For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு-உரிமையை விட்டுத் தர மாட்டோம்: துரைமுருகன்

By Staff
Google Oneindia Tamil News

Duraimurigan
சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக மற்றொரு அணை கட்ட கேரள அரசு முயன்று வருவது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விவாதத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சி எம்எல்ஏக்களும், புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது, எந்த வகையிலும் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில்,

கேரள அரசு முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்போவதாகவும், இது தொடர்பாக பிரதமரை சந்திக்கப் போவதாகவும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதங்கமும், வருத்தமும் தெரிவித்தார்கள். பல்வேறு கருத்துக்களை அவர்கள் சொன்னாலும் ஒரே குரலில் சொல்லி இருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை 1979ல் ஆரம்பித்தது. அந்த அணை பலவீனமாக இருக்கிறது என்று ஒரு பத்திரிகை மூலம் புரளி கிளப்பப்பட்டது. அதன் பிறகு அணையை பலப்படுத்த எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போதும் தொடர்ந்து திமுக ஆட்சிக் காலத்திலும் நானே பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு நிபுணர்களின் ஆலோசனைப்படி முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டது.

மத்திய நீரியல் நிபுணர்களும் நமது பொறியாளர்களும் 4 முறை ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று ஆதாரத்துடன் தெரிவித்தனர்.

மத்திய நீர்வள ஆணையமும் அணை பலமாக இருக்கிறது என்று தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கிலும் அணை பலமாக இருப்பதால் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீரை சேமிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பேபி டேங்க் எனப்படும் பேபி அணை சீரமைக்கப்பட்ட பிறகு 152 அடி தண்ணீரை நிறுத்தலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசின் சார்பில் இந்த விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. அதனை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது அதனை எதிர்த்து கேரளா உச்சநீதிமன்றத்தில் இரு மனுக்களை தாக்கல் செய்தது. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து, கேரளா 2006ம் ஆண்டு கேரள அணைகளை மாநில அரசு கட்டுப்படுத்தும் சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க உரிமைகளை தன் வசம் எடுத்துக்கொண்டது. முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த தடையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தமிழக அரசுக்கு சாதகமான நிலையிலேயே இருக்கிறது. 10.2.09 அன்று தீர்ப்பு வரும் நிலையில் அதற்கான நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகளில் ஒரு நீதிபதி ஓய்வு பெற்றதால் தீர்ப்பு வருவது தாமதமானது. புதிய நீதிபதி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு வரப்போகிறது.

இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வரும் என்று கருதியே தற்போது கேரள அரசு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்காகத்தான் அணையில் விரிசல், கசிவு என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

புதிய அணையை கட்டப்போவதாக ஒரு புதிய பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது. கேரள முதல்வரும், விவசாயத்துறை அமைச்சரும் பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேசப் போவதாக செய்தி வந்திருக்கிறது.

அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லட்டும். நம்மிடம் தான் நியாயம் உள்ளது. தற்போது உள்ள அணை மிகவும் உறுதியாக இருக்கும் போது அந்த மாநிலத்தில் அரசியலுக்காக புதிய அணை என்ற புதிய பிரச்சினையை கிளப்புகிறார்கள்.

நமது முதல்வர் அண்டை மாநிலங்களை பகைத்துக் கொள்ளக்கூடாது. நட்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனவே அண்டை மாநிலங்களின் உறவுக்கு கை கொடுப்போம். ஆனால், தமிழகத்தின் உரிமையை இந்த அரசு எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது.

தமிழக மக்களை பாதுகாக்க, தமிழக மக்களின் உரிமைகளைப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

பிரதமரை சந்திக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கூறினார்கள். அனைத்துக் கட்சியினருடன் சென்று சந்திக்கலாம் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார். அவர் உறுதி தருவாரேயானால் அதை நாம் செய்யத் தயார்.

நமது மாநில பிரச்சினையில் நமது பேதத்தை வெளியே காட்டக்கூடாது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் எந்தவித நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளையும் முதல்வர் கருணாநிதி எடுத்து வருகிறார். எனவே முதல்வரின் ஆலோசனையை பெற்று இந்த பிரச்சினை குறித்து வற்புறுத்துவதற்காக பிரதமரை எப்படி சந்திக்க வேண்டுமோ அந்த முறையில் நாம் சந்திக்கலாம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X