For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3வது முறையாக சிதம்பரத்தில் போட்டியிடும் திருமா!

By Staff
Google Oneindia Tamil News

Thirumavalavan
சிதம்பரம்: சிதம்பரம் தனி தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 3வது முறையாக போட்டியிடுகிறார். இம்முறையும் அவர் பாமகவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாற்றிய பெருமை திருமாவளவனுக்கு உண்டு. தமிழகம் பல தலித் தலைவர்களைக் கண்டுள்ள போதிலும், திருமாவளவன்தான் போட்டி அரசியலில் ஓரம் கட்டப்படாமல் வலுவாக தாக்குப் பிடித்த முதல் தலித் தலைவர் ஆவார்.

பெரம்பலூர் மாவட்டம் செந்துறு தாலுகாவைச் சேர்ந்த அங்கனூர் கிராமத்தில் 1962ம் ஆண்டு பிறந்தவர் திருமாவளவன்.

தந்தை பெயர் ராமசாமி என்கிற தொல்காப்பியன். தாயார் பெரியம்மாள். தலித் மக்களுக்கு உழைப்பதற்காக திருமணத்தைத் துறந்தவர். சட்டப் படிப்பை முடித்தவர்.

ஆரம்பத்தில் தடயவியல் துறையில் பணியாற்றி வந்தார் திருமாவளவன். பின்னர் அரசியலில் புகுந்தார். 1999ம் ஆண்டு இவரது அரசியல் பிரவேசம் நடந்தது.

பல்வேறு போராட்டங்களையும், புயல்களையும் சந்தித்து இன்று உள்ள நிலைக்கு உயர்ந்தவர் திருமா. அவரது அரசியல் பாதை மிகக் கடுமையானது.

தலித் இயக்கத் தலைவராக மட்டுமல்லாமல் தமிழ் தேசியவாதியாகவும் அறியப்பட்டவர். விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரிக்கும் துணிச்சல் கொண்டவர்.

தமிழகத்தின் மையப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தபோதும், வடக்கில் அரசியல் செய்து வ்நதபோதிலும், தென்னகத்தில் திருமாவளவனுக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அதற்குக் காரணம் அவரது அரசியல் வாழ்க்கை மதுரையில் தொடங்கியதே.

1999ம் ஆண்டு சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக திருமாவளவன் போட்டியிட்டார். அத்தேர்தலில் 2.25 லட்சம் வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். வெற்றி பெற்றவர் பாமகவின் பேராசிரியர் பொன்னுச்சாமி.

இதையடுத்து 2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து எட்டு சட்டசபைத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்டது. இதில் திருமாவளவன் மட்டும் மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

2004ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவன் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் பொன்னுச்சாமியை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டார். இம்முறை 2.57 லட்சம் வாக்குகள் பெற்றார். மயிரிழையில் தோல்வியைத் தழுவினார்.

2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தர் திருமா. அதில் இவரது கட்சிக்கு 2 இடங்களில் வெற்றி கிடைத்தது.

தற்போது 3வது முறையாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார் திருமாவளவன். கடந்த முறையைப் போலவே இந்த முறையும் பாமகதான் இவரது முக்கிய போட்டியாளர்.

கடந்த முறை பாமகவுடன் நட்புறவில் இல்லாமல் இருந்தார் திருமா. ஆனால் சமீப ஆண்டுகளாக பாமகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே நல்லுறவு நிலவி வந்தது.

ஆனால் அரசியல் கூட்டணி அலங்கோலங்களால் திருமாவும், ராமதாஸும் எதிரெதிர் அணியில் இடம் பெற நேரிட்டுள்ளது.

இருப்பினும் தேர்தலை தேர்தலாகவே சந்திப்போம் என ராமதாஸ் கூறியுள்ளதால், நட்பை, ஓரம் கட்டி விட்டு பாமக வேட்பாளர் பொன்னுச்சாமியை தோற்கடிக்க திருமாவளவனும் கடுமையாக உழைப்பார் என நம்பலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X