For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகள் ஆயுதங்களைப் போடும் வரை போர் நிறுத்தம் இல்லை: ராஜபக்சே

By Staff
Google Oneindia Tamil News

Rajapakse
டெல்லி: விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். அதுவரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள அதிபர் ராஜபக்சே டெல்லியில் நடந்த வங்கக் கடல் நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று மாலை அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.

இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்தினர். குறிப்பாக இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலை, விடுதலைப் புலிகளுடனான போர், தமிழக மீனவர்களை இலங்கை கடற்டையினர் தொடர்ந்து தாக்கி வருவது ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராஜபக்சே பேசினார். அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். உங்களுக்கும் (செய்தியாளர்களுக்கும்), இந்திய மக்களுக்கும், இந்திய பிரதமருக்கும் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலகத்துக்கும் இந்த உறுதிமொழியை நாங்கள் அளிக்கிறோம்.

தமிழர்கள் இலங்கை குடிமக்கள். அவர்களைக் காக்க வேண்டியது எனது கடமை.

20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளால் இலங்கையின் ஜனநாயக பாதைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகைய குழுக்களை ராணுவ ரீதியில்தான் சந்திக்க முடியும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு தீவிரவாதம் செல்வதை அனுமதிக்க முடியாது. எனவே போர் நிறுத்தம் கிடையாது.

இலங்கை அரசு சமரசத் தீர்வுக்குத் தயாராக உள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். பலமுறை போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போதெல்லாம் விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தை அதிகரித்து விட்டு மீண்டும் தாக்குதலைத் தொடங்கினர்.

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதில் இலங்கை அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இளம் போராளியாக இருந்தவர்தான் இன்று கிழக்கு மாகாணத்தின் முதல்வராக இருக்கிறார். பிள்ளையான், கருணா ஆகியோருக்கு உயர்ந்த மதிப்பு அளிக்கப்படுகிறது.

1200 தமிழர்களுக்கு போலீஸ் வேலை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலருக்கு இந்தியாவில்தான் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழர்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ, அவை அனைத்தையும் இலங்கை அரசு செய்து வருகிறது. 13வது சட்டத் திருத்தம் நீண்ட நாளாக அமல்படுத்தப்படாமல் இருந்தது. அதை தற்போது அமல்படுத்தி வருகிறோம்.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசினேன். வங்கக் கடல் வழியாகவே விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கடத்துவதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு தொடர்புடைய இந்தப் பிரச்சினை குறித்து இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேசுவார்கள்.

நிதி திரட்டுவது, ஆள் கடத்துவது, ஆயுதம் கடத்துவது போன்றவற்றை வங்கக் கடல் வழியாகவே புலிகள் மேற்கொள்வதாக நாங்கள் நம்புகிறோம். எனவே இந்தப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்த வங்கக் கடல் நாடுகள் கூட்டமைப்பின் சார்பாக செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்றார் ராஜபக்சே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X