கன மழை- திரும்பி வந்த விமானம்- பயணிகள் ரகளை
சென்னை: மோசமான வானிலை காரணமாக அந்தமான் சென்ற கிங்பிஷர் விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் போர்ட்பிளேர் சென்றதால், கிங்பிஷர் பயணிகள் ரகளை செய்தனர்.
இன்று காலை 4.50 மணிக்கு 162 பயணிகளுடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கிங்பிஷர் விமானம் ஒன்று சென்னையிலிருந்து கிளம்பியது.
விமானம் அந்தமானை நெருங்கியபோது கன மழையும், இடியுமாக இருந்ததால் விமானத்தால் தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து 6.35 மணிக்கு விமானம் மீண்டும் சென்னைக்கேத் திரும்பியது. அதன் பின்னர் ஒன்றரை மணி நேரத்தில் விமானம் மீண்டும் கிளம்பக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தமானில் நிலைமை சரியில்லை என்று தகவல் வந்ததால், விமானம் 7.45 மணிக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்தியன் ஏர்லைன்ஸ் போனதால் ரகளை...
இந்த நிலையில், காலை 9.30 மணிக்கு 93 பயணிகளுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் போர்ட் பிளேர் கிளம்பிச் சென்றது.
இதைப் பார்த்த கிங்பிஷர் பயணிகள், இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டும் போகிறதே, எங்களையும் அந்தமானுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை விமான நிலைய அதிகாரிகளும், கிங்பிஷர் நிறுவன அதிகாரிகளும் அமைதிப்படுத்தினர். போர்ட்பிளேரில் ஒரு நேரத்தில் ஒரு விமானம்தான் இறங்க முடியும், கிளம்ப முடியும். எனவே இனிமேல் அங்கு செல்ல முடியாது. நாளை உங்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினர்.
இந்த விளக்கத்தை ஏற்ற பயணிகள் அமைதி அடைந்தனர். இந்த அமளியில் நடராஜன் என்ற பயணி மயக்கமடைந்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
சரியாக சாப்பிடாத காரணத்தால்தான் மயக்கம் வந்து விட்டதாக பின்னர் நடராஜன் கூறியதால் அமைதி திரும்பியது.