For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேனல் தீவில் இருந்தெல்லாம் ஜெவுக்கு வந்த டி.டி!

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: ரூ.2 கோடி பரிசு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்கக்கூடாது என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

1992ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது பிறந்தநாளை மிக பிரமாண்டமாகக் கொண்டாடினார். அப்போது அவருக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள 57 வங்கி டிமாண்ட் டிராப்டுகள் பரிசாக வந்தன.

அவற்றை அரசு கஜானாவில் சேர்க்காமல், ஜெயலலிதா தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொண்டார். இத்தனைக்கும் அது யார் அனுப்பியது என்றே தனக்குத் தெரியாது என்றார் ஜெயலலிதா.

இது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இதில் உடந்தையாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஜெயலலிதா உள்பட 3 பேரும் வேண்டுமென்றே இந்த வழக்கை பல வகைகளிலும் தாமதப்படுத்தி வருவதாகவும் இதனால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய ஒரு நாளைக் குறிக்க வேண்டும் என்றும் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

இதையடுத்து இந்த வழக்கை மேலும் இழுத்தடிக்கும் வகையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதா திடீரென புதிய மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முகம்மத் இஷாத் அலி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், அடுத்த விசாரணையின்போது இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று தெரிந்தே விசாரணையை வேண்டுமென்று இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மனுவை ஜெயலலிதா தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. தமிழக அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறுவதும் தவறானதாகும்.

டெல்லி சிறப்பு போலீஸ் சட்டப்படி தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் வழங்க அதிகாரம் உள்ளது. விசாரணையின்போது ஊழல் தடுப்பு சட்டம் 13வது பிரிவின் கீழ் ஜெயலலிதா குற்றம் புரிந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் எந்தவித சட்டவிரோதமும் கிடையாது.

இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றது சட்டப்பூர்வமானதுதான். சிபிஐ நியாயமான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா, துபாய், சேனல் தீவு போன்ற வெளிநாடுகளில் இருந்து ஜெயலலிதாவுக்கு வங்கி டிமாண்ட் டிராப்டுகள் மூலம் பணம் வந்துள்ளது. எனவேதான் இதுபற்றி விசாரணை நடத்த காலதாமதம் ஏற்பட்டது.

இவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் எந்த உள்நோக்கமும் கிடையாது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை. கட்சி உறுப்பினர்கள் அன்பின் காரணமாக, பரிசளித்ததாக ஜெயலலிதா கூறியுள்ளார். 21 பேர் ரூ.1 கோடியே 26 லட்சத்து 96 ஆயிரத்து 500 பணத்தை டி.டி. மூலம் அனுப்பியுள்ளனர்.

முதல்வராகவோ, கட்சியின் பொதுச்செயலாளராகவோ இருந்தாலும் அந்த பணத்தை கட்சி பெயரிலோ, அரசு பெயரிலோ சேர்க்கவில்லை.

மாறாக தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொண்டார். அவர் 2 பதவிகளை வகித்ததில் எங்களுக்கு கவலை இல்லை. அரசு ஊழியராக இருந்தவர் பெரிய அளவில் பரிசுகளை ஏற்றுக்கொண்டது ஊழல் தடுப்பு சட்டம் 11வது பிரிவின் கீ்ழ் சட்ட விரோதமானது. ஆகவே, அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய போதுமான ஆதாரம் உள்ளது. அவருக்கு எதிராக வழக்கு தொடர கவர்னர் அனுமதி தந்துள்ளார். இந்த காரணங்களுக்காக அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது.

ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சிபிஐ தனது மனுவில் கூறியுள்ளது.

சிபிஐயின் இந்த மனுவுக்கு பதில் கூற காலஅவகாசம் வேண்டும் என்று ஜெயலலிதாவின் வக்கீல் நவநீதகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். நீதிபதி இதை ஏற்று விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X