For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங். ஆட்சியில் இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் போய் விட்டது: அத்வானி

By Staff
Google Oneindia Tamil News

பரமக்குடி: தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருந்தவரை இலங்கை, இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், இலங்கை தன் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்து விட்டது. காங்கிரஸ் அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைதான் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார் பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி.

நேற்று தமிழகத்தில் இரு ஊர்களில் பிரசாரம் செய்தார் அத்வானி. முதலில் ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட பரமக்குடியில் பாஜக வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்துப் பேசினார். பின்னர் சென்னை வந்து வட சென்னை, தென் சென்னை மற்றும் பிற தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

பரமக்குடி, மேலச்சத்திரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அத்வானி பேசியதாவது..

ராமநாதபுரம் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். அவர் இந்த கட்சியில் சேர்ந்த நாளில் இருந்தே மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார். மனித நேயம் மிக்கவராக விளங்குகிறார். பாராளுமன்றத்தில் அவர் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

1952-ம் ஆண்டில் இருந்தே பாராளுமன்ற தேர்தலை நான் பார்த்து வருகிறேன். நேரு முதல் மன்மோகன்சிங் வரை பிரதமராக இருந்து பணியாற்றியவர்களையும் நான் பார்த்து வருகிறேன். 45 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் அவர்கள் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மன்மோகன்சிங், பெயருக்குத்தான் பிரதமராக உள்ளார். சோனியாகாந்திதான் பிரதமரை இயக்கி வருகிறார்.

கடந்த 15 ஆண்டுகாலமாகத்தான் காங்கிரஸ், பாரதீய ஜனதா என்ற இரு கட்சி ஆட்சி முறை நடந்து வருகிறது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் செயல்பட்டு வந்த தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் பிரதமராக இருந்த வாஜ்பாய் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் செயல்பட்டனர். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அப்படியொரு நிலை இல்லை.

பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்டு கட்சியினர் கூட்டணி வைத்தனர். கடைசி வரை அவர்கள் ஆட்சியில் இருந்து விட்டு வெளியேறி விட்டனர். அந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி.

தமிழர்கள் சாவுக்கு காங்கிரஸே காரணம்...

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இலங்கை இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இலங்கை இல்லை. இதனால் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காங்கிரஸ் அரசே காரணம்.

இன்று (நேற்று) காலை வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நேபாளம், இலங்கை பிரச்சினை குறித்து பேசினேன். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவரிடம் உறுதிபட தெரிவித்துள்ளேன்.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் கை ஓங்கி உள்ளது. ராணுவ தலைமை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து இங்குள்ள தமிழர்கள் வேதனைப்படும் அதே வேளையில் நேபாளத்தில் நடப்பது குறித்து உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்களும் வேதனைப்படுகின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை முற்றிலுமாக சீரழிந்து விட்டது என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால் பாரதீய ஜனதா ஆட்சியின்போது வெளியுறவுத்துறையின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.

தற்போது விலைவாசி உயர்வு போன்றவற்றால் இந்தியாவில் வசிக்கும் நடுத்தர மக்களின் மகிழ்ச்சியையும் காங்கிரஸ் அரசு பறித்து விட்டது. பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின்போது 14 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை தற்போது 30 ரூபாயாக உயர்ந்து விட்டது. இதற்கெல்லாம் காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் காரணம் ஆகும்.

பெரிய நிறுவனங்கள் தங்களது நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட பணிகளை சிறிய நிறுவனங்களுக்கு காண்டிராக்ட் கொடுப்பது வழக்கம். அதே போல் மன்மோகன்சிங் அரசு தற்போது அதுபோன்று வெளியுறவுத்துறை கொள்கையை காண்டிராக்ட் கொடுத்து விட்டது. இது மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய விஷயம் ஆகும்.

காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதமும் அதிகரித்து விட்டது. தமிழ்நாடு ஒரு வளமான மாநிலம். அப்படிப்பட்ட மாநிலத்தில் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் ஏன் பின்தங்கிய மாவட்டமாக இருக்க வேண்டும். தவறான ஆட்சி நிர்வாகத்தால்தான் இதுபோன்ற மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. எனவே இந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்ல தாமரைச்சின்னத்தில் வாக்களித்து திருநாவுக்கரசரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் அத்வானி.

சென்னையில் ...

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், நீண்டநாள் நண்பர் சுப்பிரமணியசாமி, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஆகியோருடன் இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதுவரை நடந்த 14 தேர்தல்களுக்கும் தற்போது நடக்க இருக்கும் 15-வது தேர்தலுக்கும் 2 வித்தியாசங்கள் உள்ளன. ஒன்று, என்னுடைய மூத்த தலைவர் வாஜ்பாய் உடல்நிலை சரியில்லாமல் என்னுடன் பிரசாரத்துக்கு வராத நிலை. பாரதீய ஜனதா கட்சியை ஏதோ வடமாநில கட்சி என்று இங்குள்ளவர்கள் நினைத்த நிலை மாறி, கர்நாடகாவில் ஆட்சியை பிடித்து, தற்போது தென்பகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு எழுச்சி ஏற்பட்டுள்ள நிலை மற்றொன்று.

கடந்த ஒவ்வொரு அரசும் ஏதாவது சாதனைகளை நிகழ்த்தி, அதை பெருமைப்பட பேசுவதுண்டு. ஆனால் நடந்து முடிந்த காங்கிரஸ் ஆட்சிதான் எந்த சாதனையையும் செய்யாமல், சொல்வதற்கு ஒரு சாதனையும் இல்லாமல் வெறுமையான ஆட்சியாக நடந்து முடிந்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் அரசின் நிர்வாக திறமையின்மையால்தான் நேபாளம், இலங்கையில் குழப்பங்கள் நேரிட்டுள்ளன.

இலங்கையில் துன்பப்படும் தமிழர்களின் நிலையை நினைத்து மிகுந்த வேதனை அடைகிறேன். அங்கு நடக்கும் சம்பவங்கள் என்னை மனதளவில் அதிகம் பாதித்துள்ளன.

பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியின் போது பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகநாடுகளை அதிரச்செய்தோம். இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சி அளிக்கவில்லை. சீனா, ரஷியா போன்ற நாடுகள் அணுகுண்டு சோதனையை நடத்திய போது வரவேற்ற கம்யூனிஸ்டு கட்சிகள், இந்தியா மேற்கொண்ட சோதனையை எதிர்த்தது ஆச்சரியத்தை அளித்தது.

அதைவிட மிகப்பெரிய ஆச்சரியம், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மன்மோகன்சிங்கும் அதை எதிர்த்ததுதான். இந்தியா அணு விவகாரத்தில் வல்லரசாக வேண்டும் என்பதை எதிர்த்தவர்கள் காங்கிரசார். பொருளாதாரத்தடை வரும், மக்கள் நலிவுறுவார்கள் என்று சொன்னார். ஆனால் அனைத்தையும் எதிர்கொள்ளும் சக்தி, பாரதீய ஜனதா அரசிடம் இருந்ததால் பொருளாதார நிலையை சமாளித்தோம்.

கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவைவிட 7 இடங்களையே அதிகம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியை அதன் நேச கட்சிகள் ஆதரித்தது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால் பாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக காங்கிரசுக்கு எதிரிடையாக இருந்த கம்யூனிஸ்டு கட்சிகள் அப்போது சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக்கொண்டன.

இந்த சந்தர்ப்ப கூட்டணியின் விளைவாகத்தான் அதற்கான விலையை இந்தியா கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

பாகிஸ்தான் விவகாரத்தில் வாஜ்பாய் மிகவும் உறுதியாக இருந்ததால்தான், அப்போதைய அந்நாட்டு அதிபர் முஷரப், இந்தியாவுடனான தனது நிலையை மாற்றிக் கொண்டார். பாகிஸ்தானில் தீவிரவாதத்தை செயல்படவிட மாட்டேன் என்று அறிவித்தார்.

நேர்மை, மேம்பாடு, பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவைதான் பாரதீய ஜனதாவின் நோக்கம். பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால், 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக அமையும். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார் அத்வானி.

கூட்டத்தில், தென் சென்னை தொகுதி வேட்பாளரான பாஜக தலைவர் இல.கணேசன் பேசுகையில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு இருந்தது. அதன் பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

மீண்டும் அத்வானி பிரதமராக வந்தால் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். பிரதமராகும் தகுதி அத்வானிக்கு உள்ளது. அவர் பிரதமராக வந்தால் பாரதத்தாய் உலக அரசின் சிம்மாசனத்தில் அமருவாள் என்றார்.

கூட்டத்தில் சரத்குமாரும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டு ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கிறீர்கள் என்று சிலர் கேட்டார்கள். பா.ஜ.க.வுடன் தி.மு.க., அ.தி.மு.க. எல்லாம் முன்பு கூட்டணி வைத்தது. ஆனால், நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க. இருக்கும்போது, முதல்-அமைச்சர் கருணாநிதி, நாங்கள் இருக்கும் கூட்டணியில் மதவாதம் இருக்காது என்று கூறினார். அதேபோல், நாங்கள் இருக்கும் கூட்டணியிலும் மதவாதம் இருக்காது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X