கேரள அணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற முடியாது - தமிழக அரசு

முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளா புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மத்திய அரசு இதுவரை கேரளாவுக்கு சாதகமாக அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், அதற்கு இடைக்கால தடை கோரி உச்சநீதிமன்றத்தை தமிழக அரசால் அணுக முடியாது.
ஒரு வேளை அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
தமிழக அரசைப் பொறுத்தவரை கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் நமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம். உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதையும் தெரிவித்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.