For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட்டையே படிக்காத ஜெ. -கருணாநிதி தாக்கு

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த ஆண்டுகளில் பயிர்க் கடன்கள் கிடைக்கவில்லை எனக்கூறி இருக்கும் ஜெயலலிதா பட்ஜெட்டை முழுவதுமாக படிக்கவே இல்லை. படித்திருந்தால் புதிய பயிர் கடன்களுக்கு ரூ. 2,000 கோடி வழங்கப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டிருப்பார் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விவசாயிகள் வாங்கும் கூட்டுறவு கடன்களுக்கு இனி வட்டி கிடையாது என்றும், அந்த வட்டித் தொகையை அரசாங்கமே விவசாயிகளுக்காகச் செலுத்தும் என்றும் நிதி நிலை அறிக்கையிலே அறிவித்திருப்பதை ஜெயலலிதா வழக்கம் போல் மிகப்பெரிய ஏமாற்று வேலை என்று சொல்லியிருக்கிறார்.

கழக அரசு தீட்டியுள்ள ஒவ்வொரு திட்டத்தையும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஏமாற்று வேலை என்று கூறுவதும், பிறகு அது மிகப்பெரும் வெற்றியாக அமைவதும் தமிழகத்திலே நாம் கண்டு வருகின்ற ஒன்று தான்.

புதிய பயிர்க் கடன்கள் இந்த ஆண்டு வழங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் சொல்லப் பட்டிருப்பது பற்றி அறியாமல் ஜெயலலிதா விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுகளில் பயிர்க் கடன்கள் கிடைக்கவில்லை என்று பட்ஜெட்டை முழுவதும் படிக்காமலே சொல்லியிருக்கிறார்.

2006-2007ம் ஆண்டு 1,250 கோடி ரூபாயும், 2007-2008ல் 1,360 கோடி ரூபாயும், நடப்பு நிதியாண்டில் இதுவரை 1,325 கோடி ரூபாயும் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று எழுதப்பட்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை போலும்!.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், புதிய சட்டமன்ற வளாகம், நவீன மாநில நூலகம் போன்ற திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டில் மட்டும் இடம் பெறுவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா ஒரு நாள் தனது காரை எடுத்துக் கொண்டு இந்தப் பணிகள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று பார்த்தால் நேரிலேயே அந்தப் பணிகள் நடைபெறும் உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதிமுகவும் இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டு தீட்டப்பட்டவை என்று சொல்லியிருப்பதிலிருந்தே, அவர்கள் எல்லாம் இந்த பட்ஜெட்டை வரவேற்கக் கூடியது என்றும் மக்களுக்கு நன்மை செய்யக் கூடியது என்றும கருதுகிறார்கள் என்பது திட்டவட்டமாக தெளிவாக்கி விட்டது.

ஆனால் இப்படிப்பட்ட பட்ஜெட் வெளிவரக் காரணம் நாடாளுமன்றத் தேர்தல் தான் என்று சொல்லியிருக்கிறார்கள்.

திருமணத்திற்கென்று எடுத்த பட்டுப் புடவையை, திருவிழாவிலே கட்டிக் கொள்வதில் தவறில்லையே! குடும்பப் பெண்கள் அப்படிச் செய்வது வழக்கம் தானே. நாடாளுமன்றத் தேர்தலுக்காகவோ என்னவோ, நிதி நிலை அறிக்கை நல்லதொரு அறிக்கை என்று அவர்கள் ஒப்புக் கொண்டமைக்காக நன்றி.

விவசாய வளர்ச்சிக்கு- வேளாண்மைக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

நம் நினைவு தெரிந்த நாள் முதல் இருந்த வரி நில வரி. அந்த நில வரி இனிமேல் பெயர் அளவில்- அந்த நிலத்திலே உரிமை கோருவதற்காக மட்டும் இருந்தால் போதும் என்று கூறி இது வரை புஞ்செய் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ரூபாய் என்பதிலிருந்து இரண்டு ரூபாயாகவும், நஞ்செய் நிலங்களுக்கு ஏக்கர் ஒன் றுக்கு 50 ரூபாய் என்பதிலிருந்து 5 ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறதே, அது விவசாயிகளுக்காக செய்யப்பட்ட நன்மை இல்லையா?.

இந்த அளவிற்கு குறைக்கப்பட்ட நில வரியைக் கூட, இந்த ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களுக்கு அறவே கிடையாது என்று நிதி நிலை அறிக்கை கூறுகிறதே, அது நன்மை இல்லையா?

விவசாயிகளுக்கு தல வரி, தல மேல் வரி என்பது இனிமேல் அறவே கிடையாது என்று அறிவித்திருக்கிறோமே, அது நன்மை இல்லையா?.

கம்யூனிஸ்ட் கட்சி பழைய நண்பர்களே, விவசாயிகளுக்கு இவைகள் எல்லாம் சாதனை இல்லை என்றால் வேறு எதைத் தான் சாதனை என்று கூறுவீர்கள்?.

மதிமுக சார்பில் நிதி நிலை அறிக்கை மீது கருத்துக் கூறியுள்ள தம்பி கண்ணப்பன், இலங்கையில் போரை நிறுத்த மைய அரசை அழுத்தம் கொடுக்கவில்லை என்று சொல்லியிருப்பது கட்சிக் கட்டுப்பாட்டின்படி என்று கருதுகிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பட்ஜெட்டில் பத்தி 5ல் கூறப்பட்டுள்ளது. அதில் "இரு சாராரும் போரை நிறுத்தி நியாயமான உடன்பாட்டிற்கு வந்திடத் தேவையான தீவிர முயற்சிகளை இந்தியப் அரசு மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

பாமக சட்டமன்ற தலைவர் நண்பர் ஜி.கே.மணி கூட இந்த பட்ஜெட் பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட் போல உள்ளது என்று கூறி விட்டு, முடிக்கும் போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதி நிலை அறிக்கை போல் இருந்தாலும் அற்புதமாக பாராட்டும் வகையில் இல்லை என்று முடித்திருக்கிறார். அந்த வார்த்தைகள் சொல்ல வேண்டுமே என்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தைகளாகத்தான் தெரிகின்றன.

"போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்''- ஆனால் நம்முடைய எண்ணம் எல்லாம் பட்ஜெட்டிலே குறிப்பிட்டிருப்பதைப் போல என்னுடைய எண்ணங்களும், இந்த அரசின் செயல்பாடுகளும், இந்த நாட்டிலே வாழும் அடித்தட்டு மக்களையே சுற்றி சுற்றி சுழன்று வருகின்றது என்பது தான் உண்மை என்பதற்கு அடையாளமே இந்த பட்ஜெட்.

இந்த நிதி நிலை அறிக்கையிலே தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. அவைகளையெல்லாம் இந்த மருத்துவமனையிலே சிகிச்சை படுக்கையிலே இருந்து கொண்டு, ஒரு கடிதத்திலே எழுதி விட முடியாது.

இறுதி எஜமானர்களாகிய மக்கள் எப்போதும் போல் இத் திட்டங்களுக்கு தங்கள் மதிப்பெண்களை தந்தே தீருவார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X