For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் கனவு-'டெல்லியில் வீடெல்லாம் வாங்கிய ஜெ'!

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: இந்திய பிரதமராகும் வாய்ப்பு வருகிறது என்று ஜோசியர்கள் சொன்னதை நம்பி, டெல்லியில் வீடெல்லாம் வாங்கி; தோழியை அனுப்பி அலங்காரமும் செய்தார் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியர்களை பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

36,000 டாஸ்மாக்' பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக தொழிற்சங்க பேரவை சார்பில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் தொழிலாளர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து விடுத்துள்ள அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.

அந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் திமுக அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அந்த தொழிலாளர்களை ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோதே ஏன் பணி நிரந்தரம் செய்யவில்லை என்ற கேள்விக்கு அவருடைய பதில் என்ன?.

ஜெயலலிதா ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படவில்லை என்கிறார் ஜெயலலிதா. முழு பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைக்க முயலுகிறார். கடந்த 20ம் தேதி சட்டப்பேரவையிலே டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ ஜெயலலிதா அவருடைய ஆட்சியிலே பணியிலே சேர்க்கப்பட்டார்கள் என்ற காரணத்தால் திமுக அரசு பாரபட்சமாக நடந்துகொள்வதாக கூறி ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார். அது சரி தானா என்பதை அந்த டாஸ்மாக் பணியாளர்கள்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அவர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை இருபது சதவீகிதமாக உயர்த்தப்பட்டதும் திமுக அரசிலேதான். டாஸ்மாக் பணியாளர்களின் வேலை நேரத்தை 4 மணி நேரம் குறைத்ததும் திமுக அரசு தான்.

இவர்கள் ஜெயலலிதா ஆட்சியில் நியமனம் பெற்றவர்கள் என்று திமுக ஆட்சி நினைத்திருக்குமேயானால், இத்தனை சலுகைகளையும் அளித்திருக்குமா என்பதை ஒருக்கணம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா தன் அறிக்கையிலே அவருடைய ஆட்சியிலே அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை நிறுத்திவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அதுவும் விவரம் தெரியாமல் எழுதப்பட்ட உளறல் ஆகும். ஏற்கனவே வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை விட அதிகமாக மேலும் பரவலாக தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியிலே பத்தாயிரம் பேர் சாலைப் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனை பேரையும் அவர்கள் திமுக ஆட்சியிலே நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காகவே வீட்டிற்கு அனுப்பி வைத்த பெருமைக்குரிய பெருமாட்டிதான் ஜெயலலிதா.

அது போலவே மக்கள் நலப்பணியாளர்களாக திமுக ஆட்சியிலே நியமனம் பெற்றிருந்த 13 ஆயிரம் பேரையும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் பணியிலிருந்து வீட்டிற்கு அனுப்பினார். இவ்வாறு பாரபட்சம் என்பதற்கே அடையாளமாக ஆட்சி நடத்திய ஜெயலலிதா, தற்போது திமுக ஆட்சி பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்று அறிக்கை விடுவதைப் பார்த்து டாஸ்மாக் நிறுவனத்திலே பணிபுரியும் அலுவலர்களே எள்ளி நகையாடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

டாக்டர் அய்யா.. ஒரு சந்தேகம்:

ஒரு சந்தேகம். ஒரு வேளை, இவரது கூட்டாளியான டாக்டர் ராமதாஸ் கருத்தை ஏற்று; தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, எல்லா மதுக்கடைகளையும் இந்த 'மைனாரிட்டி அரசு' மூடிவிட்டால் அப்போது வேலையிலிருந்த தொழிலாளர்க்கு வேலை கொடுக்க 'மதுக்கடைகளைத் திறந்திடுக!' என்று ஜெயலலிதா ஒரு போராட்டத்தை நடத்தக் கூடுமல்லவா?. அப்போது தன்னால் நியமிக்கப்பட்ட டாஸ்மாக் தொழிலாளர்களை பழிவாங்குவதாக ஒரு குற்றச் சாட்டையும் கூறக்கூடும் அல்லவா?

என் செய்வது; ஆகாயக் கோட்டை கட்டி; இந்திய பிரதமராகும் வாய்ப்பே வருகிறது என்று ஆரூடக்காரர்கள் சொன்னதை நம்பி, டெல்லி மாநகரில் வீடெல்லாம் வாங்கி; தோழியை அனுப்பி அலங்காரமும் செய்து; கடைசியில் தோல்வியில் துவண்டு போனவருக்கு, அந்த தோல்வியினால் உள்ளத்தில் ஏற்பட்ட நமைச்சல் இப்படியெல்லாம் சொறிந்து கொள்ளச்செய்கிறது. சொறிந்துகொள்ள, சொறிந்துகொள்ள எரிச்சல்தான் அதிகமாகும்- ஆனால் உள்ளமெல்லாம் புண்பட்டு உதிரம் கொட்டும்.

பாவம்; "தன் வினை தன்னைச் சுடும்'' என்று பட்டினத்தார் அப்பொழுதே பாடியிருக்கிறாரே! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X