For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழ்க வசவாளர்கள்'-கருணாநிதி 'வாழ்த்து'!

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: எதிர்க் கட்சிகள் தங்களது தேர்தல் தோல்விக்கு எங்களைக் குறை கூறாமல் தங்கள் தவறை உணர்ந்து, முடிந்தால் அதைத் திருத்திக் கொண்டு நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தனது 86வது பிறந்த தினத்தையொட்டி சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

எனக்கு 86 வயதாகிவிட்டது என்று எச்சரித்து சுட்டிக் காட்டுகின்ற விழாவாக இது நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் நடப்பதற்கு முன் இதே தீவுத்திடலில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அம்மையாரும், நானும் உரையாற்றியபோது எந்த உறுதிமொழிகளைத் தந்தோமோ, எத்தகைய நன்மைகள் தமிழகத்துக்கு கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னாமோ, அவைகளையெல்லாம் இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

எத்தனை திட்டங்களை நமது மாநிலத்துக்கு மத்தியில் உள்ள அரசு வழங்கியிருக்கிறது என்ற பட்டியலை இந்த மேடையில் நான் வெளியிட்டேன். இவற்றில் ஒன்றிரண்டு முற்று பெறாமல் இருக்கும் சேது சமுத்திரம் போன்ற திட்டங்களை, நீங்கள் மீண்டும் எங்களை ஆதரித்து பொறுப்பில் அமர்த்தினால் அதையும் நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற உறுதியை தந்தேன்.

அந்த உறுதியை நிறைவேற்றுகிற வகையில், நீங்கள் தமிழகத்தில் திமுகவுக்கும், இந்திய அளவில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் பேராதரவை தந்து ஒரு நிலையான ஆட்சியை, நேர்மையான மதச்சார்பற்ற ஆட்சியை அமைத்துத் தந்திருக்கிறீர்கள்.

இதனால் இனி மதவாதம் தலைதூக்காது. மதச்சார்பு தலை நீட்டாது. மதவெறிக்கு இந்தியாவில் இடமில்லை. அதை நாம் துரத்தி அடிப்போம் என்ற சூளுரையோடு இந்த நாடு அனைத்துலக நாடுகளைப் பார்த்து, கம்பீரமாக தலை நிமிர்த்தக் கூடிய வாய்ப்பை நீங்கள் வழங்கியிருக்கிறீர்கள்.

அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு திமுக தலைமையில் உள்ள கூட்டணிக்கு பெருவாரியான இடங்கள் கிடைத்திருக்கின்றன. நாம் 4 இடம் கூட வரமாட்டோம். 3 இடம் கூட ஜெயிக்கமாட்டோம். ஒன்று கூட வரமாட்டோம் என்று எண்ணி, தமிழகத்தில் மட்டுமல்லாமல், வடக்கே உள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் உள்ள பத்திரிகைகளை எழுதச் செய்து இந்திய நாட்டு மக்களை குழப்பி, குறிப்பாக எங்கே யார் வந்தாலும் வராவிட்டாலும்,

தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள அணி வந்துவிடக்கூடாது என்பதற்கு அரும்பாடுபட்டு, வாக்குகள் எண்ணி முடிக்கப் போகும் நேரத்தில், நாம் ஏமாற்றப் பார்த்தோம், கடைசியில் ஏமாந்துவிட்டோம் என்று தலையில் கை வைத்துக் கொண்டது யார், யார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

அவர்களுடைய பெயர்களை இங்கே சொல்ல விரும்பவில்லை. குறிப்பால்தான் உணர்த்த முடியும். என்னை விட நீங்கள் புத்திசாலிகள் என்ற காரணத்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

நான் தலைவராக இருக்கும் இயக்கத்தை அழித்து ஒழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்களே ஏன்?. என்ன காரணம்?. அவர்களுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?. அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு நான் செய்த தீங்கு தான் என்ன?. எதுவும் இல்லை.

நான் இருப்பதே அவர்களுடைய சமுதாயத்துக்கு கேடு. நான் பொறுப்புக்கு வருவதற்கு அவர்களது சமுதாயத்துக்கு அழிவு என்று கருதுகிறார்கள், அது ஒரு கற்பனையான கருத்து.

எந்த சமுதாயத்தையும் அழிக்க வேண்டும், பழிவாங்க வேண்டும், வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு கிடையாது. ஏனென்றால் நாங்கள் அப்படி வளர்க்கப்பட்டவர்கள்.

வாழ்க வசவாளர்கள்' என்று தான் அண்ணா எங்களுக்கு சொல்லி கொடுத்தார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் தம்பி' என்றுதான் அண்ணா எங்களுக்கு கற்றுத் தந்தார். பழிவாங்க பழக்கப்பட்டவர்கள் அல்ல நாங்கள். அதனால்தான் சொல்லுகிறேன்.

தேர்தல் முடிந்து, ஒரு வாரகாலத்துக்குள் இன்னும் சொல்லப் போனால், தேர்தலைப் பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக நான் இருந்தபோது, பத்திரிகையில் வந்த செய்தி, தொலைக்காட்சியில் வந்த செய்தி, மத்திய அரசு, அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப் போகிறது என்ற செய்தி.

உடனடியாக என்னுடைய செயலாளர் மூலம் நிதியமைச்சரையும், நிதித்துறைச் செயலாளரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டால், அதை பின்பற்றி, மாநில அரசு அலுவலருக்கும் ஊதிய உயர்வை அரசு அளிக்கும் என்று மருத்துவமனையில் இருந்தபடி செய்தியை வெளியிடச் சொன்னேன்.

தேர்தல் முடிந்த பிறகும், பெரும்பான்மை பெற்று, தேர்தலில் பெருவெற்றி பெற்றபோதும் கொடுத்த வாக்குறுதியை மறக்கவில்லை. இப்போது அவர்களது ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

தேர்தல் முடிந்து விட்டதே, நமது அணி தான் வெற்றி பெற்றுவிட்டதே, வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமா என், என்று அதைப்பற்றி கவலைப்படாத இறுமாப்பான எண்ணத்தோடு நாங்கள் செயல்படவில்லை.

இப்போது சொல்லுகின்ற என்ன உறுதியானாலும், இதுபோன்ற மேடைகளில் அள்ளித் தெளிக்கின்ற எந்த வாக்குறுதியானாலும் அவைகளை நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டக் கூடிய இயக்கம்தான் திமுக என்பதை நான் மீண்டும் மீண்டும் உறுதியோடு சொல்கிறேன்.

எங்களுக்கு வெற்றியினால் ஆணவம் ஏற்படுவதுமில்லை. தோல்வியினால் துவண்டு விடுகிறவர்களுமல்ல. நாங்கள் தோற்றுப் போனதும் அதற்கான காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பவர்களுமல்ல.

பெட்டியை உடைத்து விட்டார்கள், இலைக்கு போட்டால் சூரியனுக்கு விழுகிறது, இப்படியெல்லாம் நாங்கள் கற்பனை செய்து மக்களை தொடர்ந்து ஏமாற்ற விரும்பவில்லை. ஏமாற்றும் எண்ணமே எங்களுக்கு என்றுமே கிஞ்சித்தும் ஏற்பட்டதில்லை.

இந்தத் தேர்தலிலே பெருந்தோல்வி அடைந்த, திமுகவுக்கு எதிரான அந்த அணியில் உள்ள கட்சிகளுக்கு, கட்சிகளின் தலைவர்களுக்கு, கட்சியின் இளைஞர்களுக்கு கண்ணியத்தோடும் கனிவோடும் வேண்டுகோள் தோரணையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இதே சென்னையில் 1991ம் ஆண்டு துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட போது, இந்தியாவின் இளம் தலைவர் ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூரிலே கொல்லப்பட்டார்.

அதன் விளைவாக அன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் களம் சின்னாபின்னாமாயிற்று.

தமிழகம் முழுவதும் நாம் போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வி. துறைமுகம் தொகுதியில் நான் வெற்றிபெற்றேன். அதற்காக மோசம் நடந்துவிட்டது என்று அன்றைக்கு நான் சொன்னதுண்டா? ஓட்டை மாற்றி போட்டுவிட்டார்கள் என்று சொன்னதுண்டா?

உதய சூரியன் சின்னத்தில் முத்திரை குத்தினால் அது இலைச் சின்னத்தில் விழுந்து விடுகிறது என்று நான் ஒப்பாரி வைத்ததுண்டா? இல்லை. நான் ஜனநாயகவாதியான, மக்களாட்சித் தத்துவத்தை நாட்டுக்கு, உலகுக்கு மொழிந்த அண்ணாவின் தம்பி என்ற காரணத்தால் மக்களுடைய தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்று ஏற்றுக் கொண்டேன்.

ஜனநாயகம், வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் காட்டுத் தீ என்றார் அண்ணா. காட்டுத் தீ நமக்குத் தேவையில்லை. வீட்டு விளக்குதான் தேவை. அந்த ஜனநாயகத்தில் எந்த தீர்ப்பு கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பகை பாராட்டாமல் வீணான விரோதத்தைக் காட்டாமல் ஒன்றுபட்டு தொடர்ந்து செயல்பட வேண்டும்.

இந்த நாளில் நான் என் பிறந்தநாள் செய்தியாக உங்களுக்கல்ல, மாற்றுக் கட்சி நண்பர்களுக்கு, மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு நான் விடுக்கின்ற வேண்டுகோள்...

நாம் நம்முடைய பாதையில் எப்படி நடந்தோம், அதில் என்ன தவறு ஏற்பட்டது, ஒருவேளை தவறை உணர்ந்துகொள்ள முடிந்தால் அதைத் திருத்திக் கொள்வோம், திருத்திக் கொண்டு நல்லமுறையில் நடப்போம். நமக்காக அல்ல, ஒரு கட்சியை வளர்ப்பதற்காக அல்ல, எல்லா கட்சிகளும் சேர்ந்து நாட்டை வளப்படுத்துவதற்காக, நாட்டு மக்களை வாழவைப்பதற்காக என்ற அந்த முடிவை மேற்கொள்வோம் என்பதுதான்.

இதுதான் எனது பிறந்த நாளில் எல்லா கட்சி நண்பர்களுக்கும் நான் விடுக்கின்ற செய்தி என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X