For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரெட்டி விமானி உடலுக்கு சொந்த ஊரில் வீரவணக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் விபத்தில் பலியான துணை விமானி கேப்டன் எம்.எஸ். ரெட்டியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு மக்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

துணை விமானி கேப்டன் எம்.எஸ். ரெட்டியின் சொந்த ஊரான நல்லகுண்டாவுக்கு நேற்று அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு டிடி காலனியில் இருக்கும் அசோக் சத்யம் என்கிளேவ் பகுதியில் உள்ளூர் மக்கள் நூற்று கணக்கில் திரண்டு அவரது உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

அவருக்கு கிரன்மை என்ற மனைவியும், வினய் குமார், மனுஸ்ரீ என இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். அவரது மகன் அப்பகுதியில் உள்ள நாராயணா ஜூனியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகள் 8ம் வகுப்பு மாணவி.

சொல்லாமல் போய்விட்டான்...தந்தை உருக்கம்

அவரது உடலை பார்த்து கதறியபடி அவரது தந்தை ஸ்ரீராம் ரெட்டி கூறுகையில்,

எனது மகன் சிறந்த விளையாட்டு வீரன். கால்பந்து நன்றாக விளையாடுவேன். அவன் விமான விபத்தில் இறந்து போனான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

அவன் தினமும் என் காலில் விழுந்து வணங்கும் பழக்கமுடையவன். ஒரு நாள் கூட அவன் என்னிடம் சொல்லாமல் வெளியே போனதில்லை.

கடந்த 2ம் தேதி அவன் வேலைக்கு போகும் போது நான் வீட்டில் இல்லை. அவன் போகும்போது என்னை பார்க்காமல் போயிவிட்டான். அதன் பின்னர் என்னால் அவனை பார்க்க முடியாமல் போயிவிட்டது என்றார் அழுதபடியே.

இறந்த துணை கேப்டனின் மகன் வினய் கூறுகையில்,

அன்று பரீட்சை இருந்ததால் காலையில் சீக்கிரமாக எழுந்துவிட்டேன். ஆனால், அப்போது நான் அவரை பார்த்தது தான் கடைசியாக இருக்கும் என எண்ணவில்லை என்றார்.

நாளை இறுதிசடங்கு...

துணை கேப்டனி நண்பர் கிரிதர் என்பவர் கூறுகையில்,

இந்த விபத்தில் அவர் தப்பித்திருப்பார் என நான் உறுதியாக நம்பினேன். ஏனென்றால் அவர் சியாச்சின் பனிமலை பகுதிகளில் கூட திறமையாக வேலை பார்த்து இருக்கிறார். ஸ்ரீநகரில் ஏற்பட்ட பூகம்ப நிவாரண பணிகளில் சிறப்பாக பணியாற்றி இரண்டு விருதுகள் கூட வாங்கியிருக்கிறார். அங்கு இடிபாடுகளில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார் என்றார்.

இந்நிலையில் அவரது இறுதிசடங்கு நாளை அவரது சொந்த ஊரில் நடக்கவிருக்கிறது. அவரது சகோதரர் ரமணா ரெட்டி அமெரிக்காவிலிருந்து வரவேண்டும் என்பதால் தாமதமாவதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பலியான விமானி கேப்டன் எஸ்கே பாடீயாவின் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிசடங்கு இன்று அல்லது நாளை நடக்கும் என கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X