For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெடி விபத்து: பலியானோருக்கு உரிய நிவாரணம்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பட்டாசு தொழிற்சாலைகளை விபத்துகள் நடைபெறாதவாறு அமைக்க நிர்வாகங்கள் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதுரை அருகே உசிலம்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்த சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதன் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,

மதுரைக்கு அருகே உசிலம்பட்டியையொட்டிய கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்த 17 பேர் மறைந்திருக்கிறார்கள். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களிலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக நான் விசாரித்த வரை செய்தி கிடைத்து உள்ளது.

இந்த தொழிற்சாலைக்கு உரியவர்கள் யார் என்பதை விசாரித்தபோது இது அரசுக்கு சொந்தமான தொழிற்சாலை அல்ல என்பது தெரிய வந்தது.

உறுப்பினர் ஞானசேகரன் கூறும்போது ஆராய்ந்து பார்க்காமல் உரிமை வழங்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார். 1963ல் இந்த தொழிற்சாலைக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது யார் ஆண்டார்கள்? என்பது ஞானசேகரனுக்கு நினைவிருக்கும் என கருதுகிறேன்.

இந்த விபத்து நடந்த சமயத்தில் மத்திய அமைச்சர் அழகிரி சென்னையில் இருந்தார். செய்தி கேள்விபட்டவுடன் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரசின் சார்பாக இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு காயத்தின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சைக்கு தேவைப்படும் தொகையை வழங்கவும் மாவட்ட கலெக்டர் மூலம் இந்த அரசின் உத்தரவை நிறைவேற்ற கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தத் தொழிற்சாலை பற்றி விசாரித்ததில் 1963ல் அதற்கான உரிமம் பெற்று 2011 வரை உரிமம் செல்லும் என்கிற நிலையில் இந்த தொழிற்சாலை செயல்படுகிறது.

பொதுவாக பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து என்றால் அரசு உதவி தொகை கொடுப்பதுடன் பட்டாசு தொழிற்சாலை நடத்துபவர்களும் தங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால்தான் தொழிற்சாலை உருவாக்க முன் வருபவர்கள் பல லட்சம் செலவிட வேண்டும் என்று எண்ணிப்பார்த்து ஜாக்கிரதையாக செயல்படுவார்கள்.

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தினை பார்த்து அதற்கு ஏற்ப தொழிற்சாலை அமைக்க வேண்டும். பட்டாசு விபத்தை தவிர்க்க பட்டாசு தொழிலுக்கே தடை விதித்தால் அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் எத்தகைய நிலைக்கு ஆளாவார்கள் என்று எண்ணி பார்க்க வேண்டியுள்ளது.

பட்டாசு வேண்டாம் என்பதால் தீபாவளியே வேண்டாம் என்றாகி விடும். பிறகு வேறு ஒரு விழாவில் பட்டாசு வெடிக்க வேண்டியது வரும். எனவே பட்டாசு உள்ளவரை விபத்து தவிர்க்க முடியாதுதான். அதை கையாள்பவர்கள் ஜாக்கிரதையுடன் ஈடுபட வேண்டும்.

இதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு போதுமான நிதி வழங்கப்படும். இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டரிடம் இன்று காலையில் பேசினேன். அவரும் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி கூறியிருக்கிறார்.

மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு மேலும் கூடுதல் நிதி தேவைப்படும் என்றால் அதனை வழங்கவும் உத்தரவிடப்படும் என்றார்.

ரூ. 5 லட்சம் தர வேண்டும்-ஜெ:

இந் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உசிலம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த சம்பவத்தில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதோடு, காயம் அடைந்துள்ள அனைவரும் பூரணநலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இனி வரும் காலங்களில் இது போன்ற தீ விபத்து ஏற்படாத அளவுக்கு அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும் பங்கள் ஒவ்வொன்றிற்கும் 5 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் உடனடியாக வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X