தமிழக கிரிக்கெட் அணியில் கரூர் மாணவர்
கரூர்: தமிழக கிரிக்கெட் அணியில் கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர் ராம்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தமிழக கிரிக்கெட் அணிக்கு மாநில அளவிலான தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு சென்னை சேத்துப்பட்டு கிரிக்கெட் மைதானதில் நடைபெற்றது.
இந்த தேர்வு முகாமில் கிரிக்கெட் வீரர் திணேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழி காட்டினர்.
இந்தத் தேர்வில், கரூர் பரணி பார்க் பள்ளியில் பயிலும் மாணவர் எஸ்.ராம்குமார் தேர்வு பெற்றுள்ளார்.
செப்டம்பர் மாத இறுதியில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு இடையேயான தேசிய கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ராம்குமார் செல்ல உள்ளார்.
தமிழக அணிக்கு வெளி மாவட்டத்தில் இருந்து தேர்வு பெற்றவர் ராம்குமார் மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.
ராம்குமாரின் இந்த சாதனைக்கு கரூர் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, மற்றும் கரூர் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி ஆகியோர் பரிசளித்து பாராட்டி வாழ்த்தினர். அப்போது, ராம்குமாரின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.