பெட்ரோல்-லிட்டருக்கு ரூ.1.01 நஷ்டம்!
டெல்லி: பெட்ரோல் விற்பனையால் லிட்டருக்கு ரூ.1.01, டீசலால் லிட்டருக்கு 2 பைசா வீதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில்,
கடந்த 2ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் ரூ.4,870 கோடியில் இருந்து ரூ.2,880 கோடியாகக் குறைந்துள்ளது.
விலை உயர்வுக்கு பின்னரும் கூட பெட்ரோலால் லிட்டருக்கு ரூ.1.01, டீசலால் லிட்டருக்கு 2 பைசா வீதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
சர்வதேச கச்சா எண்ணையின் விலை நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்தால், நலிந்த பிரிவு மக்கள் பயனடையும் வகையில் பெட்ரோல், டீசல் விற்பனை விலை குறைக்கப்படும்.
பெட்ரோல், டீசல் மீது விற்பனை வரி, வாட் வரியை மாநில அரசுகள் அதிக அளவில் விதித்துள்ள காரணத்தாலும் தான் அவற்றின் விலை கூடுதலாக உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications
