For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலவமும் 'இலை வசமும்': கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு அமல்படுத்தி வரும் இலவசத் திட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது. அரசின் இலவசத் திட்டங்களை கேலி செய்வோர், 'இலை வசம்' ஆனவர்கள்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ரேஷன்கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இந்தப் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

சென்னைவேளச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், தைத் திருநாளுக்கு பொங்கலிட தேவையான பொருட்களும், ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டிசேலைகளும் வழங்குவதை இணைத்து இன்றைய நிகழ்ச்சி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று இவை வழங்கப்படுகின்றன.

நெசவாளர்கள் பயனடைய வேண்டும், ஏழை, எளிய மக்கள் மகிழ வேண்டும் என்பதற்காக ரூ.260 கோடி செலவில் இலவச வேட்டி சேலைகளை வழங்குகிறோம்.

தைத்திருநாளை தமிழ் புத்தாண்டு என்று அறிவித்து அதை சட்டமாகவும் ஆக்கியுள்ளோம். 1921 மற்றும் 31ம் ஆண்டிலேயே பெரும் புலவர்கள் மறைமலையடிகள் தலைமையில் கூடி இயற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழறிஞர்களின் நீண்ட ஆய்வுக்கு பிறகுதான் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியே உள்ளது. ஆனால் இதை மகர சங்கராந்தி விஜயம் என்று பஞ்சாங்கம் மூலம் எழுதி வைத்து கொண்டாட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.

நான் அதை கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. அதன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அதை கொண்டாடுங்கள். தமிழின்பால் பற்றும், பாசமும், அன்பும் கொண்ட தமிழ் பெருமக்கள் தைத் திருநாளை கொண்டாடுங்கள். இதை சொல்வதற்குரிய கடமை எனக்கு உண்டு. அதை சிந்தித்து ஏற்றுக் கொள்கிற உரிமை உங்களுக்கு உள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச பொருட்கள் வழங்குவதை சிலர் கேலி செய்யும் நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதை வழங்கா விட்டால், பசி பட்டினியுடன் அல்லல்படும் ஏழை, எளிய மக்களுக்கு உதவக் கூடாதா? என கேட்பார்கள்.

ஏதாவது இலவசமாக தந்தால் இந்த நாடு உருப்படுமா? என்று பேசுகிறார்கள். பொருளாதார அடிப்படையில் வெற்றி பெறும் போது இலவசம் வேண்டாம் என விட்டு விடலாம்.
அது வரை அதை வழங்கத்தான் வேண்டும் என்று அந்த பொருளாதார மேதைகளுக்கு கூறிக் கொள்கிறேன்.

இந்த இலவசத்தை சிலர் கேலி, கிண்டல் செய்வதோடு சில பத்திரிகைகளிலும் கேலிச்சித்திரம் போட்டு தலையங்கம் எழுது கிறார்கள். இதற்காக நான் வருந்துகிறேன்.

அன்னதானம் வழங்குவது இலவசம் இல்லையா? நமது இலவசங்களை கேலி செய்யும் சில பத்திரிகைகள் இலவச புத்தகங்களை வழங்குவது நியாயமா? நாம் தருகிற இலவசங்களை கேலி செய்வோர் "இலை'வசம் ஆனவர்கள். அதனால்தான் அவர்கள் கிண்டல் செய்கிறார்கள்; அவதூறு பேசுகிறார்கள்.

அரசு தருகிற இலவச உதவிகளை ஏழைகள் மட்டுமல்லாமல் நடுத்தர மக்களும் பெற்றுக் கொள்கிறார்கள். வெள்ள நிவாரணத்தை ஒருவர் காரில் வந்து பெற்றுச் சென்றதாக மேயர் கூறினார். இலவசம் என்பது எங்களுக்கு இல்லையா? என்று கேட்டு பெறும் நிலை உள்ளது.

இந்த இலவச பொருட்களை வழங்குவதால் ஒவ்வொரு வீட்டுக்கும் நானே சென்று ஒரு சகோதரனை போல வழங்கும் மகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது. எனது அண்ணன், தம்பிகளுக்கு வேட்டி தருகிறேன்; அக்கா, தங்கைகளுக்கு சேலை தருகிறேன். நான் உரிமை யோடு, உணர்வோடு வழங்குவதை அவர்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த இலவச பொருட்கள் வழங்குவதில் அசம்பாவிதம் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் முன்கூட்டியே வழங்கப்படுகிறது.

தேர்தல் கமிஷன் உத்தரவால் திருமங்கலம் தொகுதியிலும், மதுரை மாவட்டத்திலும் இந்த இலவச பொருட்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்பு அங்கும் இவை வழங்கப்படும் என்றார் அவர்.

வருகிற 14ம் தேதி வரை அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இந்த பொங்கல் பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.

அரசு வழங்கும் பொங்கல் பொருட்கள்

பச்சரிசி - அரை கிலோ.
வெல்லம் - அரை கிலோ.
பாசிப் பருப்பு- 100 கிராம்.
முந்திரி, திராட்சை, ஏலக்காய் தலா 20 கிராம்.

இந்தப் பொருட்கள் வாழ்த்துடன் கூடிய ஒரு பையில் போட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

மதுரையில் கிடையாது ...

திருமங்கலம் இடைத் தேர்தலையடுத்து மதுரை மாவட்டத்தில் மட்டும் இந்தப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X