ஜார்க்கண்ட் - காங்கிரஸை பிடித்து தொங்கும் லாலு

கடந்த 2005ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது.
அங்கு தேர்தல் முன்னதாக நடத்தப்பட வேண்டும் பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இம்முறை தனித்து போட்டியிடும் வாய்ப்பு அதிகமருப்பதாக சிபு சோரன் தெரிவித்தார். இதன்மூலம் அவர் காங்கிரஸூடனான கூட்டணிக்கு முழுக்கு போட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொண்டு ஜார்க்கண்டில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்ள ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் முடிவு செய்துள்ளார்.
அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது கட்சி தலைவர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடைய கட்சி தலைவர்கள் காங்கிரஸூடன் கூட்டணி வைத்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின் லாலு கூறுகையில்,
சோனியா காந்திக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதில் காங்கிரஸும், நாங்களும் ஒரே பாதையில் தான் செல்கிறோம். நான் காங்கிரஸை விட்டு எப்போதும் விலகமாட்டேன்.
மதவாத சக்திகளை அழிக்க பீகாரிலும், ஜார்க்கண்டிலும் மதசார்பற்ற கட்சிகள் திரண்டு போட்டியிடும். இது தொடர்பாக சோனியாவிடம் பேசினேன். விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
ஆனால், காங்கிரஸோ அவரை சுத்தமாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் மட்டுமே தந்து வெறுப்பேற்றிய லாலுவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸார் கூறி வருவதாக தெரிகிறது.