For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வி.பி.சிங்குக்கு அஞ்சலி-சட்டசபை ஒத்திவைப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

VP Singh
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சி்ங்குக்கு இரங்கல் தெரிவித்து இன்று தமிழக சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக சட்டசபையின் 2ம் நாள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கந்தசாமி, சதாசிவன், பிரணவநாதன், பெருமாள், பெ.சீனிவாசன் ஆகியோர் பற்றிய இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் ஆவுடையப்பன் வாசித்தார்.

இதையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மீதான இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் கொண்டு வந்தார். அதன் விவரம்:

சமூகநீதி காவலரும், மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று இட ஒதுக்கீட்டை வழங்கி வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டவரும், அரசியல் நாகரீகம், பண்பாடு, உயர்ந்த லட்சியங்களின் அடயாள சின்னமாக விளங்கியவர் வி.பி.சிங்.

அவர் தமது 77வது வயதில் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி இயற்கை எய்தியது குறித்து இப்பேரவை பெரும் அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

பொதுத் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவர் 1969ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1971ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.

1980ம் ஆண்டு உத்தரப்பிரதேச முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1983ம் ஆண்டு முதல் 1987 ஆண்டு வரை மீண்டும் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார்.

1989ம் ஆண்டு இந்தியாவின் 7வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழகத்தைச் பொறுத்தவரை அவர் பிரதமராக இருந்தபோது வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க காவிரி நடுவர் மன்றம் அமைத்திடக் காரணமாக இருந்தார்.

சென்னை வெளிநாட்டு விமானத் தளத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு விமானத் தளத்துக்கு காமராஜர் பெயரையும் சூட்ட வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்தவுடன் அதை ஏற்று அந்த மேடையிலேயே அதற்கான அறிவிப்பு செய்தார்.

ராஜ பரம்பரையிலே பிறந்திருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் மறைந்தாலும் அவரது மேதைமைத்தன்மையும், உயர் தனிச் சிறப்பும், சீரிய செயல்பாடுகளும் சரித்திரத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று வி.பி.சிங்குக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டமன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும்.

லதா அதியமான் பதவியேற்பு:

முன்னதாக திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் லதா அதியமான் இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றார்.

சபாநாயகர் அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் லதா அதியமானுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X