For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வர்ணாசிரமம்-சட்டசபையை கலக்கிய சமஸ்கிருதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தொழிலாளர் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய திமுக எம்.எல்.ஏ. சுப்பிரமணியம், இலக்கியச் சுவையோடும், எதுகை, மோனையோடும் பேசினார்.

திருமணத்தின்போது சொல்லப்படும் சில சமஸ்கிருத மந்திரங்களை சொல்லி, எப்படி வர்ணாசிரம முறை தமிழர்களை இழிவுபடுத்தின என்பதை விளக்கியதோடு இப்படிப்பட்ட வழக்கங்களில் சிக்கிக் கிடந்த தமிழனை மீட்டவர் பெரியார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், ஒரு மதத்தின் திருமணச் சடங்குகளை கொச்சைப்படுத்தலாமா?, தமிழில் மந்திரங்கள் சொல்லப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் சம்ஸ்கிருத மந்திரங்கள் சொல்லி திருமணம் செய்வது அவரவர் விருப்பம். அதைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்றார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அன்பழகன், தமிழர்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டார்கள், அவர்களை பெரியார் எப்படி மீட்டார் என்பதைப் பற்றிதான் சுப்பிரமணியம் பேசுகிறார். கண்டனத்துக்காகவே அவர் சம்ஸ்க்ருதம் ஸ்லோகங்களை கூறினார். கொச்சைப்படுத்துவதற்காக அல்ல என்றார்.

இதையடுத்துப் பேசிய அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழில் குடமுழுக்கு செய்வது தவறு. அது நீசபாஷை'' என்று சொல்லப்பட்டபோது வராத கோபம் இப்போது ஏன் வருகிறது என்று கேட்டார்.

இதற்கு செங்கோட்டையன், அவரவர் சமுதாயத்துக்கு ஏற்றதை அவரவர் கடைபிடிக்கலாம். அதற்காக சமஸ்கிருதத்தை கொச்சைப்படுத்தியது தவறு என்றார்.

மீண்டும் நிதிஅமைச்சர் அன்பழகன் எழுந்து, திமுக உறுப்பினர் சமஸ்கிருத மொழி பற்றி கூறினார். அவர் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் பேசினாரே தவிர, கொச்சைப்படுத்தும் விதமாக பேசவில்லை. மக்கள் எப்படி வஞ்சிக்கப்பட்டார்கள், அதிலிருந்த பெரியார் எப்படி அவர்களை காப்பாற்றினார் என்றுதான் அவர் சொன்னார் என்று மீண்டும் விளக்கம் தந்தார்.

இதையடுத்து தொடர்ந்து பேசிய எம்எல்ஏ சுப்பிரமணியம், ''முத்தைத் தரு பத்தித்திருநகை'' என்ற இறைப் பாடலை பாடி கடைசியாக பெருமாளே' என்று முடித்தார்.

அதன் பிறகு பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் அலியும், சில சம்ஸ்கிருத மந்திரங்களைச் சொல்லியதோடு பகவத் கீதையிலிருந்து சில ஸ்லோகங்களைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

'அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் என்ன தொடர்பு?':

அவர் பேசுகையில், கோயிலில் பொங்கல் வைக்க பயன்படும் பச்சரிசிக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள கோயில்களுக்கு திருப்பணி செய்ய வழங்கப்படும் ரூ. 25,000த்தை ரூ. 50,000ஆக உயர்த்த வேண்டும்.

ராமேசுவரம் கோயிலைச் சுற்றியுள்ள விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

ராமேசுவரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரால் தொடங்கப்பட்ட வடக்கு, தெற்கு கோபுரப் பணிகள் எப்போது முடிவடையும்? விலை மதிக்கமுடியாத ஆறரை அடி உயர மரகதலிங்கம் உள்ள திருஉத்தரகோசமங்கை சிவன் கோயில் மோசமான நிலையில் உள்ளது. அதைச் சீரமைக்க வேண்டும்.

நான் இந்த அவையில் பல முறை இந்துக் கோயில்களைப் பற்றி பேசியுள்ளேன். திமுக உறுப்பினர்கள் அப்துல் பாசித், கெளஸ் பாட்சா ஆகியோரும் கோயில்கள் பற்றிப் பேசியுள்ளனர். எனவே, இனி யாரும் 'அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் என்ன தொடர்பு' என்று கேட்கக் கூடாது என்றார்.

இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் வடக்கு கோபுரப் பணி முழுவதையும் செய்ய தர திருப்பூரைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் முன்வந்துள்ளார். தெற்கு கோபுரப் பணிகள் தமிழக அரசின் செலவில் நடைபெறும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X