For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்தாத் இரட்டை குண்டுவெடிப்பு பலி 132 ஆனது- ஒபாமா கண்டனம்

Google Oneindia Tamil News

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசு அலுவலகங்களைக் குறி வைத்து நேற்று நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோரச் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏராளமான கார்கள் சேதமடைந்து விட்டன. உயிரிழந்தோரின் உடல்கள் சிதிலமடைந்து தெருக்களில் சிதறிக் கிடந்தன. இந்த ஆண்டில் ஈராக்கில் நடந்த மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் இது.

டைக்ரீஸ் ஆற்றுக்கு அருகில் அரசு அலுவலகங்கள், தூதரகங்கள், பிரதமரின் அலுவலகம் ஆகியவை அடங்கியுள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது

முதல் குண்டு, நீதித்துறை அமைச்சக அலுவலகத்தைக் குறி வைத்து நடந்தது. அதற்கு அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு அரசு கட்டடத்தைக் குறி வைத்து குண்டு வெடித்தது.

இதுகுறித்து பிரதமர் நூரி அல் மாலிக்கி வெளியிட்ட அறிக்கையில், ஈராக் மக்களை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மிதக்க வைக்கும் சதித் திட்டமே இது. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, அரசியல் நடைமுறைகளை சீர்குலைத்து, நாடாளுமன்றத் தேர்தலை தடுக்கும் முயற்சியே இது என்றார்.

இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு சிரியாவே காரணம் என்று ஈராக் அரசு மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் பாத் கட்சியினர் (சதாம் உசேன் கட்சி), சன்னி முஸ்லீம் பிரிவினருமே இந்த வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் பணம் கொடுத்துத் தாக்குதல் நடத்த ஏவி விடுவதாகவும் ஈராக் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேசமயம், ஷியா முஸ்லீம்களை ஈரான் தூண்டி விட்டு கலகத்தை ஏற்படுத்தி வருவதாகவும் ஈராக்கியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஈராக் அதிபர் ஜலால் தலபானி கூறுகையில், அருகாமையில் உள்ள நாடுகள் ஈராக் விவகாரத்தி்ல் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பது, தூண்டி விடுவது, அடைக்கலம் கொடுப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். இந்த செய்கள் ஈராக் நாட்டுக்கு எதிராக பகிரங்கமாக விடப்படும் போர் அழைப்பாகும் என்றார்.

இந்த நிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் சிதறிக் கிடக்கும் உடல் பாகங்களை சேகரிக்கும் பணியில் பாதுகாப்புப் படையினர், மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். எரிந்து போய்க் கிடக்கும் வாகனங்கள், கட்டடங்களில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

நீதித்துறை அமைச்சக அலுவலகக் கட்டம் இடிந்து தரை மட்டமாகி விட்டது. அதை அகற்றும் பணி நடக்கிறது. கட்டட இடிபாடுகளுக்குள் பல உடல்கள் சிக்கியுள்ளன.

தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்களை அமெரிக்கா தந்து உதவியுள்ளது.

வேன்களில் குண்டுகளைக் கொண்டு வந்து வெடிக்கச் செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் சீனத் தூதரகம் அமைந்துள்ள அல் மன்சூர் ஹோட்டலும் சேதமடைந்துள்ளது.

ஒபாமா கண்டனம்...

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஈராக்கில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு எனது கடும் கண்டனத்தையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.

இச்சம்பவத்தின் மூலம் ஒன்றும் அறியாத பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது வெறுக்கதக்கது. இவர்களின் யோக்கியதையை ஈராக் மக்கள் எதிர்காலத்தில் அறிந்து கொள்வார்கள்.

ஈராக்மக்களுக்கும், அரசுக்கும் அமெரிக்கா நல்ல நண்பனாகவும், கூட்டாளியாகவும் திகழும். ஈராக்கில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதன் மூலம் அமைதியும் நல்ல எதிர் காலமும் அமையும் என்றார்.

இத்போல ஹில்லாரி கிளிண்டனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X