For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்புறம் எப்படி இந்திய-இலங்கை ஒப்பந்தம்?-விஜய்காந்த்

By Sridhar L
Google Oneindia Tamil News

Vijaykanth
சென்னை: இலங்கை பிரச்சனையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் நியாயமான கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசை கண்டித்தும், அங்கு போர் நிறுத்தம் செய்ய ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் விஜயகாந்த் தலைமையில் இன்று தேமுதிக பேரணி நடந்தது.

சென்னை தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை நடந்த இந்த பேரணியில் விஜயகாந்த் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருப்புச்சட்டை அணிந்து நடந்தனர்.

விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, விஜய்காந்தின் மச்சானும் இளைஞரணிச் செயலாளருமான சுதீஷ் உள்ளிட்ட ஏராளமான மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவில் விஜயகாந்த் பேசுகையில்,

இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருப்பது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நமக்கும் உணர்வு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

நம் மக்கள் இலங்கையில் தினம் தினம் செத்து மடிகிறார்கள். அதனால் நமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல.

இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சனையில் நாடகமாடி வருகின்றன. இலங்கை அதிபர் ராஜபக்சேவோ, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம் என்று கூறுகிறார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் கூறுகிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும். விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கிறது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா?.

ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும்.

அடுத்த நாட்டு பிரச்சனையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது.

மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சனையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களை பார்த்து தான் இப்போது மற்ற கட்சிகளும் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

இலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. எனவேதான் இதில் ஐ.நா. தலையிட்டு போரை நிறுத்த வழிவகை காண வேண்டும் என்று இந்த பேரணியை நாங்கள் நடத்துகிறோம்.
தேமுதிக எப்போதும் ஆக்கப்பூர்வமான வேலைகளையே செய்யும்.
நான் நடிகனாக இருந்தபோதே இலங்கை தமிழர் பிரச்சனைக்காக எம்ஜிஆர், சிவாஜி நடத்திய ஊர்வலங்களில் பங்கேற்றிருக்கிறேன். இலங்கை தமிழர் பிரச்சனை முடியும் வரை பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன்.

இந்த திமுக அரசு சாதாரண சட்டக் கல்லூரி சண்டையையே நிறுத்த முடியவில்லை. நேற்று ஹைகோர்ட்டில் நடைபெற்ற சண்டையையும் இந்த அரசால் நிறுத்த முடியவில்லை. இவர்களால் எப்படி இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.

அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நான் தெரிவித்தேன். உடனே தேர்தலுக்கு நான் பயந்தவிட்டதாக கூறுகிறார்கள். நான் என்றைக்கும் தேர்தலை கண்டு அஞ்சுபவன் அல்ல. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன். அப்படி தனித்து நிற்பதற்கு இங்கு எந்த கட்சிக்கும் தைரியம் இல்லை.

ஒரு சாதாரண தண்ணீர் பிரச்சனைக்காக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கும்போது, அதிகாரிகள் ஓடோடி வந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் நாடாளுமன்ற தேர்தலையும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணித்தால் இலங்கை விஷயத்தில் ஐ.நா. தலையிடும் என்று நான் கூறுகிறேன்.

தமிழர்கள் மீது இலங்கையில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதனை இந்த திமுக அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இங்குள்ள கட்சிகள் கூட்டணி பற்றிதான் பேசுகிறார்களே தவிர, இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி திமுக பேசுவதில்லை.

தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.

வரும் 24ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது நம்முடைய போராட்டம் அவர்களுடைய செவிக்கு எட்டும் வகையில் அமைய வேண்டும். இருந்தாலும், தேமுதிக தொண்டர்கள் அனைவரும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும்.

இந்தப் பிரச்சனையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார் விஜயகாந்த்.

அதன் பின்னர் அவரது தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் அமெரிக்க தூதரகத்துக்குச் சென்று இலங்கையில் போரை நிறுத்த கோரி மனு அளித்தனர்.

அனுமதி மறுப்பு-ஊர்வல பாதை மாற்றம்:

முன்னதாக இந்த ஊர்வலம் காலை கடற்கரை காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு அமெரிக்க தூதரகம் வரை நடப்பதாக இருந்தது. ஆனால் காவல்துறையினர், இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து ஊர்வலம் தீவுத்திடல் அருகிலுள்ள மன்றோ சிலையில் இருந்து புறப்பட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முடிவடைந்தது.
யாருடனும் கூட்டணி இல்லை:

ஓசூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக துணைத் தலைவர் பாலாஜி வீட்டுக்கு நேற்று விஜயகாந்த் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,

கூட்டணி குறித்து நான் எந்த தகவலையும் ஆதிகாரப்பூர்வமாக இதுவரை கூறவில்லை. நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தான் (காங்கிரஸ்-திமுக-தேமுதிக) கூட்டணி என்று கண், காது வைத்து எழுதுகிறீர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, சட்டசபை தேர்தலிலும் சரி நான் யாருடனும் கூட்டணி வைக்க விரும்பவில்லை. வதந்திகளை யார் கிளப்பினாலும் என்னை பற்றி பொது மக்களுக்கு நன்றாக தெரியும். 'ப்ளீஸ்' என்னை விட்டு விடுங்கள். நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் என்றார்.

யுஎஸ் தூதரகத்தில் ராமதாஸ், வைகோவும் மனு:

அதே போல இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலையை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று அமெரிக்க துணைத் தூதரகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு பேரணி நடைபெற்றது.

இதில் டாக்டர் ராமதாஸ், வைகோ, பழ. நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியின் நிரைவில் அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகளிடம் தலைவர்கள் மனு அளித்தனர்.

இதுகுறித்து பின்னர் பழ. நெடுமாறன் கூறுகையில், இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழர்களை அழிவிலிருந்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா காக்க வேண்டும். இதுதொடர்பாக அவருக்கான கோரிக்கை மனுவை இன்று தூதரக அதிகாரிகளிடம் வழங்கினோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X