For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபைக்கு 3 மாதத்தில் தேர்தல் வரும்-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

Ramadoss
தர்மபுரி: தமிழகத்தில் திமுக அரசு 3 மாதத்தில் கவிழும், சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தர்மபுரி பாமக வேட்பாளர் செந்திலை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஜெயலலிதா ஆட்சியில்) தமிழக சட்டசபையில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் எந்த நாட்டில் இருந்தார்கள் என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அன்றைய தினம் பாமகவின் 19 எம்எல்ஏ.க்களும் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் சட்டசபையில் அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாமகவின் 19 எம்எல்ஏக்களும் கறுப்பு சட்டை அணிந்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அன்றைய தினம் கருணாநிதி சட்டசபைக்கு வரவில்லை. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் அமைதியாக நடுநிலைமை வகித்து உட்கார்ந்திருந்தனர்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி ஏன் பதவி விலகவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சராக அன்புமணி சிறப்பாக செயல்பட்டது முதல்வர் கருணாநிதியின் கண்ணை உறுத்தி இருந்திருக்கிறது போலும். இலங்கை தமிழர் பிரச்சினைக்காக சோனியா காந்தி போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நான் பல முறை கடிதம் எழுதியுள்ளேன். நேரிலும் வற்புறுத்தியுள்ளேன்.

நான் கடைசியாக சோனியா காந்தியிடம் டெல்லியில் 35 நிமிடம் சந்தித்து பேசிய பிறகு தான் முதல்வர் கருணாநிதி டெல்லிக்கு டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் தலைமையில் ஒரு குழுவை அனுப்பினார்.

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழர் பேரணியில் கருணாநிதி அடிமையாக இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் யாருக்கு அடிமை என்பதை தெளிவாக விளக்க வேண்டும். அவ்வாறு கருணாநிதி அடிமையாக இருந்தால் அவரை மீட்க நாங்கள் முயற்சி செய்வோம்.

இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி, சோனியா காந்தியிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலின் போது காங்கிரசுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அவர் அறிவித்திருக்க வேண்டும்.

நாங்கள் மாறி மாறி கூட்டணி வைத்து பதவி சுகம் அனுபவித்து விட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். எங்களுக்கு பதவி சுகம் என்பதற்கு அர்த்தமே தெரியாது.

1989ம் ஆண்டு பாமக கட்சி ஆரம்பிக்கப்பட்டது. எங்கள் கட்சியை கருணாநிதி அழிக்க நினைத்தார். மேலும் கூட இருந்தே குழி பறிக்கும் செயலில் ஈடுபட்டதால் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தொண்டர்கள் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தி யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

கட்சி தொண்டர்கள் அனைவரும் அதிமுக தலைமையிலான கூட்டணியை வைக்க முடிவு செய்தனர்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக விடுதலைப் புலிகளின் ஆதரவு எம்.பி.க்கள் முதல்வர் கருணாநிதியை சந்திக்க கடந்த 3 வருடமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர் அவர்களை சந்திக்காமல் புறக்கணித்து வருகிறார். அது ஏன் என்று தெரியவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினையில் அதிமுகவின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

அதிமுக தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

திமுக ஆட்சி இந்த தேர்தலோடு முடியும். சட்டசபைக்கு மீண்டும் விரைவில் தேர்தல் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்னும் 3 மாதத்தில் சட்டசபை தேர்தல் வரக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றார்.

முன்னதாக திருவண்ணாமலையில் பாமக வேட்பாளர் காடுவெட்டி குருவுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,

முதல்வர் கருணாநிதி தொடர்ந்து 20 ஆண்டுகளாக பாமகவை அழிக்க சூழ்ச்சி செய்து வருகிறார், ஆனால் அவரது எண்ணம் பலிக்கவில்லை மாறாக அவரது கட்சிதான் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

இதற்கு உதாரணம், கடந்த சட்டமன்ற தேர்தலில் பலமாக கூட்டணி அமைத்தும் வெறும் 96 இடங்களில் தான் வெற்றி பெற்றார். தற்போது அமைந்துள்ள மைனாரிட்டி அரசு காங்கிரஸ் கட்சியின் தயவில் நடைபெற்று வருகிறது, இவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை திரும்ப பெற்று கொண்டால் ஆட்சி கவிழ்ந்து விடும்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து பொய்யான வீர வசனங்களை பேசி மக்களை ஏமாற்றி வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகாலமாக பாமக பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டு திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிகாட்டி வந்தது, இதை முதல்வர் கருணாநிதியால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

காடுவெட்டி குரு ஒரு கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியை தவறாக பேசியதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால் அதனுடைய பலனை இந்த தேர்தலில் அறுவடை செய்ய உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X