• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுக ஆட்சியை அகற்ற மக்கள் சக்தியை திரட்டுவோம்- வைகோ

By Staff
|

திருச்சி: திமுக ஆட்சியை அகற்ற மக்கள் சக்தியை திரட்டுவோம் என்று திருச்சியில் மதிமுக சார்பில் நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் மண்டல மாநாடாகவும் நடந்த இந் நிகழ்ச்சியி்ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கடந்த 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் மக்கள் தாங்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். விலைவாசி ஏற்றம் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், பாலாற்றின் குறுக்கே அணைகட்டும் ஆந்திர அரசின் முயற்சியைத் தடுக்கவும், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் போக்கைத் தடுக்கவும் அரசு தவறிவிட்டது.

பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைகட்டும் கர்நாடக மாநில அரசின் நடவடிக்கையைத் தடுக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றவும் விரைந்து செயல்படவில்லை.

வங்கக் கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கைக் கடற்படையின் அராஜகத்தைத் தடுக்கவும், மீன்பிடிக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.

அரசின் நிர்வாகச் சீர்கேட்டால், மின்சார உற்பத்தி குறைந்து, மின் பற்றாக்குறை ஏற்பட்டு மக்களும், விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓராண்டாக நடைமுறையிலுள்ள மின் வெட்டை விலக்கிக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மின் உற்பத்திக்கான புதிய திட்டமும் இல்லை. இதனால், தொழில்துறை பலத்த நெருக்கடிக்கு உள்ளாகி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

விவசாயிகளின் விளை நிலங்களை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தி அமைக்கப்பட்டு வரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களால், விவசாயிகளின் வாழ்வும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. உரத் தட்டுப்பாடு தொடர்கிறது.

தமிழக அரசு விவாதமின்றி நிறைவேற்றிய, மாநில வேளாண் மன்றச் சட்டம், விவசாயிகளுக்குப் பெருங்கேடு விளைவிக்கும். எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள், பத்திரிகைகளின் எதிர்ப்பை அடுத்து, இச்சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இச்சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

அனைத்து ஆறுகளிலும் வரைமுறை இல்லாமல், மணல் அள்ளி அண்டை மாநிலங்களுக்கு கடத்தி இயற்கை வளங்களைச் சுரண்டி அழித்து வருகின்றனர்.

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரம் உயர முறையான நடவடிக்கைகள் இல்லை. சமச்சீரான கல்வி முறையை நடைமுறைப்படுத்த, முறையான திட்டமிடுதல் இல்லை.

சுமார் 60 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு நீண்ட காலமாகியும் வேலைகிடைக்காமல் தவிக்கின்றனர். இதைப் போக்க தொலைநோக்கு திட்டங்கள் இல்லை.

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இந்திய அரசு ஒப்புக்குக்கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இனப் படுகொலையை விவாதிக்க, மனித உரிமைகளைக் காக்க ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்கும் வேலையிலும் இந்திய அரசு ஈடுபட்டது.

இப்போது, இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அடிப்படை வசதிகளே இல்லாத சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்வதும், தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும் தொடர்கிறது. ஈழத் தமிழர்களை ரத்த வேட்டையாடிய அதிபர் ராஜபக்ஷ, அவரது சகோதர்கள் பசில் ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷ, ராணுவத் தளபதி பொன்சேகா உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் அனைவரையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தித் தண்டிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைவரும் உறுதி பூண வேண்டும்.

ஈழத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்கயும், ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற உரிய நடவடிக்கையை ஐ.நா மன்றம் மேற்கொள்ள, உலக நாடுகளின் ஆதரவைப் பெறவும், தமிழக மக்களிடம் கடமை உணர்ச்சியை ஏற்படுத்தும் அறவழி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இந்த ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் சக்தியைத் திரட்ட இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் தர்மானங்களை வாசித்தார்.

முன்னதாக மாநாடு நடந்தபோது இரவு 7.30 மணி முதல் 8.40 மணி வரை பலத்த மழை கொட்டியது. ஆனால் தொண்டர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. கன மழையிலும் மாநாடு தொடர்ந்து நடைபெற்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X