For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலில் போட்டியிடாமலேயே தோற்ற ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: இடைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அதிமுக விடுத்த வேண்டுகோளை தமிழக மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர். இதன்மூலம் தேர்தலைப் புறக்கணித்தும் கூட ஜெயலலிதாவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுடன் கூட கலந்து ஆலோசிக்காமல் கொடநாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்தபடியே தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதை மதிமுக, பாமக ஆகியவை ஏற்றுக் கொண்டாலும் இடதுசாரிகள் ஜெயலலிதாவின் இந்த ஸ்டைல் அரசியலை ஏற்க மறுத்துவிட்டனர். கூட்டணியில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தனர். இப்போது இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏதும் இல்லை என்பதே நிஜம்.

இந் நிலையில் பலமுறை மாவட்டச் செயலாளர்களையும் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளையும் கொடநாடு எஸ்டேட்டுக்கு வரவழைத்த ஜெயலலிதா, மக்களிடையே தேர்தலை புறக்கணிக்குமாறு பிரச்சாரம் செய்யுமாறு கூறினார்.

ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, தேர்தலை புறக்கணிக்குமாறு அதிமுகவினர், நோட்டீஸ் அடித்து ஊர் முழுவதும் தந்தனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தானும் பல அறிக்கைகளை வெளியிட்டார் ஜெயலலிதா. ஆனால், அவரது கோரிக்கையை பொது மக்கள் மட்டுமல்ல, அதிமுகவினரே ஏற்கவில்லை என்பது 5 தொகுதிகளில் நடந்துள்ள சராசரி வாக்கு சதவீதத்தைப் (69.4%) பார்த்தால் புரிகிறது.

இத்தனைக்கும் திமுகவினர் தங்கள் தகிடுதித்தங்களைக் காட்டவில்லை. தேர்தல் அமைதியாக, ஒழுங்காகவே நடந்து முடிந்துள்ளது. பண பட்டுவாடாவும் பெரிய அளவில் நடந்ததாக பேச்சில்லை.

இதன்மூலம் தேர்தலில் போட்டியிடாமலேயே தோல்வியடைந்துள்ளார் ஜெயலலிதா.

குறிப்பாக கடந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்டு வெற்றி பெற்ற பர்கூர், மதிமுக போட்டியிட்டு வென்ற கம்பம் ஆகிய தொகுதிகளில் தான் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன. கம்பத்தில் 77 சதவீதமும் பர்கூரில் 72 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதன்மூலம் கடந்த தேர்தலில் அதிமுகவும் மதிமுகவுக்கும் வாக்களித்த பெரும்பாலானவர்கள் இம்முறையும் வாக்களித்துள்ளது தெளிவாகிறது.

இதன் மூலம் அதிமுக, மதிமுக ஆகியவற்றின் தொண்டர்கள், தங்களது கட்சித் தலைமையின் உத்தரவை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளனர்.

இந்த இடைத் தேர்தலில் அதிமுகவின் ஓட்டுக்கள் திமுகவுக்கு கொஞ்சமும் தேமுதிகவுக்கு பெருமளவிலும் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தான் அதிமுகவினரை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் ஆரம்பித்து, 2006 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல்கள், 2009 மக்களவைத் தேர்தல் என அனைத்திலும் தோற்றுள்ளார் ஜெயலலிதா. இந் நிலையில் இடைத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதால் தான் ஜெயலலிதா போட்டியிடவில்லை என்று கருதப்படுகிறது.

ஆனால், இடைத் தேர்தலில் போட்டியிட்டு திமுக கூட்டணிக்கு அவர் பாடம் புகட்ட தவறிவிட்டது அதிமுகவுக்கு மேலும் சரிவையே ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அவர் சொல்லி அவரது கட்சியினரே கேட்காததது நிரூபணமாகிவிட்ட நிலையில், அவரது தேர்தல் புறக்கணிப்பு கோஷம் பொது மக்களிடையே மாபெரும் தோல்வியடைந்துள்ளது.

களத்தில் இறங்கி அதிமுகவுக்கு புத்துயிர் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. அவருக்கு வேண்டிய சில (அதிபுத்திசாலிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருக்கும்) பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கைகள், குறிப்பாக வட நாட்டு தொலைக்காட்சிகள் ஆகியவை ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தி என்று சொல்லி அவருக்கு உண்மை நிலையை உணர்த்தத் தவறி வருகின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தான் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கப் போவதாக இந்த மீடியாக்களும் பத்திரிக்கையாளர்களும் 'பில்ட்-அப்' கொடுத்து கவிழ்த்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதே வேலையைத் தான் தேர்தலுக்குத் தேர்தல் இவர்கள் செய்து வருகின்றனர்.

அதே போல ஜெயலலிதாவை நெருங்கி மக்கள் மன ஓட்டத்தை சொல்லும் நிலையில் அதிமுக தலைவர்களும் இல்லை.
ஜெயலலிதாவைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக் கொள்வது (பாண்டுரங்கன் போன்றவர்கள் அறைந்தே கொள்வார்கள்), ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு கும்பிடுவது (ஓ.பன்னீர்செல்வம்), கார் போன பாதையி்ல் உருண்டு எழுவது, ஜெயலலிதாவைப் பார்த்துவிட்டால் பம்மி பம்மி.. உட்காந்தபடியே நடப்பது (!!) போன்ற 'பவர்புல்' தலைவர்கள் தான் அந்தக் கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள்.

இவர்கள் ஜெயலலிதாவிடம் உண்மை நிலையைச் சொல்ல வாய்ப்பே இல்லை. ஜால்ராக்களை ஒதுக்கிவிட்டு பொன்னையன் போன்ற கொஞ்சமாவது தைரியமாக விஷயத்தை நேரில் சொல்விடும் ஆட்களுக்கு (இதனால் பொன்னையன் பட்டபாடுகளும் அதிகம்) ஜெயலலிதா முக்கியத்துவம் தருவது தான் கட்சிக்கு நல்லது.

இல்லாவிட்டால் மன்னார்குடி வகையறா உருவாக்கி வைத்துள்ள 'கனவுலகமே' ஜெயலலிதாவுக்கு நிரந்தரமாகிவிடும். குறிப்பாக, இந்தத் தேர்தலில் அதிமுக வாக்குகள் அதிகளவில் தேமுதிகவுக்குப் போயிருந்தால்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X