூதரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இலங்கையில் தமிழர்களுக்கு 800 டன் உணவு வழங்கவும் முன் வந்துள்ளது. இது ஒருபடி முன்னேற்றம் ஆகும். இன்னும் பல படிகள் ஏற வேண்டி உள்ளது. அதற்கு மத்திய அரசை தமிழக அரசு உடனே வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில் உடனே போரை நிறுத்தவும், அரசியல் தீர்வு காணவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசு எடுத்துள்ள முயற்சி ஓரளவுக்கு திருப்தியாக இருந்தாலும் மேலும் விரைந்து தீர்வுகாண வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்துகள் நேரடியாக கிடைக்கும் வகையில் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை சென்ற போது இந்திய ராணுவ வீரர்கள் சிலர் அங்கேயே தங்கி விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.

ராமதாஸ் கோரிக்கை:

இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைத் தீர்க்க தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியைத் தொடர்ந்து இந்திய அரசு சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் ஆறுதல் தருபவையாக இருக்கிறது. அந்த வகையில் இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் இவை மட்டும் போதாது.

தமிழகம் ஓரணியில் திரண்டு ஒருங்கிணைந்து குரல் எழுப்பியதன் விளைவாக இவையெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது. இந்திய அரசு நிவாரண உதவிப் பொருட்களை எப்போது அனுப்பி வைக்கப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்காமல், தமிழக அரசு உடனடியாக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.

மாநில அரசு இவற்றையெல்லாம் சேகரித்து அனுப்ப வேண்டும் என்பதற்குப் பதிலாக சொந்த நிதியிலிருந்தே ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்.

தமிழர்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை இந்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி அனுப்பினால்தான் ஈழத் தமிழர்களை பட்டினிபோட்டு சாகடிக்கும் இலங்கை அரசின் சூழ்நிலையை முறியடிக்க முடியும்.

அதன் மூலம் அரசியல் தீர்வு காணும் முயற்சியில் இலங்கை அரசை முடுக்கிவிட முடியும். இதனை மத்திய அரசுக்கு முதலமைச்சர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வர வேண்டும்.

தமிழகத்தில் இப்போது இப்பிரச்சனையில் உருவாகியிருக்கும் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழகம் என்ன சொல்கிறது என்று கேட்கவும் அது பற்றி சிந்திக்கவும் டெல்லி முன் வந்திருக்கிறது.

இது வரையில் டெல்லி, கொழும்பு இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இப்போது மீண்டும் சென்னையும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க இந்தத் திருப்பத்தை முதலமைச்சர் கருணாநிதி நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கையில் சண்டை நிரந்தரமாக நிறுத்தப்பட்டு தமிழீழம் அழவிலிருந்து காப்பாற்றப்படுவதற் கான தொடர் நடவடிக்கைகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். இங்குள்ள அனைத்து கட்சிகளும் இதில் அரசுக்கு துணை நிற்க வேண்டும்.

அரசியல் கருத்து வேறுபாடுகளால் ஒதுங்கி நிற்பவர்களையும் அரவணைத்துக் கொண்டு உரத்தக் குரல் கொடுத்தால் தான் இந்திய அரசை அசைக்க முடியும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களும் முழு மனநிறைவும், மகிழ்ச்சியும் அடையத் தக்க வகையில் இலங்கை தமிழர் பிரச்சனையில் சுமூகமான அரசியல் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா சோர்ந்துவிடாமல் தொடர்ந்து ஈடுபடும்படி தமிழக அரசும், தமிழகமும் வலியுறுத்தி வெற்றிகாண வேண்டும். அது வரை நமது கூட்டு முயற்சியை தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X