For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேயரின் 'திக் விஜயம்'-3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மழை நீர் வடிகால் பணிகளை அதிரடியாக சோதனை செய்த சென்னை மேயர் பணிகளை கவனக் குறைவாகவும், தாமதமாகவும் செய்து வந்த மூன்று அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிக்க எழும்பூர் ரயில்வே நிலையத்துக்கு எதிரே இருக்கும் காந்தி-இர்வின் சாலையில் மாநகராட்சியினர் மழை நீர் வடிகால் கால்வாய் ஒன்றை கட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு துவக்கப்பட்ட இந்த பணி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால், பணிகள் படுமந்தமாக நடந்து வருவதால் கால்வாய்கள் அப்படியே திறந்து கிடக்கிறது. இதில் மழை நீரும், மற்ற நீர்களும் தேங்கி சாக்கடை போல் காட்சியளிக்கிறது.

இதில் கொசுக்களும், பூச்சிகளும் மொய்ப்பதாலும், சாக்கடை நீரின் துர்நாற்றம் காரணமாகவும் அந்த பக்கமாக செல்வதை மக்கள் முடிந்தவரை தவிர்த்து வருகின்றனர்.

இது குறித்து கேள்விபட்ட சென்னை மேயர் சுப்பிரமணியன் இன்று காலை அப்பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். அவர் வருவதை எப்படியோ தெரிந்து கொண்ட அதிகாரிகள் கால்வாயை அவசரம் அவசரமாக மூடினார்கள். ஆனால், கால்வாய் முற்றிலுமாக மூடப்படும் முன்னதாக அங்கு மேயர் வந்துவிட்டார்.

அவசர கோலத்தில் அறைகுறையுமாக நடக்கும் பணிகளை பார்த்த அவர் அதிகாரிகளிடம் கடந்த நவம்பர் மாதம் இந்த பணிகளை நான் பார்வையிட்டு சென்றேன். பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டிய இந்த பணிகளை நான்கு மாதம் கடந்த பின்னரும் இன்னும் ஏன் முடிக்கவில்லை என கேள்வி கேட்டார்.

அதற்கு அதிகாரிகள், பெரிய மரம் ஒன்றை வெட்ட வேண்டியிருந்தது. அதனால் பணிகள் பாதிக்கப்பட்டது. வேலை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. விரைவில் முடிந்துவிடும் என்றனர்.

பின்னர் மேயர் கொசு மொய்த்த சாக்கடை நீரை காட்டி, உங்கள் வேலையின் லட்சணத்தை பார்த்தீர்களா? இதை அப்புறப்படுத்த என்ன செய்தீர்கள்? இதுவே உங்க வீடுன்னா சும்மா விட்டுவிடுவீர்களா என பொரிந்து தள்ளிவிட்டார்.

இதையடுத்து அவர் கிளம்பிவிடுவார் என அதிகாரிகள் நினைத்த வேளையில் அவர் தூரத்தில் பேருந்து நிறுத்தத்தின் கூரை கிழிந்து தொங்குவதை பார்த்தார். இந்த கூரையை பார்ப்பவர்கள் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்லும் சிங்கார சென்னையை பற்றி என்ன நினைப்பார்கள் என அதிகாரிகளிடம் கேட்டார்.

அருகில் ஒரு இடத்தில் பட்டப்பகலில் பொது மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிக்கப்படுவதை பார்த்த அவர் அதற்கு யார் அனுமதி கொடுத்தது என கேட்டார். என்ஜினியர்கள் அனுமதி வாங்கவில்லை என கூறியதை அடுத்து அவர்களுக்கு செமத்தியாக டோஸ் கொடுத்துவிட்டு சென்றார்.

பேக்கரிக்கு சீல்...

அப்பகுதியில் சிறிது தூரத்தில் பேக்கரி ஒன்றில் இருந்து கழிவு நீர், சாலைக்கு குழாய் மூலம் வந்து கொண்டிருப்பதை கவனித்த அவர் கடையை உடனே மூடி சீல் வைக்க உத்தரவிட்டார்.

பின்னர் இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கமிஷ்னரிடம் கூறினார். இதையடுத்து மழை நீர் வடிகால்வாய் உதவி செயற்பொறியாளர் சரவண பவானந்தம், 105வது வட்ட இளநிலை பொறியாளர் விக்டர் ஞானராஜ், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் பணியில் கவனக்குறைவாக இருந்த காரணத்துக்காக செயற் பொறியாளர் முத்து இருளப்பன், பகுதி செயற் பொறியாளர் வரதராஜன் ஆகியோரிடம் மேயர் விளக்கம் கேட்டுள்ளார்.

பின்னர் மேயர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த கால்வாய்கள் போர்க்கால அடிப்படையில் இன்னும் 15 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்படும். பயணிகள் நிழற்குடைகள் அழகிய வடிவமைப்புடன் உடனடியாக நிறுவப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X