For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டைக் கொலை: 3 பேர் கைது-திட்டமிட்ட பெண்ணுக்கு வலை!

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வயதான தம்பதியினர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலைக்குத் திட்டமிட்ட வேலூர் பெண்ணுக்கு போலீஸார் வலை வீசியுள்ளனர்.

இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் உள்ள டெம்பிள் வியூ' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த அனந்த கிருஷ்ணன் (வயது 59), அவரது மனைவி யமுனா (50) ஆகிய இருவரும் கடந்த 1ம் தேதி வீட்டில் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.

இந்த வழக்கை துப்பு துலக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த போலீசார் 3 நாட்கள் தூங்காமல் இரவு-பகலாக விசாரணை நடத்தி, 3 கொலையாளிகளை கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட அனந்தகிருஷ்ணன் இசையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். வீட்டில் நள்ளிரவு வரை ஆர்மோனியம் வாசித்தபடி இருப்பார். இதை அக்கம் பக்கத்தினர் யாராவது தட்டிக் கேட்டால் அவர்களிடம் சண்டைக்கு போவார்.

இவர்களுக்கு வாரிசு இல்லை. கொலையாளிகளுக்கு அனந்தகிருஷ்ணனே கதவைத் திறந்து விட்டுள்ளார்.

அனந்தகிருஷ்ணன் இசை பற்றியும், யோகாசனம் பற்றியும் தனக்கு தெரிந்தவர்களிடம் பேசிக் கொண்டு இருப்பார். அவற்றில் அலாதி பிரியம்.

வேலூர் மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த சங்கீதா (30) என்ற பெண் அனந்தகிருஷ்ணனிடம் இசையை கற்று வந்ததாகவும், அடிக்கடி அனந்தகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

சங்கீதாவை விசாரிக்க சோளிங்கருக்கு தனிப்படையை அனுப்பினோம். ஆனால் சங்கீதா அங்கே இல்லை.

4 பேரை கல்யாணம் செய்த சங்கீதா:

சங்கீதா பற்றி விசாரித்த போது அவர் 4 பேரை திருமணம் செய்தவர் என்றும், பயங்கர கிரிமினல் என்றும் தெரியவந்தது.

சங்கீதா ஏற்கனவே, 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு தற்போது 4வதாக தினேஷ்(27) என்ற வாலிபரை மணந்துள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

தினேஷ், பெரிய காஞ்சீபுரத்தை சேர்ந்தவர். ஹூண்டாய் கார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதையடுத்து திணேஷைப் பிடித்து தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

அப்போது அனந்தகிருஷ்ணன் தம்பதியை தானும், தனது கூட்டாளிகள் புகழேந்தி (29), செந்தில்நாதன் (25) ஆகியோரும் சேர்ந்து கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டு விட்டார்.

இதையடுத்து மூவரையும் கைது செய்தோம். புகழேந்தியும், செந்தில்நாதனும் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள்தான். இவர்களும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். 3 பேரும் நெருங்கிய நண்பர்கள்.

சங்கீதாவின் திட்டப்படி கொலை ...

அனந்தகிருஷ்ணனிடம் சங்கீதம் கற்க சங்கீதா வந்தபோது அவர்களுக்கு வாரிசு இல்லை என்பதையும், வீட்டில் நிறைய நகைகள் இருப்பதையும் தெரிந்து கொண்டு அவர்களை தீர்த்து கட்டி நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

தன்னுடைய கொலை திட்டத்தை நிறைவேற்ற தினேஷையும், அவரது கூட்டாளிகளையும் பயன்படுத்தியுள்ளார்.

இந்த கொலை வழக்கில் சங்கீதா தான் சூத்திரதாரி. தினேஷ் மனதில் கொலை வெறியை உண்டாக்க சங்கீதா சினிமா பாணியில் கதை கூறி சாகசம் செய்துள்ளார்.

அனந்தகிருஷ்ணன் தம்பதிகளுக்கு ஜோதி என்ற மகள் இருப்பதாகவும், ஜோதி வாலிபர் ஒருவரை காதலிப்பதாகவும் கதை அளந்துள்ளார். ஜோதியின் காதல் அனந்தகிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை என்றும், காதல் திருமணம் செய்தால் சொத்துக்களை தரமாட்டேன் என்று அனந்தகிருஷ்ணன் சொல்வதாகவும் பொய் கதை சொல்லி இருக்கிறார் சங்கீதா.

மேலும், அனந்தகிருஷ்ணனுக்கு தனலட்சுமி என்ற 2வது மனைவி இருப்பதாகவும் சொத்துக்களை தனலட்சுமிக்கு எழுதிவைக்க அனந்த கிருஷ்ணன் முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

ஜோதி தனக்கு நெருக்கமான தோழி என்றும், நம்முடைய திருமணத்திற்கு ஜோதி தான் உதவி செய்தார் என்றும், திருமணத்திற்கு குறுக்கே நிற்கும் அனந்தகிருஷ்ணன் தம்பதியை கொலை செய்துவிட்டால் ஜோதியின் திருமணம் எளிதில் நடக்கும் என்றும் சொத்துக்களும் முறைப்படி ஜோதிக்கு கிடைக்கும் என்றும் அவ்வாறு சொத்துக்கள் கிடைக்கும் பட்சத்தில் நமக்கு பெரிய அளவில் பணம் தருவதாக ஜோதி கூறியிருக்கிறார் என்றும் ஒரு பொய்யான கதையை சங்கீதா தினேஷிடம் கூறியிருக்கிறார்.

இதை நம்பிய தினேஷ் பணத்துக்கு ஆசைப்பட்டு அனந்தகிருஷ்ணன் தம்பதிகளை தீர்த்து கட்ட சம்மதித்தார். கொலை திட்டத்தில் தனது நண்பர்களான புகழேந்தி, செந்தில்நாதன் ஆகியோரையும் சேர்த்துக் கொண்டார்.

புகழேந்திக்கும், செந்தில்நாதனுக்கும் பெரிய அளவில் பணம் தருவதாகவும் தினேஷ் ஆசை காட்டினார். அதன்பிறகு, கொலை திட்டம் உருவாகியது. சங்கீதா தான் கொலை திட்டத்தை வகுத்து கொடுத்தார்.

சொல்லிக் கொடுத்து அனுப்பினார்...

அனந்தகிருஷ்ணனின் வீட்டு கதவை தட்டிய உடன் சங்கீதம் கற்பதற்கும், யோகாசனம் பற்றி பேசுவதற்கும் வந்துள்ளதாக கூறினால், அவர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் கதவை திறந்து விடுவார் என்றும் வீட்டுக்குள் சென்றதும் அன்பாக பேசி, சமயம் பார்த்து கணவன்-மனைவி இருவரையும் கொலை செய்து விட்டு வீட்டுக்குள் இருக்கும் நகை-பணத்தை கொள்ளையடித்து கொண்டு வந்து விடுங்கள் என்றும் சங்கீதா கொலை திட்டத்தை சொல்லிக் கொடுத்தார்.

கொலைத் திட்டப்படி 29ம் தேதி அன்று காஞ்சீபுரத்தில் இருந்து வாடகை காரில் தினேஷ், செந்தில்நாதன், புகழேந்தி 3 பேரும் புறப்பட்டு வந்தனர். இரவு 7 மணிக்கு அனந்தகிருஷ்ணன் வீட்டு கதவைத் தட்டினர்.

சங்கீதா சொல்லி அனுப்பியபடி சங்கீதம் கற்க வந்துள்ளதாக கூறினர். உடனே அனந்தகிருஷ்ணன், சந்தோஷத்தோடு அவர்களை வரவேற்று வீட்டுக்குள் உட்கார வைத்தார். யமுனா அவர்களுக்கு தேநீர் போட்டு கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் சென்றார்.

அந்த நேரத்தில் அனந்தகிருஷ்ணனை வாயை பொத்தி, கழுத்தை கயிற்றால் இறுக்கியும், கத்தியால் அறுத்தும் கொடூரமாக கொன்றனர். பின்னர், சமையல் அறைக்கு சென்று யமுனாவையும் வாயை பொத்தி கழுத்தை அறுத்து தீர்த்து கட்டியிருக்கிறார்கள்.

கொலை தொழிலுக்கு புதியவர்கள் என்பதால் பதற்றத்தோடு செயல்பட்டு கையில் கிடைத்த நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

'லைவ்' உத்தரவு கொடுத்த சங்கீதா ...!:

கொலை சம்பவம் நடந்தபோது சங்கீதா, தினேஷிடம் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு எப்படி கொலை செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை கூறியதும் தெரிய வந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 9 சவரன் நகைகள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன.

சங்கீதா தப்பியோடி விட்டார். அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சங்கீதாவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளோம். புகைப்படத்தை பார்த்து அவரை பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

கைரேகைகள் பதிவாகாமல் இருக்க கொலையாளிகள் கையுறை அணிந்துள்ளனர். மற்ற தடயங்களையும் துணியால் துடைத்துள்ளனர். சினிமா பார்த்து இந்த நுட்பத்தை கையாண்டதாகக் கொலையாளிகள் கூறினர்.

சங்கீதா மீது உள்ள காதல் மயக்கத்தில் தினேஷ் தனது நண்பர்களோடு இந்த கொடூர கொலைகளை செய்துள்ளார்.

மக்களுக்கு பாடம்...:

இந்த கொலை சம்பவம் சென்னை மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பாடமாகும். கூலிப் படையினர் தான் இது போன்ற கொடூரமான கொலைகளை செய்வார்கள் என்ற நிலைமாறி நன்கு தெரிந்த நபர்களே இது போன்ற மாபாதக செயல்களை செய்வார்கள் என்பது இந்த சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இனிமேல், நன்கு தெரிந்த நபர்களாக இருந்தாலும் சரி, அறிமுகம் இல்லாத நபர்களாக இருந்தாலும் சரி வீட்டில் தனியாக இருக்கும் தம்பதிகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார் ராதாகிருஷ்ணன்.

பலே சங்கீதா...:

கொலை திட்டத்தை வகுத்து கொடுத்த சங்கீதாவை போலீசார் தேடுகிறார்கள்.

இவர் முதலில் கண்ணன் என்பவரை மணந்து அவரோடு 8 வருடங்கள் தனது சொந்த ஊரான சோளிங்கரில் வாழ்ந்துள்ளார்.

அதன்பிறகு, கண்ணனை விட்டுவிட்டு அரக்கோணத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். ஜெகநாதனோடு 2 ஆண்டுகள் குடித்தனம் நடத்திய பின்னர், அவரையும் தூக்கி எறிந்து விட்டார்.

3வதாக உமா சங்கர் என்பவரை காஞ்சீபுரத்தில் கைப்பிடித்து இருக்கிறார். 6 மாதங்கள் மட்டும் அவரோடு வாழ்ந்தார்.

உமா சங்கர் ஒரு மோதலில் ஈடுபட்டு அடி வாங்கி காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு வந்து போன திணேஷ் மீது சங்கீதா காதல் கொண்டார்.

அவரை தனது சாகசத்தால் வளைத்துப் பிடித்தார். வலையில் விழுந்த தினேசை, திருமணமாகாத இளம் பெண் என்று ஏமாற்றினார்.

2 மாதங்களுக்கு முன் தினேசை பதிவு திருமணம் செய்து கொண்டார். அவருடன் குடும்பம் நடத்த ஆரம்பித்த சங்கீதா தற்போது கர்ப்பமுற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொள்ளையடித்த நகையை விற்றதில் கிடைத்த ரூ.75,000 பணத்தை எடுத்துக் கொண்டு சங்கீதா தப்பி ஓடி இருக்கிறார்.

சங்கீதா இருக்கும் இடம் தெரியவந்துள்ளதாகவும், விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் கூறுகின்றனர். அவர் பிடிப்பட்டால் அவரது மேலும் பல கிரிமினல் லீலைகள் பற்றிய தகவல்கள் வெளிவரலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X