For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக பரிந்துரைத்த பெயர்கள்-பிரதமர் ஏற்றார்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திமுக பரிந்துரைத்த பெயர்களை பிரதமர் ஏற்றுக் கொண்டதால் மத்திய அமைச்சரவையில் சேருவோம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஆசியாவின் ஜோதி' நேரு எழுதிய வரலாற்று புத்தகத்தில் ராமாயணக்கதை என்பது ஆரிய-திராவிட போராட்டமே என்று குறிப்பிட்டிருப்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்னமும் கூட இந்திய அரசியலையும், சிறப்பாக தமிழக அரசியலையும் உற்று நோக்கும் யாருக்கும் நேருவின் அந்த கூற்றில் உள்ள சரித்திர உண்மை சரியானது என்றே புலப்படும்.

இப்போதும் திராவிட பகைவர்கள் நேரடியாக பகையை வெளிப்படுத்தாமல் திராவிட' என்ற பெயரில் ஒளிந்து கொண்டும், மறைந்திருந்தும் கணை தொடுத்து வாலி வதம்' நடத்த முனைவதில் ஈடுபட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

அந்த சூழ்ச்சி யுத்தத்திற்கு அவர்களுக்கு ஆயுதங்களாக வாய்த்திருப்பது மீடியா' எனப்படும் அவர்களது பாசறையின் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என்று சொன்னால் அது மிகையல்ல, முற்றிலும் உண்மையே ஆகும்.

உதாரணமாக நடந்து முடிந்த இந்த பதினைந்தாவது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும் வரையில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு பூஜ்யம்' தான் கிடைக்கும் என்றும், மிஞ்சிப் போனால் ஏழெட்டு இடங்கள் மட்டுமே கிடைக்குமென்றும் டெல்லியில் ஜெயலலிதா தலைமையில் அல்லது அவர் விரும்புகிற வகையில் மத்திய அரசு அமையும் என்றும்,

தமிழ்நாட்டிலே நேற்று வரையில் கெளரமாக பத்திரிக்கை தொழில் நடத்தி வந்த ஒருவர் ஏதோ சூளுரை எடுத்துக் கொண்டதை போல டெல்லியிலே முகாமிட்டு அங்குள்ள மீடியா'க்களையெல்லாம் தனது வயப்படுத்திக்கொண்டு திமுக கூட்டணிக்கு எதிரான விஷமத்தனமான பிரசாரத்தை தொடர்ந்து செய்து வந்தார்.

ஆனால் அவரது முகமும், அவர் பேச்சை கேட்டு திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி பொய் பிரசாரம் செய்து வந்த டெல்லி மீடியாக்கள் சிலவற்றின் முகமும் கறுத்து போகிற அளவுக்கு தேர்தல் முடிவுகள் வெளியாயின. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய நாடு முழுவதும் மத சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்டமும் உருவாயிற்று.

இதையொட்டி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்பது குறித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் என்னை சந்தித்து, காங்கிரஸ் இந்த முறை கையாளவிருக்கும் புதிய பார்முலா' குறித்து எடுத்துரைத்த போது, அந்த புதிய பார்முலா' பற்றி கழக செயற்குழுவிலோ, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களையோ சென்னை சென்று கலந்து கொண்டு அதையொட்டி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன்.

அதன் பின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமரும் திமுக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமரின் விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களோடு கலந்து பேசி, கழகத்தின் சார்பான அமைச்சர்களின் பட்டியலை தெரிவித்ததின் பேரில், பிரதமர் நேற்று மாலையில் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கழகத்தின் சார்பில் பரிந்துரைத்த பெயர்கள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளதாகவும், பதவியேற்பு விழாவிற்கு அவர்கள் வரவேண்டுமென்றும் கூறியுள்ளார்.

பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்ததோடு, பதவியேற்கவிருக்கும் திமுக அமைச்சர்கள் அனைவரும் புறப்பட்டு டெல்லி வருவார்கள் என்றும் கூறினேன்.

காங்கிரசுக்கும், திமுகவிற்கும் இடையே அமைச்சரவையில் பங்கேற்பதின் காரணமாக பிரச்சனை ஏற்பட்டு விடும், அதிலே குளிர் காயலாம் என்றெல்லாம் எண்ணியவர்களின் நோக்கம் நிறைவேறாத அளவிற்கு ஒரு சுமுக முடிவு காங்கிரஸ் தலைமையினாலும், பிரதமராலும் உருவாக்கப்பட்டுள்ளமைக்காக மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல் முறைகள் மேலும் மேலும் வெற்றிகரமாக தொடர்ந்திட, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X