For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்த 'அம்பி' தா.பாண்டியன் தான்!-கருணாநிதி பதிலடி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் தா.பாண்டியன். இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள். அந்த 'அம்பி' யார் என்பது தெளிவாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அலெக்சாண்டரின் படை இந்தியாவின் போரஸ் மன்னனை பிடிக்க ஜீலம் நதியை கடக்க அம்பி என்பவன் உதவியுள்ளான். அந்த அம்பியும் இந்தியாவின் ஒரு மன்னன் தான். இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு அம்பி இருக்கிறார். அவர் யார்? என்பதை கருணாநிதி தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியிருந்தார்.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும்- தவிர்க்கப்படாத நிலையில் முடிவொன்று ஏற்பட்டால், அப்போது பிரபாகரனை மரியாதையோடு நடத்த வேண்டுமென்று நீங்கள் சொன்னதை திசை மாற்றி- பிரபாகரனை நீங்கள் ஏதோ இழிவுபடுத்தி விட்டதைப் போல பழ.நெடுமாறனும், வைகோவும், ராமதாசும் உங்கள் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார்களே?.

பதில்: கடந்த 16.4.2002 அன்று தமிழக சட்டப்பேரவையில் இவர்களுடைய இன்றைய அன்பு தலைவி ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் இதோ:

"படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தை சார்ந்த எந்த ஒருவரையும் இந்திய திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

ராஜீவ் படுகொலைக்குப் பின் தமிழக மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும், அதன் நடவடிக்கைகள் மீதும், ஓர் அச்சம் கலந்த வெறுப்பைக் காட்டத் தொடங்கினர். தமிழக மக்களின் உணர்வை எப்போதும் பிரதிபலிக்கும் இந்தத் தமிழக அரசு, அது முதல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தனது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

அதே நேரத்தில், இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் பிரபாகரன் இந்திய மண்ணில் காலூன்றுவது ஒருபோதும் ஏற்கப்படமாட்டாது- அனுமதிக்கப்படமாட்டாது.

ராஜீவ் கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட முதல் குற்றவாளியான பிரபாகரனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடைமுறைப்படியும், அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா அரசினால் பிரபாகரனைப் பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதியோடு, இந்திய ராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது''

இத்தகைய தீர்மானம் தமிழகச் சட்டமன்றத்திலே ஜெயலலிதா முன்மொழிந்து கொண்டு வந்தபோது- இந்த வீராதிவீரர்கள், சூராதி சூரர்கள் எல்லாம் எந்த நாட்டிலே இருந்தார்கள்?.

இப்போது பிரபாகரனின் கெளரவம் போய்விட்டது என்று அலறித் துடிப்பவர்கள்- அப்போது வாய் நீளம் காட்டாததற்கு என்ன காரணம்? இன்றைக்கு ஒரு சில நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக- கூனிக் குறுகி தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு- நம்மைப் பற்றி குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?.

கேள்வி: மதிமுகவிற்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்றும், அவர்களை நிர்மூலமாக்க நினைத்தவர் அழிந்து போவர் என்றும், மதிமுக எங்கே இருக்கிறது என்று கேட்டவர் இன்று நம்மைப் பார்த்துப் பயப்படுகின்றனர் என்றும் வைகோ; அவர்களுடைய பொதுக் குழுவிலே பேசியிருக்கிறாரே?.

பதில்: "நினைப்புதான் பொழப்பை கெடுக்கும்'' என்று கிராமத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள். அவர் குறிப்பிட்டுக் கூறியிருக்கும் வார்த்தைகளுக்கு எல்லாம் என்ன பொருள் என்று புரியவில்லையா? அவர் 5 இடம் கேட்டபோது, மதிமுக எங்கேயிருக்கிறது என்று கேட்கப்பட்டதாம். பின்னர் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது, அவர்களைப் பார்த்து பயந்து கொண்டு ஒதுக்கியிருக்கிறார் என்பதை ஜாடையாகக் குறிப்பிட்டுத்தான் அவர் அந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கேள்வி: நீங்கள் ஆற்றிய உரையைத் திரித்து, உங்களின் விருப்பம் விஷமத்தனமானது என்றெல்லாம் பழ.நெடுமாறன் சொல்லி இருக்கிறாரே?.

பதில்: அவருக்கு நம்முடைய பேச்சுக்கான உண்மையான பொருள் புரியாது. ஜெயலலிதாவின் பேச்சு தான் புரியும். வாயைத் திறந்தவுடன் கடந்த ஆட்சியில் மாதக்கணக்கில் "பொடா'' சட்டத்தின்கீழ் அவரை உள்ளே பிடித்துப் போட்டார் அல்லவா? அப்போது வாயை மூடிக்கொண்டவர், தற்போது தான் வாயைத் திறக்கிறார். அப்படி வாயைத் திறக்கும்போதும் - இப்படி விஷத்தைக் கக்குகிறார்.

கேள்வி: இலங்கை ராணுவம் தமிழர்களை வீழ்த்துவதற்கு ராஜபக்சேவுக்கு உதவி செய்யும் "அம்பி'' யார் என்பதை முதல்வர் கருணாநிதி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தா. பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?

பதில்: பாண்டியனுக்கு "அவரை'' பற்றி நான் நேரடியாகச் சொல்லவில்லை என்ற கோபம் போலும்!. ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் இவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள். "அம்பி''யார் என்பது தெளிவாகும்!.

கேள்வி:- இலங்கை தமிழர்களைக் காக்க ஆட்சியை ஏன் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டிருக்கிறாரே?

பதில்: அவருடைய முக்கியமான குறிக்கோளே நாம் ஆட்சியிலே இருக்கக் கூடாது என்பது தான். கடைசி வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலே அமைச்சராகப் பொறுப்பேற்று, பதவிச் சுகம் அனுபவித்து விட்டு, அந்தக் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டுப் போனவர் அல்லவா?. காங்கிரஸ் கட்சியின் தலைமையிலே கூட்டணி என்றும் ஆசை வார்த்தை கூறி, அந்தக் கட்சியை அதிமுகவின் பக்கம் கொண்டுபோக படாதபாடுபட்டு, அதற்காகவே ஜெயலலிதாவை விட்டு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்புவிடவும் செய்து, காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலையினால் ஏமாற்றம் கண்டவர் தற்போதும் ஏன் ஆட்சியை இழக்கக் கூடாது என்கிறார்.

அதற்குக் கூட நான் பேரவையிலேயே பதில் கூறியிருக்கிறேன். தமிழ் ஈழம் மலருமானால், இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்குமானால், திமுக மூன்றாவது முறையாகக் கூட பதவி இழக்கத் தயார் என்று பேரவையிலேயே சொல்லியிருக்கிறேன்.

இலங்கை தமிழர்களின் துன்பங்களும் களையப்படாத நிலையில், நாமும் பதவியை இழந்து விட்டால், பிறகு அவர்களுக்கு கட்டி அழுவதற்குக் கூட துணை இருக்க மாட்டார்கள் என்று சந்திரஹாசன் போன்றவர்கள், மங்கையற்கரசி போன்றவர்கள், சேனாதி ராஜா போன்றவர்கள் எல்லாம் கூறுவதை நம்புவதா?.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் இவர்களின் சொற்களை நம்புவதா? பதவி விலகுவதிலே எவ்வளவு அக்கறையாக உள்ள டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மத்தியிலே மந்திரியாக இருந்த காலத்தில், "இலங்கை தமிழர் பிரச்சினையிலே மத்திய அரசு நடந்துகொள்வது சரியல்ல'' என்று இப்போது கூறுவதை அப்போதே கூறி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டிருந்தால் இவரை தமிழகம் ஒருவேளை நம்பியிருக்கும்! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X