For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் நடப்பது 'தாதாகிரி' அரசு-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

Ramdoss
வேலூர்: அமைதியாக தேர்தல் நடந்தால் அதை காந்திகிரி என்பார்கள். ஆனால், தற்போது தமிழகத்தில் பத்திரிகைகளை மிரட்டுகிறார்கள். தமிழகத்தில் தாதாகிரி அரசு நடக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வேலூரில் பிரசாரம் செய்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,

டெல்லியை சேர்ந்த டிஎம்எஸ் என்ற நிறுவனம் கடந்தாண்டு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் எந்த மாநிலத்தில் வாக்களிக்க பணம் அதிகம் கொடுக்கப்படுகிறது என கேட்டது. அதற்கு மக்கள் கர்நாடகத்துக்கு முதலிடமும், தமிழகத்துக்கு இரண்டாவது இடமும் கொடுத்தனர்.

ஆனால், தற்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் தமிழகம் முதலிடத்துக்கு வந்துள்ளது என்பதை என்னால் சொல்ல முடியும். சாராயம், மணல் கொள்ளை, லாட்டரி, கல்விக் கொள்ளை போன்றவற்றின் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரையிலும், நாகப்பட்டிணத்தில் இருந்து கோவை வரையிலும் தேர்தலில் கொட்டுகிறார்கள்.

இந்த தேர்தலில் ஜனநாயகம், பணநாயகமாக மாறிவிட்டது. கருணாநிதி எப்போதும் பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசுவார். தானும் ஒரு பத்திரிகைகாரன் என சொல்லி கொள்வார்.

ஆனால், உண்மை செய்தியை வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகையை மறைமுகமாக முரசொலியில் கருணாநிதி மிரட்டி எழுதியுள்ளார். அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒரு இடத்தில் தேர்தல் அமைதியாக நடந்தால் அதை காந்திகிரி என்று சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் அதற்கு மாறாக தாதாகிரி நடக்கிறது.

முதல்வர் கருணாநிதி இதுவரை மத்தியில் நான்கு அரசுகளுடன் கூட்டணி வைத்திருந்தார். முதலில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசில் இருந்தார், அடுத்து குஜ்ரால் மற்றும் தேவகவுடாவின் ஐக்கிய முன்னணி அரசில் இடம் பெற்றிருந்தார். மூன்றாவதாக வாஜ்பாயின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்திருந்தார், தற்போது நான்காவதாக மன்மோகனின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் உள்ளார்.

இத்தனை கூட்டணியில் அவர் இருந்தாலும் தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினைகளான காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளை இதுவரையிலும் தீர்த்து வைக்கவில்லை என்றார் ராமதாஸ்.

முன்னதாக அரக்கோணத்தில் பாமக வேட்பாளர் ஆர்.வேலுவை ஆதரித்து ராமதாஸ் பேசுகையில்,

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகும். நான் இதுவரை 37 பாராளுமன்ற தொகுதிகளுக்கு பிரசாரம் செய்துவிட்டு வந்து விட்டேன். எல்லா இடங்களிலும் மிகப்பெரும் வரவேற்பும், பெண்கள் மத்தியில் எழுச்சியும் உள்ளது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஜெ. தீர்வு காண்பார்...

இலங்கை பிரச்சினையில் ஜெயலலிதா நல்ல தீர்வு காண்பதற்காக கடுமையாக முயற்சித்து வருகிறார். தனி ஈழம் பெறுவது மட்டுமே ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஆகும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மத்தியில் நல்ல ஆட்சியை நாம் அமைக்க முடியும். அதன் மூலமாக ஈழப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

கிழக்கு வங்காளத்தில் பிரச்சினை ஏற்பட்ட போது இந்தியாவின் தலையீட்டால் வங்காளதேசம் அமைந்தது. அதேபோல் ஈழப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஜெயலலிதா முயற்சிப்பார். ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஜெயலலிதா தலையிலான இந்த கூட்டணி செவற்றி பெற வேண்டும்.

சாராயம் வேண்டாம்...

உலகத்திலேயே இளம் விதவைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். ஏனெனில் மிகவும் சிறிய வயதிலேயே சாராயத்தை குடித்து விட்டு குடல் வெந்து பலர் இறந்து விடுகிறார்கள். அதனால் தான் நாங்கள் சாராயம் வேண்டாம் என போராடி வருகிறோம்.

ஏழை-எளிய மக்கள், தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிக அளவில் பயன்பெறும் சிறப்பான திட்டங்கள் நம்மிடையே உள்ளது. அரக்கோணம் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ஆர்.வேலு மிகச்சிறந்த அறிவாளி, நல்ல பண்பாளர். முழுநேரமும் மக்கள் சேவையை மட்டுமே செய்து வருகிறார் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X