For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழை குறைந்தாலும் வெள்ளம்-தத்தளிக்கும் தமிழகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை கடந்த ஒரு வார காலமாக ஆட்டிப்படைத்து வந்த கன மழை சற்று ஓய்ந்துள்ளது. இருப்பினும் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் குறையவில்லை. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை.

வங்கக் கடலில் ஏற்பட்ட நிஷா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து மக்களை முடக்கிப் போட்டு விட்டது.

எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. நிஷா புயல் கரையைக் கடந்தும் கூட அதன் தாக்கம் போகாததால், மழை தொடர்ந்து பெய்து வந்தது.

இன்னும் பெரும்பாலான பகுதிகளில் மழை குறையவில்லை. இருப்பினும் முன்பு போல கன மழை இல்லை. விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது.

இந்த மழைக்கு லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்துள்ளன. பல ஏரிகள், குளங்கள் உடைப்பெடுத்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன.

சென்னை நகரிலும், புறநகர்களிலும் வாழ்க்கை மிகக் கொடுமையாக மாறியுள்ளது. பெரும்பாலான புறநகர்கள் இன்னும் வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, வேளச்சேரி, ராம் நகர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளும், தாம்பரம் புறநகர்ப் பகுதிகள், வட சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகள் இன்னும் நீரில் தத்தளித்து வருகின்றன.

சென்னை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 5 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் தாழ்வானப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மாநகராட்சி சமுதாயக் கூடங்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சென்னை மாநகராட்சி மூலம் நேற்று 5 லட்சத்து 96 ஆயிரத்து 200 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 1 லட்சத்து 60 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சென்னையில் மட்டும் 12 பேர் சாவு

சென்னை நகரில் மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று 2 பேர் பலியாகியுள்ளனர்.

குன்றத்தூர், கொல்லச்சேரி மெயின் ரோட்டில் வசிப்பவர் பன்னீர்செல்வம் அவருடன் மகன் விஜயகுமார் (14) அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

வீட்டின் பின்புறம் தேங்கியிருந்த மழைநீரில் விஜயகுமார் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கிருந்து மின்கம்பம் மழையில் சாய்ந்து ஒயர்கள் தண்ணீரில் அறுந்து விழுந்துள்ளது.

மின்சாரம் அந்த தண்ணீரில் பாய்ந்ததால் சிறுவன் விஜயகுமாரை மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

அவனுடைய உடலை போலீசார் கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குன்றத்தூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூந்தமல்லியை அடுத்த மேல்மாநகர், படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன், அவருடைய மகள் லட்சுமி (20). அவர்கள் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த போது மழையில் மண்சுவர் இடிந்து லட்சுமி மீது விழுந்துள்ளது. இதில் லட்சுமி மூச்சு திணறி உயிரிழந்தார்.

பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புழல் ஏரி நிரம்பியது

இதற்கிடையே புழல் ஏரி நிரம்பியதைத் தொடர்ந்து அங்கிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து வட சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு!

கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டார்.

கடலூர் வருகை தந்த தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓ.டி. பகுதியில் உள்ள தனியார் பள்ளி, குறிஞ்சிபாடி அரசு பள்ளி மற்றும் மருவாய் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 19 -ம் தேதி முதல் கன மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையைவிட தற்போது 20 மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது.

இந்த மழையில் 2,231 வீடுகள் சேதமடைந்துள்ளன. 13 ஆயிரம் வீடுகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன. 336 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மாவட்டம் முழுவதும் 219 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 186 உணவு தயாரிக்கும் மையங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு ஒரு லட்சத்து 66 ஆயிரம்பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் 86 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர். 14 கால்நடைகளும் பலியாகியுள்ளன.

வீடு இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அந்த அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ 2000 வீதம் வழங்கப்படும் என்றார்.

சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள், பலர் உடன் சென்றனர்.

பெரம்பலூர் - 15 கிராமங்கள் துண்டிப்பு

கனமழை காரணமாக பெரம்பலூரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், 15 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்கு வரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றது. மாவட்டத்தில் உள்ள மலைபகுதியில் பெய்து வரும் அடைமழையால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த மாவட்டத்தில் பாயும் கல்லாற்றில் மழை நீர் அதிகரித்து வந்த நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள வி. களத்தூர் கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் ஆற்று நீரில் அடியோடு அடித்துச் செல்லப்பட்டதால், அங்கு போக்கு வரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், இப்பகுதிக்கு அருகே உள்ள இனாம் அகரம், மசம்பலூர், திருவாளந்துறை உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அனில்மேஷராம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தஞ்சையில் துரைமுருகன் ஆய்வு

தஞ்சாவூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம், தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

நேற்று மதியம் வரை இடைவிடாது கொட்டித்தீர்த்த மழை நேற்று இரவு ஓய்ந்தது. ஆனால் இன்று நண்பகல் முதல் மீண்டும் மழை தொடங்கியது.

மழையால், ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களிலும் உடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை சாலைகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டடுள்ளது.

இந்த நிலையில், மழைக்கு இன்று 2 பேர் பரிதாமாக பலியானார்கள் .

புதுக்கோட்டை அருகே மக்கள் மறியல்

புதுக்கோட்டை அருகே நிவாரணப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் பொது மக்கள் திடீர் மறியல் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் இருந்து பரம்பூர் செல்லும் சாலையில் உள்ளது கீழ பழவஞ்சி.

இந்த கிராமத்தில் கடும் மழை காரணமாக வெள்ள நீர் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் பல வீடுகள் மழை வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பொது மக்கள் உணவு, உடை இன்றி மிகவும் அவதிப்பட்டனர்.

இது குறித்து பொது மக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நேற்று காலை வரை அங்கு அரசு அதிகாரிகள் யாரும் வந்து பொது மக்களுக்கு உதவவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் புதுக்கோட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X