For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் 'என்ரான்': 'சத்யம்' என்ற ரூ.8000 கோடி பொய்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Ramalinga Raju
சத்யம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராமலிங்க ராஜூ செய்துள்ள மோசடியின் அளவு ரூ.8000 கோடி!. இது அவரே, தன் கடிதத்தின் மூலம் ஒப்புக் கொண்டுள்ள தொகை.

இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனத்திலும் நடக்காத பெரும் முறைகேடு இது. கிட்டத்தட்ட 2000ல் அமெரிக்காவின் வர்த்தக பூதம் என்ரானில் நடந்த முறைகேடுகளுக்கு சற்றும் சளைக்காத மோசடி இது என்று வர்ணிக்கிறது இந்திய தொழில் கூட்டமைப்பு.

பொய்யான கணக்கைக் காட்டிக் காட்டியே ஒரு வருடமல்ல... கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஏமாற்றி வந்திருக்கிறார் ராமலிங்க ராஜூ.

ராமலிங்க ராஜூவின் இருப்பு நிலைக் குறிப்பின்படி சத்யம் நிறுவனத்தின் கையிருப்பு ரொக்கம் ரூ.5,361 கோடிகள். ஆனால் நிஜத்தில் இவ்வளவு பணம் கையிருப்பில் இல்லையாம். ரூ. 5040 கோடிகள் செயற்கையாக கணக்கேடுகளில் உருவாக்கிக் காட்டப்பட்டுள்ளதே தவிர, நிஜத்தில் கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.300 கோடிக்கும் குறைவு.

அதேபோல ஒவ்வொரு காலாண்டிலும் கிடைத்த உண்மையான லாபத்தைச் சொல்லாமல், கூடுதலாக ஏற்றி வைத்து மீடியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவு, சத்யம் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மேலும் மேலும் உயர்ந்தது.

இன்னொன்று சத்யம் நிறுவனம் தனது அன்றாட பிஸினஸைக் கவனிக்கக் கூட பணமின்றி தடுமாறிய போது, தனிப்பட்ட முறையில் ரூ.1,236 கோடி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும், அது நிர்வாகக் குழுவுக்கே தெரியாது என்றும் கூறியுள்ளார். ஆக இந்தத் தொகையை ராஜூவுக்கு திருப்பித் தர வேண்டும் சத்யம் நிறுவனம்!!

இவ்வளவு தொகை கையிருப்பில் உள்ளதாக, பொய்யான கணக்கேடுகள் தயாரித்து தனது பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், புரமோட்டர்கள், பங்குச் சந்தை என சகலரையும் ஏமாற்றி வந்திருக்கிறது சத்யம்... அதாவது இந்த நிறுவனத்தின் பெயரில் ராமலிங்க ராஜு.

பெட்டிக்கடை வியாபாரமல்ல!:

இந்த முறைகேடுகள் மற்றும் ராஜுவின் நடவடிக்கைகள் எதுவுமே எங்களுக்குத் தெரியாது என கூலாக சொல்லிவிட்டு தப்பிக்கப் பார்க்கின்றனர் சத்யம் இயக்குனர் குழு. ராஜுவும் அப்படித்தான் கடித்த்தில் கூறியுள்ளார். தன்னைத் தவிர யாருக்கும் இந்த மோசடிகள் எதிலும் துளியும் சம்பந்தமில்லை என்று கூறி மொத்தமாக அந்தக் கூட்டத்தையே இந்த சீனிலிருந்து அப்புறப்படுத்த முனைகிறார்.

எல்லாமே ஒரு தனி மனிதனுக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்லித் தப்பிக்க இது ஒன்றும் பெட்டிக் கடை வியாபாரமில்லை. இயக்குனர்கள் குழு, தலைமை நிர்வாகிகள் என பக்காவான கார்ப்பரேட் அமைப்பு இது.

தனது ஒவ்வொரு செயலுக்கும் இயக்குனர்கள் குழுவைக் கூட்டி விவாதித்து, ஒப்புதல் பெற்றுள்ளார் ராமலிங்கராஜூ. ஒவ்வொரு காலாண்டு ரிசல்ட் கூட்டத்திலும் இயக்குனர்கள் குழு கூட்டாகவே இந்தப் பொய்களை அறிவித்து வந்துள்ளது. பிறகெப்படி, ராஜுவின் மோசடிகளில் இந்தக் குழுவுக்கு பங்கில்லாமல் போகும்?

இந்த லட்சணத்தில் நிறுவனத்தின் ஒளிவு மறைவற்ற நேர்மை மற்றும் நிர்வாகத் திறமைக்காக சர்வதேச விருதுகளெல்லாம் வழங்கப்பட்டுள்ளன!.

ராஜூவின் இந்த தில்லுமுல்லுவை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது என கொதிப்புடன் கூறுகின்றனர் இந்திய பங்குச் சந்தை ஆய்வாளர்கள்.

'சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்கள் அனைத்தின் மீதும் மிகப்பெரிய சந்தேகத்தை விதைக்க அவரது மோசடி காரணமாகிவிட்டது என்கிறார் நாஸ்கம் தலைவர் கணேஷ்.

ஒன்று ராமலிங்க ராஜு சொல்வதுதான் உண்மை என்றால், பல முன்னணி நிறுவனங்கள் லாபத்தைக் காட்டும் நடைமுறை இதுதானா? எல்லாமே சீட்டுக் கட்டு மாளிகைதானா? பெரிய அளவு முதலீடு, கையிருப்பு, லாபம் எனக் காட்டி அரசின் சலுகைகளையும், நிறுவனப் பணத்தையும் மொத்தமாக அனுபவிப்பதும், இந்தியாவின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தையும் பெற்று பெரிய மனிதர்களாக உலா வர இப்படியும் வழியிருக்கிறதா...

அல்லது,

உண்மையிலேயே இவ்வளவு தொகை லாபமாகக் கிடைத்தாலும் அதை அப்படியே 'லபக்கி' விட்டு, இப்படியெரு கடிதம் எழுதிவிட்டால், ஏழு ஆண்டோ பத்தாண்டோ தண்டனையோடு முடிந்துவிடப் போகிறது. அதிலும் வாய்தா, ஜாமீன் என இழுத்தடிக்க எத்தனையோ ஓட்டைகள் இந்த நாட்டு கம்பெனிச் சட்டத்தில் உள்ளன. ஆனால் ரூ.8,000 கோடி ரூபாய் மிஞ்சுமல்லவா... எத்தனை ஆண்டுகள் முயன்றாலும் சம்பாதிக்க முடியாத பெரும் பணம் ஆயிற்றே...

சிக்கலில் ஆடிட்டர் நிறுவனம்:

ஆனால், இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கவனித்த பிரைஸ்வாட்டர் கூப்பர் ஆடிட்டிங் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இல்லாத பணத்தை ராஜூ கணக்கில் காட்ட இவர்களும் உதவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

செபியின் புலனாய்வுப் பிரிவும், மத்திய கம்பெனிகள் விவகாரத் துறையும், ஆந்திர மாநில அரசும் பல்வேறு கோணங்களில் விசாரணையை துவங்கியுள்ளன.

இன்னும் கிளறக் கிளற என்னென்ன பூதங்கள் கிளம்பி வரப்போகின்றனவோ தெரியவில்லை!.

பாவம் ஊழியர்கள்:

இந்த விவகாரத்தி்ல் தேவையில்லாமல் சிக்கிக் கொண்டிருப்பது சதயம் நிறுவன ஊழியர்கள் தான். தங்கள் எதிர்காலம் குறித்து அதன் 53,000 ஊழியர்களும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

விரைவில் விசாரணையை முடித்து, தவறு செய்தவர்களை எல்லாம் நீக்கிவிட்டு, நிறுவன நிர்வாகத்தையே மாற்றியமைத்து, இந்த நிறுவனத்தை இன்னொரு நிறுவனத்துடன் இணைப்பதே இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு என்கிறார்கள் பொருளாதாக நிபுணர்கள்.

ஆனால், சத்யத்துடன் இணையவோ அல்லது அதை வாங்கவோ வேறு நிறுவனம் தயாராக இருக்க வேண்டுமே..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X