For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'சபாநாயர்'-நாளை போட்டியின்றி தேர்வாகிறார் மீரா

By Staff
Google Oneindia Tamil News

Meira Kumar
டெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு மீரா குமாரின் சார்பில் காங்கிரஸ் கட்சி இன்று மனு தாக்கல் செய்ததது. அவர் நாளை போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

இன்று மீரா குமாருக்கு ஆதரவாக 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் வேட்பு மனுவை காங்கிரஸ் தலைவர் சோனியா முன் மொழிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வழி மொழிந்தார்.

மற்றொரு வேட்பு மனுவை பாஜக எதிர்க்கட்சித் தலைவரான அத்வானி முன்மொழிய, சுஷ்மா சுவராஜ் வழி மொழிந்தார்.

அதே போல தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவார், பிரபுல் படேல், சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், சைலேந்திர சிங் யாதவ், பிஜூ ஜனதா தளம் தலைவர்கள் அர்ஜூன் கரன் சேத்தி, பி.மக்தப் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தவைவர் லாலு பிரசாத் யாதவ், பரூக்அப்துல்லா, இ.அகமது ஆகியோரும் மீரா குமாருக்காக மனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்பு மனுக்களை மக்களவை செயலாளர் பிடிடி ஆச்சாரியிடம் மீரா குமார் வழங்கினார். அப்போது அவருடன் திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை பெண் யாரும் சபாநாயகராக இருந்ததில்லை. இந் நிலையில் முதன் முறையாக மீரா குமார் சபாநாயகராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

மேலும் இந்திய அரசியல் வரலாற்றில் அனைத்துக் கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முதல் நபரும் மீரா குமார் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீரா குமார் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன்ராமின் மகளான இவர் சமீபத்தில் நீர்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந் நிலையில் இவருக்கு சபாநாயகர் பதவி வழங்க காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்ததையடுத்து தனது அமைச்சர் பதவியை மீரா குமார் ராஜினாமா செய்தார்.

சபாநாயகர் பதவிக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான மீரா குமாரை நிறுத்தியதால் அவருக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பு எழவில்லை.

இதன்மூலம் சபாநாயகர் தேர்வை எளிதாக்கிய சோனியா, மீரா குமாருக்கு இந்தப் பதவியைத் தருவதன் மூலம் உத்தரப் பிரதேச முதல்வரும் நாட்டின் முக்கிய தலித் தலைவருமான மாயாவதிக்குக்கும் 'செக்' வைத்துவிட்டார்.

எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு மீரா குமார் நாளை போட்டியின்றி தேர்வாகவுள்ளார்.

64 வயதான மீரா குமார் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரியாவார். பல்வேறு நாடுகளில் இந்தியத் தூதரக அதிகாரியாக பணியாற்றியவர். 1985ம் ஆண்டு ஐஎப்எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்த இவர் தொடர்ந்து 5 தேர்தல்களில் வென்றுள்ளார்.

இவர் மிகச் சிறந்த துப்பாக்கிச் சுடும் வீராங்கனையும் ஆவார்.

இன்று தனக்காக காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்த பின் நிருபர்களிடம் பேசிய மீரா குமார், இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். அதுவும் அனைத்துக் கட்சிகளும் என் பெயரை வழி மொழிந்து ஆதரித்தது மிக அழகிய அரசியல் நிகழ்வு என்றார்.

துணை சபாநாயகர் பாஜகவின் கரியா முண்டா:

துணை சபாநாயகரும் நாளையே தேர்வு செய்யப்படவுள்ளார். இந்தப் பதவியை பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்துவிட்டது.

துணை சபாநாயகராக மூத்த பாஜக தலைவர்களான கரியா முண்டா, ஸ்ரீவாத நாயக், சுஷ்மா சுவராஜின் பெயர்கள் அடிபட்டன. இறுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காரியா முண்டாவை பாஜக இறுதி செய்துள்ளது. அவரும் போட்டியின்றி நாளையே துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

இவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார். 6 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 72 வயதாகும் கரியா முண்டா மொரார்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றவர் ஆவார்.

மீரா குமாருக்கு கருணாநிதி வாழ்த்து:

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில்,

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண்மணி மக்களவையின் தலைவராகப் போட்டியெதுவுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்ற செய்தி நம் செவிகளிலெல்லாம் தேனாகப் பாய்கிறது.

அதுவும் அந்த பெண்மணி மீராகுமார், நீண்டகாலம் மத்திய அமைச்சரவையிலே பங்கு பெற்றுப் பெரும்பணியாற்றிய தன்னிகரற்ற தலைவர் பாபு ஜெகஜீவன்ராமின் திருமகள் என்பது, நமது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.

நாடாளுமன்றத்திலும், மாநிலங் களின் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு சட்ட வடிவம் பெறப் போகிற இந்த அருமையான காலகட்டத்தில்,

அதற்கு முன்னோடியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவராக சோனியா பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த நல்ல நேரத்தில் ஒரு பெண்மணி இந்தியத் திருநாட்டின் மக்களவைக்குத் தலைவராவது நாம் அனைவரும் வரவேற்றுப் பாராட்டி மகிழக்கூடிய நிகழ்வாகும் என்று கூறியுள்ளார்.

இன்றும் எம்பி்க்கள் பதவியேற்பு:

இந் நிலையில் இன்று இரண்டாவது நாளாக மக்களவையில் எம்பி்க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ரித்தீஸ் உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.

நேற்று ப.சிதம்பரம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களும் எம்பிக்களும் தமிழிலேயே பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X