For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழம் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது- ரணில்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் மத்தியில் ஈழம் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அந்த எண்ணமே அவர்களது மனதிலிருந்து நீக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.

மேலும், ஈழம் என்ற கொள்கையை மக்கள் மனதிலிருந்து அரசியல் ரீதியாக அகற்றத் தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் எனவும் அது கோரியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தயாஸ்ரீ ஜெயசேகரா கூறுகையில், இப்போது விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவரும் ஒழிக்கப்பட்டு விட்டனர். இப்போது ஈழம் என்ற கொள்கையை வீழ்த்த வேண்டிய தருணம் வந்துள்ளது. தனித் தமிழ் ஈழம் என்ற கொள்கையை தமிழர்கள் மனதிலிருந்து விலக்கினால் மட்டுமே முழுமையான வெற்றியாக கருத முடியும்.

அரசியல் தீர்வுகள் மூலமாக இதை சாதிக்க அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் தமிழர்களையும் இந்த வெற்றியில் ஒரு அங்கமாக்க முடியும்.

ஈழம் என்ற வார்த்தையை வைத்திருக்கும் கட்சிகள் அதை நீக்க வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள்தான் ஈழம் என்ற எண்ணத்தை முதன் முறையாக உருவாக்கி மக்கள் மனதில் பதிய வைத்தவர்கள். எனவே இந்த வார்த்தையை முதலில் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஈழம் என்ற மண்ணில் தாங்கள் வாழ்வதாகவும், தங்களுக்கென தனிக் கொடி உள்ளதாகவும் மக்களை மாற்றி எண்ண வைத்தது புலிகள்தான். எனவே இந்த சிந்தனையை அரசியல் ரீதியாக துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரின் மனதிலும் இலங்கையர்கள் என்ற ஒரே எண்ணம் மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் ஈழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழம் புரட்சிகர மாணவர் கழகம் என பல்வேறு அமைப்புகள் ஈழம் என்ற பெயரைத் தாங்கி செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல முன்பு கருணா ஆரம்பித்த அமைப்பின் பெயரும் கூட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில்தான் இன்னும் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நம்முடைய முக்கிய வியாபாரக் கூட்டாளிகள். அந்த நாடுகளைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார் தயாஸ்ரீ.

அப்பாவித் தமிழ் மக்கள் இனவெறிப் படுகொலைக்கு ஆளானதை இந்த நாடுகள் மிகக் கடுமையாக கண்டித்தன. அதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த நாடுகளுடன் முறைக்கும் போக்கில் நடந்து கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சமீபத்தில் பேட்டி அளித்திருந்த ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை வந்து பாருங்கள் என்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் பிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் திறந்து விட்டு விடுங்கள் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், தங்களுடைய வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்ட தமிழர்களில் 90 சதவீதம் பேரை இந்த ஆண்டு இறுதிக்குள் அவரவர் வீடுகளில் அரசு குடியமர்த்திவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X