For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் வழியாக கனடாவுக்கு தப்பினர் பிரபாகரன் மனைவி-இளைய மகன்!?

By Staff
Google Oneindia Tamil News

Prabakaran with Family
டெல்லி: போரில் கொல்லப்பட்டு விட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பத்திரமாக, உயிருடன் கனடாவில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்திய உளவு அமைப்பான ரா உறுதி செய்துள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

முன்னதாக பிரபாகரனோடு சேர்த்து அவரது மனைவி மதிவதனி, மூத்த மகன் சார்லஸ் அந்தோணி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை கொன்று தீர்த்து விட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், உடல்களைக் காட்டவில்லை.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போர் குறித்து இந்த நிமிடம் வரை இலங்கை அரசு பரப்பி வந்த, இலங்கை ராணுவம் தெரிவித்து வந்த தகவல்களே செய்திகளாக வெளியாகி வருகின்றன.

தனிப்பட்ட முறையில் இந்த செய்திகளை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை. காரணம், பத்திரிக்கையாளர்களையும், வேறு எவரையும் போர் பாதித்த பகுதிகளுக்கு இந்த நிமிடம் வரை இலங்கை அரசு அனுமதிக்காததே.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை அறிவித்த ராணுவம் அடுத்தடுத்து முரண்பாடான செய்திகளைக் கூறியது. பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வெளியான சில நாட்களில் அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை செய்தி பரப்பியது. இதை வட இந்திய ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டன.

இருப்பினும் அந்த மரணச் செய்தியை இலங்கை ராணுவத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. பிரபாகரன் உடல் என்று அவர்கள் காட்டியதிலும் கூட இன்னும் கூட சர்ச்சை ஓயவில்லை.

ஆரம்பத்தில் பிரபாகரன் இறந்து விட்டதாக வெளியான செய்தியை ஏற்க மறுத்த விடுதலைப் புலிகள் சமீபத்தில் ஒட்டுமொத்தமாக அதை ஏற்றுக் கொண்டனர். இருப்பினும் இன்னும் கூட பிரபாகரன் ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உயிருடன்தான் இருப்பதாக நம்பிக்கை நிலவி வருகிறது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு பிரபாகரனும், அவரது இளைய மகன் பாலச்சந்திரனும் ராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக யாழ்ப்பாணம் பேராசிரியர்கள் குழு ஒன்று தகவல் வெளியிட்டது. இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை உடனடியாக இலங்கை அரசும், ராணுவமும் மறுத்து விட்டன.

இப்படி பிரபாகரன் குடும்பம் குறித்து தொடர்ந்து முரண்பட்ட, குழப்பமான தகவல்களே வெளியாகி வந்தன. பிரபாகரனின் தாயாரும், தந்தையும் மட்டும் உயிருடன் இருப்பது மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருந்து வருகிறது. இருவரும் வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாமில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை ராஜபக்சேவே தெரிவித்துள்ளார்.

ஆனால் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் குறித்து எந்தத் தகவலும் தெரியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, அவரது இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பத்திரமாக இருப்பதாகவும், கனடாவில், பிரபாகரனின் சகோதரி வினோதினியின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை இந்திய உளவு அமைப்பான ராவும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

துவாரகா ஏற்கனவே அயர்லாந்தில் வசித்து வருகிறார். அவர் இலங்கைக்கு வந்து நீண்ட காலம் ஆவதாக கூறப்படுகிறது. எனவே பிரபாகரன் குடும்பத்தினர் பத்திரமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

எப்படித் தப்பினார் மதிவதனி..

கடந்த ஆண்டு புலிகளுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது இலங்கை ராணுவம். தங்கள் தரப்புக்கு நெருக்கடி அதிகரித்து வருவதை உணர்ந்த பிரபாகரன், தானும், தனது மூத்த மகன் சார்லஸும் மட்டும் போர் முனையில் இருப்பது எனவும், மற்றவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவது எனவும் தீர்மானித்தார்.

விடுதலைப் புலிகளின் கொள்கைப்படி, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே போர் களத்தில் இருக்க வேண்டுமாம். மற்றவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவது வழக்கமாம்.

அந்த அடிப்படையில் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் தானும், தனது குடும்பத்தின் சார்பில் தனது மூத்த மகனும் களத்தில் இருப்பது என தீர்மானித்தார் பிரபாகரன்.

ஆனால் இதை மதிவதனியும் மற்றவர்களும் ஏற்கவில்லை. நாங்களும் உங்களுடனேயே இருந்து விடுகிறோம். எங்களைப் பிரிக்க நினைக்காதீர்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அதை பிடிவாதமாக நிராகரித்து விட்டாராம் பிரபாகரன். நாங்கள் இருவர் மட்டும் இருப்போம், நீங்கள் போய் விடுங்கள் என்று கூறிய அவர் அத்துடன் நில்லாமல், அவர்கள் கிளம்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வன்னிப் பகுதியிலிருந்து மதிவதனியும், துவாரகா, பாலச்சந்திரனும் கடல் மார்க்கமாக இந்தோனேசியாவுக்குத் தப்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்து அயர்லாந்து சென்றுள்ளனர். அங்கு துவாரகா, பாலச்சந்திரன் தங்கிக் கொண்டனராம். ஆனால் மதிவதனி மீண்டும் வன்னிக்கே திரும்பி விட்டாராம்.

இதை எதிர்பார்க்காத பிரபாகரன் அவரது விருப்பத்திற்குத் தடை போட விரும்பாமல் விட்டு விட்டார்.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே ராணுவத்தின் முற்றுகை அதிகரிக்கத் தொடங்கியது. இனியும் மனைவி இங்கிருப்பது சரியல்ல என்று முடிவு செய்தார் பிரபாகரன்.

இதையடுத்து மதிவதனியை தப்ப வைக்க ஏற்பாடுகள் தொடங்கின. இம்முறை கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்குப் போக முடியாத நிலை. இதையடுத்து தமிழகம் வழியாக தப்ப வைக்க முடிவு செய்யப்பட்டது.

வேதாரண்யம் வந்தார்...

கடந்த ஜனவரி மாதம் மதிவதனிக்கு திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து பாஸ்போர்ட் எடுக்கப்பட்டது. வசந்தி என்ற பெயரிலும், கணவர் பெயர் மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, கோட்டைப்பட்டனம் என்ற முகவரியில் மதிவதனி புகைப்படம் ஒட்டி இந்த பாஸ்போர்ட் எடுக்கப்பட்டது.

உரிய முறையிலான ஆவணங்களையும் (வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம்) ஆகியவற்றையும் இணைத்துள்ளனர்.

இதையடுத்து பிரபாகரனுக்குத் தகவல் போனது. இதைத் தொடர்ந்து தனது நம்பிக்கைக்குரிய சில தளபதிகளை அழைத்த பிரபாகரன், அவர்களிடம் மதிவதனியை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை ஒப்படைத்தார்.

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தப்பினார்...

மே மாதம்தான் மதிவதனி வன்னியிலிருந்து தப்பி தமிழகம் வந்தார். கடல் மார்க்கமாக அதி விரைவுப் படகு ஒன்றில் மதிவதனியுடன், புலிகள் இயக்கத்தினர் வேதாரண்யம் வந்து சேர்ந்தனர்.

அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் மே 10ம் தேதியன்று ஹாங்காங் போயுள்ளார். ஹாங்காங்கில் இருந்து கனடாவுக்கு தப்பினார் மதிவதனி.

அங்கு நேராக பிரபாகரனின் சகோதரி வினோதினியின் வீட்டுக்குப் போய் விட்டார் மதிவதனி. அங்கு வந்து சேர்ந்த மதிவதனியை மிக மிக ரகசியமான இடத்திற்கு மாற்றி விட்டார் வினோதினி.

தற்போது மதிவதனி, அவரது இளைய மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா ஆகியோர் மிக மிக பத்திரமான, ரகசியமான இடத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையான ராவும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாம்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மதிவதனி கனடா போய்ச் சேர்ந்த நாளன்றுதான் (மே 18) பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை ராணுவம் வெளியிட்டது. மேலும், மதிவதனியும் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் கூறியது.

மதிவதனி மற்றும் மகன், மகள் ஆகியோர் உயிருடன் இருப்பதை ராவே உறுதிப்படுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்போர்ட் அலுவலகத்தில் விசாரணை...

இந் நிலையில் மதிவதனிக்கு வசந்தி என்ற பெயரில் பாஸ்போர்ட் வழங்கியது எப்படி என்பது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரனிடம் விசாரணை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மதிவதனிக்கு திருச்சியில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஐபி அதிகாரிகள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனராம்.

இதைத் தொடர்ந்து டெல்லி சென்றார் பாலச்சந்திரன். அங்கும் விசாரணையில் அவர் ஆஜராகியதாக தெரிகிறது. ஆனால் தான் விசாரணைக்காக செல்லவில்லை என்று மறுத்துள்ளார் பாலச்சந்திரன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நாளைக்கு நாங்கள் 500 பாஸ்போர்ட்களை விநியோகிக்கிறோம். பாஸ்போட் கோரி விண்ணப்பித்துள்ளவர்கள், அது தொடர்பான 15 வகையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனரா என்பதை ஆராய்கிறோம்.

மேலும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளவர்களை நேரில் பார்த்த பி்ன்னரே பாஸ்போர்ட்டை வழங்குகிறோம்.

மதிவதினிக்கு வசந்தி என்ற பெயரில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அதற்கான விசாரணைக்காகவும் நான் டெல்லி செல்லவில்லை. எனது பதவி உயர்வு தொடர்பாகத்தான் நான் டெல்லி போயிருந்தேன். இந்தப் புரளி எப்படிக் கிளம்பியது என்று தெரியவில்லை என்றார்.

கியூ பிரிவு போலீஸாரும் இதை புரளி என்றே கூறியுள்ளனர். ஆனால் வசந்தி என்ற பெயருக்கு திருச்சியைச் சேர்ந்த ஒரு புரோக்கர்தான் மதிவதனிக்காக பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மதிவதனிக்காக இவர்தான் பாஸ்போர்ட் விண்ணப்பித்துள்ளார், இவரே அதை வாங்கியும் கொடுத்துள்ளார். தற்போது இந்த புரோக்கர் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இவரைப் பிடிக்க போலீஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X