கற்பழிப்பு புகார்: மனசாட்சி இல்லாத பெண் எஸ்ஐகள்!
அரியலூர்: அரியலூர் அருகே ஊனமுற்ற பெண்ணை கற்பழித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது பெற்றோர் அளித்த புகாரை வாங்க மறுத்த இரண்டு பெண் எஸ்.ஐகள் உள்பட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே, குருவாடி காலனி தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சந்திரகாசன். இவரது மகள் ராஜேஸ்வரி (22), கால் ஊனமுற்றவர்.
ராஜேஸ்வரியின் பெற்றோர் வயல் வேலைக்குச் சென்ற நேரத்தில் அதே தெருவைச் சேர்ந்த தேவேந்திரன் (23) என்பவர் வீட்டுக்குள் புகுந்து ராஜேஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து தேவேந்திரன் தலைமறைவானார்.
இகு குறித்து ராஜேஸ்வரியின் பெற்றோர் தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், எஸ்.ஐ. கலைவாணி, புகாரை வாங்க மறுத்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகுமாறு கூறிவிட்டார்.
ஆனால், அங்கும் ராஜேஸ்வரியின் புகார் மனுவை ஏற்காத போலீசார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நி்லையத்திற்கு போகுமாறு கூறியுள்ளார்.
இந் நிலையில் ராஜேஸ்வரியின் உடல் நலம் பாதிக்கப்படவே அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் பலாத்காரம் செய்யடப்பட்டது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையே போலீசில் புகார் தந்தது. இதன் பி்ன்னர் தான் தூத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கற்பழிக்கப்பட்ட கால் ஊனமுற்ற பெண் தந்த புகாரை ஏற்க மறுத்தது குறித்து தகவல் அறிந்த அரியலூர் எஸ்.பி. நஜ்முல் ஹோடா இது குறித்து விசாரணையில் இறங்கினார்.
போலீசார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து தூத்தூர் போலீஸ் எஸ்.ஐ. கலைவாணி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் எஸ்.ஐ. மலர்கொடி, தூத்தூர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் பாண்டியன், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சித்ரா, அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமுதா ஆகிய ஐந்து பேரையும் சஸ்பெண்ட் செய்தார்.
எஸ்.பியின் இந்த மனிதாபிமான செயலுக்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.