• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓட்டுக்கு நோட்டு-மையமே அத்வானி தான்-ஜஸ்வந்த்!

By Staff
|

Jaswant Singh
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது மக்களவையில் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி நாடகம் நடத்தியதே அத்வானி தான் என்று ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

'அவுட்லுக்' வார இதழுக்கு ஜஸ்வந்த் அளித்தள்ள பேட்டியில்,

எப்படியாவது பிரதமராகிவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு ஏற்பட்டது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். எந்தத் தவறையும் செய்ய அத்வானி தயாரானார்.

அந்த வகையில் தான் காங்கிரஸ் அரசை கவிழ்க்க நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது 3 பாஜக எம்பிக்கள் மூலம் மக்களவையிலேயே கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி ஒரு நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தை திட்டமிட்டு நடத்தியது அத்வானியின் வலதுகரமாக இருந்து சமீபத்தில் கட்சியிலிருந்து விலகிய அவரது ஆலோசகர் சுதீந்திர குல்கர்னி தான்.

பார்ப்பதற்கே வினோதமாக இருந்த ஒருவர் பையில் கட்டுகட்டாக பணம் எடுத்து வந்தார். அவருடன் சுதீந்திர குல்கர்னியும் இருந்தார். அந்தப் பணம் பாஜக எம்பிக்கள் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகக் கொடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

அந்த நபரைப் பற்றிக் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட அத்வானி, இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டுபோய் மக்களவையில் அப்படியே காட்டுங்கள் என்று 3 பாஜக எம்பிக்களிடம் கூறினார்.

ஒரு நாட்டின் தலைமைப் பதவிக்கு வர நினைப்பவர்களுக்கு இது போன்ற செயல் அழகல்ல என்பதை அத்வானி உணரவில்லை. அந்தப் பணம் அப்படியே ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து தரப்பட்டிருந்தாலும் முதலில் அதை மக்களவைத் தலைவரிடம் கூறி, அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்துவிட்டு அவர் என்ன கூறுகிறாரோ அதன்படி செயல்பட்டிருக்கலாம்.

ஆனால், பிரதமர் பதவி மீதிருந்த ஆசையால் அடுத்தடுத்து தவறுகளைச் செய்தார் அத்வானி. இந்தச் செயலால் மக்களவையின் மாண்பும் நாட்டின் மரியாதையும் கெட்டது தான் பாக்கி. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான என்னிடம் கூட ஆலோசனை நடத்தாமல் இதைச் செய்தார் அத்வானி.

பின்னர் இந்த ஓட்டுக்கு நோட்டு விவகாரத்தை விசாரித்த குழு கூட இதில் குல்கர்னிக்கு தொடர்புள்ளதை வெட்ட வெளிச்சமாக்கியதை நினைவூட்டுகிறேன்.

தனக்கு பெயர் கிடைக்கும் என்பதற்காக எதையும் செய்யத் தயாரானார் அத்வானி. ஆனால், கட்சி மீது புகார்கள் வந்தால் அதற்கு பொறுப்பேற்காமல் அமைதியாக இருந்துவிடுவது அல்லது பழியை வேறு யார் மீதாவது போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார். இது ஒரு தலைவருக்கு அழகா?. ஒரு சீரிய தலைவர் இப்படியா செய்லபடுவார்?.

பாஜக இப்போது ஒரு கட்சியாக இல்லை என்பது தான் உண்மை. அது ஒரு சிலரின் தனிப்பட்ட நிறுவனமாகிவிட்டது. அல்லது ஒரு வழிபாட்டுக் கூட்டமாக, தலைவன் சொல்படி செயல்படும் கும்பலாக மாறிவிட்டது. கட்சி இப்படி தரம் கெட்டுப் போனது அத்வானியின் பண்படாத தலைமையே காரணம்.

ராஜ்நாத் சிங் ஒரு மாநிலத் தலைவர் அளவுக்கே தகுதி படைத்தவர். அவரைப் போல தேசியத் தலைவராக்கியது கட்சியின் தவறு தான்.

நான் வெளிநாடு சென்றிருந்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு இந்திய விமானங்கள் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எல்லைகளில் நமது துருப்புகள் நிறுத்தப்பட்டனர் ('ஆபரேசன் பராக்கிரம்). நான் அவ்விரு முடிவுகளையும் ஏற்கவில்லை.

நான் நாடு திரும்பியவுடன் என்ன காரியம் செய்தீர்கள் என்று கேட்டேன். இது நல்லதுக்குத் தான் என்று பதில் கிடைத்தது. ஆனால், இரு தரப்பிலும படைகள் குவிக்கப்பட்டு நின்று கொண்டே இருந்தனர். இரு தரப்பிலும் பொறுமை காலியாகிக் கொண்டிருந்தது.

அப்போது பிரதமர் வாஜ்பாய் என்னிடம், இந்தப் போர் ஒரு இறுதிப் போராக இருக்கட்டும் என்றார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அவரிடம் நான் விவாதம் செய்தேன். பின்னர் ஒரு வழியாய் அந்தப் பிரச்சனை தீர்ந்தது.

தன்னுடன் விவாதம் செய்பவரையும் வாஜ்பாய் மதிப்பார். அது தான் தலைமைக்கு அழகு. மனதி்ல் ஒன்றை வைத்துப் பேச மாட்டார்.

அதேபோல கார்கில் போர் நடந்து கொண்டிருந்தபோது எல்லை பாதுகாப்புப் படையினரை வங்கதேசத்துக்குள் அனுப்புவது என்ற முடிவும் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்த இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவரை மூங்கிலில் கட்டி தூங்கிவந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு மனம் பதைத்துப் போனேன்.

எல்லை பாதுகாப்புப் படை உள்துறை அமைச்சகத்தின் (அத்வானியின் கட்டுப்பாட்டில் இருந்தது) கட்டளைப்படிதான் செயல்படும். வங்கதேசத்துக்கு படையை அனுப்பியது யார் என்று நான் கேட்டதற்கு எனக்குக் கடைசி வரையில் பதிலே கிடைக்கவில்லை.

காண்டஹாருக்கு விமானம் கடத்தப்பட்ட விஷயத்தில் அத்வானி எத்தனை முறை தான் பொய் சொல்வார் என்று தெரியவி்ல்லை. அந்த விமானம் அம்ரிஸ்தரை விட்டு வெளியேற விட்டதே தவறு. பின்னர் விமானம் காண்டஹாருக்குப் போய்விட்டது.

பயணிகளை மீட்க தீவிரவாதிகளை விடுவிப்பது என்ற முடிவு அத்வானியும் அடங்கிய உயர் மட்ட அமைச்சர்கள் கூட்டத்தில் தான் எடுக்கப்பட்டது. அப்போது விமானத்தில் தீவிரவாதிகளை அழைத்துச் செல்லும்போது, முக்கியமான ஒரு நபர் யாராவது உடன் செல்வது நல்லது என்று அதிகாரிகள் கூறினர். அந்த நபர் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவராக இருக்க வேண்டும் என்றனர்.

அப்போது தான் நானே போவதாக சொன்னேன். தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நான் சென்றது இந்திய பயணிகளின் உயிரை மதித்துத் தான். அங்கு 'பெல்லி டான்ஸ்' பார்க்க நைட் கிளப் எல்லாம் கிடையாது. நான் அதைப் பார்க்கப் போகவில்லை.

நான் ராஜஸ்தானின் பாலைவனத்தில் பிறந்தவன். எனக்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் உறவினர்கள் உண்டு. எனக்கு ஒன்றிணைந்த கலாச்சாரம் பிடிக்கும். இணைந்து வாழ்வதை விரும்புபவன் நான்.

உங்களுக்குத் தெரியுமா?.. ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் பகுதியில் போக்ரானுக்கு அருகே ஒரு சமாதி உண்டு. அதை ராஜபுத்திரரர்கள் (ஜஸ்வந்த் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்) ராம் தியோரா என்று அழைத்து வணங்குகிறார்கள். இஸ்லாமியர்கள் ரம்சா பீர் என்று சொல்லி மரியாதை செய்கிறார்கள்.

அவ்வளவு ஏன்.. ஜெய்சால்மீரி்ல் முஸ்லீம்கள் மாட்டு மாமிசத்தை உண்பதில்லை. ராஜபுத்திரரர்கள் பன்றிக் கறி தின்பதில்லை. இப்படிப்பட்ட சமூகத்தில் பிறந்தவன் நான். அதனால் தான் ஜின்னா குறித்து உண்மைகளை அறிய எனக்கு ஆவல் பிறந்தது என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X