For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு கொடுங்கள்-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
கரூர்: கருணாநிதியைப் பார்ப்பதற்கு எனக்கு பயமில்லை. அவருக்குத் தான் என்னை நேருக்கு நேர் சந்திக்க பயம். நான் சட்டசபைக்கு வருகிறேன் என்று தெரிந்தாலே என்னைப் பார்க்கப் பயந்து கொண்டு தனக்கு முன்பு ஏராளமான கோப்புகளை அடுக்கி வைத்து முகத்தை மறைத்துக் கொள்வார் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

இன்று காலை பத்திரிகைகளில் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அது என்னவென்றால், நேற்று சென்னை விமான நிலையத்தில் நானும், கருணாநிதியும் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவானது. இதை எப்படி தவிர்ப்பது என்று காவல் துறை அதிகாரிகள் பதற்றமடைந்தார்கள், கவலை அடைந்தார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

ஏன், கருணாநிதியும், நானும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டால் என்ன? அதனால் என்ன ஆகப் போகிறது? நேருக்கு நேராக கருணாநிதியைப் பார்ப்பதற்கு எனக்கொன்றும் பயம் கிடையாது. ஆனால், நேருக்கு நேர் என்னை சந்திப்பதற்கு கருணாநிதி தான் பயப்படுகிறார்.

அதனால்தான் சட்டப்பேரவையில் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் எதிரெதிரே அமரும் வகையில் இருந்த இருக்கையை 15 அடி தொலைவுக்கு மாற்றிவிட்டார். நான் பேரவைக்கு வருகிறேன் என்று தெரிந்தாலே என்னைப் பார்க்கப் பயந்து, தன் முன்பு ஏராளமான கோப்புகளை அடுக்கிவைத்துக் கொள்வார் கருணாநிதி.

கருணாநிதியால் இப்போது கடமையாற்ற முடியவில்லை. முதலமைச்சர் செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியவில்லை. ஆகவே, நீங்கள் கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு அளிக்க வேண்டும்.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் 1967ம் ஆண்டு பொதுப் பணித்துறை அமைச்சராக பதவியேற்றதில் இருந்தே கருணாநிதி தொடர்ந்து உங்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.

5.2.2007ல் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இறுதித் தீர்ப்பு வழங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை விட கூடுதலான நீரைப் பெறுவதற்கோ, இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கோ, இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைப்பது குறித்தோ, கருணாநிதி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விலைவாசி உயர்வைக் குறைக்க, நிம்மதியோடு வாழ, தரமான மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க, ரவுடிகளிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, காவல் துறையினர் சுதந்திரமாக தங்களது கடமையைச் செய்திட, அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். ஆனால், அவர் உண்ணாவிரத நாடகம் நடத்தினார். இலங்கையில் போர் நிறுத்தப்பட்டது என்று கூறினார். ஆனால், இன்றுவரை அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். தனது நாடகம் அம்பலமானது என்று தெரிந்ததால் மக்களைச் சந்திக்க பயப்பட்டு, மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டுள்ளார்.

காமராஜர் வாடகை வீட்டை படம் பிடித்து மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்டியவர் கருணாநிதி. இந்திரா மதுரை வந்தபோது கொலை வெறி தாக்குதல் நடத்த காரணமானவர்.

ராஜிவ் கொலை வழக்கிலும் திமுக மீது சந்தேக நிழல் உள்ளதாக ஜெயின் கமிஷன் கூறியிருந்தது. இதை காரணமாக காண்பித்து 1997ல் மத்திய அரசை திமுக கவிழ்த்தது. இப்படிப்பட்ட திமுக- காங்கிரஸ் உடன்பாடு முன்னுக்கு பின் முரணாக உள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நளினிக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியவர் சோனியா. இவர்களுடன் விடுதலை சிறுத்தை கூட்டணி வைத்து ராஜதந்திரம் என்கின்றனர்.

சிறையில் நளினியை சந்திக்கிறார், சோனியாவின் மகள் பிரியங்கா. அவரே, சில நாட்களுக்கு முன், "ராஜிவ் கொலைக்கு காரணமானவர்களை நான் மன்னித்தாலும், நாடு மன்னிக்காது' என்கிறார். முரண்பாட்டின் மொத்த கூட்டணியாக உள்ளது திமுக கூட்டணி.

காவிரி, அமராவதியில் மணல் கொள்ளை முன்னின்று நடத்துபவர் இத்தொகுதி திமுக வேட்பாளர் பழனிசாமி. இதன் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் உள்ளதாகக் கூறப்படுகிறது. மணல் லாரியால் ஆண்டுக்கு 500க்கு மேற்பட்டோர் பலியாகின்றனர் என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X