For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வன்னி-வாரத்திற்கு 300 தமிழர்கள் படுகொலை!

By Sridhar L
Google Oneindia Tamil News

லண்டன்: வன்னி நிலப்பரப்பில் 13 சதுர கிலோமீட்டர் குறுகிய பரப்பில், ஒன்றரை லட்சம் தமிழர்கள் சிக்கியுள்ளனர். அங்கு வாரத்திற்கு 300 தமிழர்களை இலங்கை படைகள் கொன்று குவிக்கின்றன. உணவு, மருந்து, குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளதாக லண்டன் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் இதழின் செய்தியாளர் மாரீ கால்வின் இதுகுறித்து எழுதியுள்ளதாவது ..

உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்த மக்களுடன் இலங்கையின் வடக்கு - கிழக்கு கடற்கரையில் காத்திருக்கின்றனர் என தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் காத்திருக்கும் மக்கள் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். அவர்கள் பதுங்குகுழிகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். 26 வருடப் போரில் தற்போது அதிக பாதிப்புக்களை சந்தித்து வரும் மக்கள் இவர்கள்.

கடந்த வாரம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் காயமடைந்த 460 மக்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றிருந்தது. உள்ளூர் மீனவர்களின் துணையுடன் மரத்திலான டிங்கி படகுகளில் கொண்டு செல்லப்பட்ட இந்த மக்கள் 'கிரீன் ஓசன்' கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதிகளவான மக்கள் காயமடைகின்ற போதும் எடுத்துச் செல்லப்படும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவானது எனவே நாம் படுகாயமடைந்தவர்களையே அகற்றி வருகின்றோம்.

ஏனைய காயமடைந்த மக்களை அங்கேயே விட்டுள்ளோம். இது வேதனையானது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி ஷோபி ரோமனனின்ஸ் தெரிவித்துள்ளார்.

ராணுவ நடவடிக்கை காரணமாக 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளில் 1,50,000 மக்கள் தங்கியுள்ளனர். அங்கு நடைபெறும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களினால் ஒவ்வொரு வாரமும் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அங்குள்ள மக்கள் மருந்து, உணவு, குடிநீர் பற்றாக்குறை காரணமாகவும் இறப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

வன்னியில் இயங்கிவந்த கடைசி மருத்துவமனையும் இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்களுக்கு இருமுறை உட்பட்டதனால் மூடப்பட்டுள்ளது.

புதுமாத்தளனில் உள்ள சிறிய மருத்துவமனையே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கு நோயாளிகள் நிலத்தில் நீர் உட்புகாத துணிகளில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மருந்து பொருட்களை வைக்க மரக் கிளைகளே பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து 2,800 மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு தயார் எனவும் சிறிலங்கா அரசாங்கத்தினால் தினசரி மேற்கொள்ளப்படும் குண்டு வீச்சுக்கள் ஒரு இன அழிப்பு நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தடுத்து வருவதுடன் தொடர்ச்சியாக வான்குண்டு மற்றும் பீரங்கித் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

இது வன்னியில் பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துலக கண்காணிப்பாளர்கள் வன்னிக்கு வந்து நிலமைகளை கண்காணிக்க வேண்டும் என நடேசன் மேலும் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு 24 மணி நேரத்தில் பதில் கூறா விட்டால் அந்த நாட்டை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்க இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் தொழிற் கட்சி எம்.பி. ஜான் ராயன் கோரியுள்ளார்.

இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

131 தமிழர்களை மீட்ட கடற்படை:

இற்கிடையே, விடுதலைப் புலிகள் பகுதியிலிருந்து தப்பி வந்த 131 தமிழர்களை மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்களில் 65 பேர் ஆண், பெண்கள், 66 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் சுண்டிக்குளம் பகுதியில் இவர்கள் மீட்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

வெள்ளைக் கொடி கட்டிய எட்டு டிங்கி படகுகளில் இவர்கள் ஏறியதைப் பார்த்து அங்கு விரைந்து சென்ற கடற்படையினர் அவர்களை மீட்டு வந்ததாக கடற்படை கூறுகிறது.

இதுவரை அரசுத் தரப்புப் பகுதிகளுக்கு 45 ஆயிரம் தமிழர்கள் வந்துள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.

விடுதலைப் புலிகள் தற்போது 28 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் சுருக்கப்பட்டு விட்டதாகவும், ராணுவ நடவடிக்கைக்கு முன்பு அவர்கள் (2006க்கு முன்பு) 15 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை வைத்திருந்தனர் என்றும் இலங்கை அரசு கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X