For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதாயம் தேடுவது நானல்ல, கேரளாதான்-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் நான் தேடவில்லை. கேரளாதான் பல்வேறு வழிகளில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள் அறிக்கை:

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையிலே உள்ளது. இந்த நேரத்தில், கேரள அரசு மேலும் மேலும் தீர்ப்புகளை மதிக்காமலும், ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நீதிபதிகள் தெரிவிக்கிற கருத்துகளை ஏற்க மறுத்தும் அடுத்தடுத்த காரியங்களிலே ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக, கேரள முதல்வர் அச்சுதானந்தன், நான் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக என்மீது குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து முதல்கட்டமாக 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட போதும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருக்க, கோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவே ஒரு புதிய சட்டத் திருத்தத்தை அவசர அவசரமாக கேரள சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. அதற்குப் பெயர்தான் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி.

புதிய அணை கட்டுவது பற்றிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலே உள்ள நிலையில், தமிழக அரசுக்கும் தெரிவிக்காமல், மத்திய அரசுக்கும் தெரிவிக்காமல், சுப்ரீம் கோர்ட்டுக்கும் தெரிவிக்காமல், தன்னிச்சையாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டதே, அதற்குப் பெயர்தான் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி.

அணை கட்டுவது பற்றி வனப் பகுதியிலே ஆய்வு நடத்த தமிழக அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் தெரிவிக்காமல், மத்திய அரசின் தேசிய வன உயிரினங்கள் வாரியத்தின் மூலமாக ஒப்புதல் பெற, கேரள அரசின் சார்பில் தாக்கல் செய்த மனுவிலே, புதிய அணை கட்டுவது சம்பந்தமாக எந்த வழக்கும் கோர்ட்டில் நிலுவையிலே இல்லை என்று கூறி, மத்திய அரசுக்கே தவறான தகவலைத் தந்து, ஒப்புதல் பெற்ற செயல் இருக்கிறதே, அதுதான் குறுக்குவழியில் சட்டவிரோதமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி.

இரண்டு மாநில அரசுகளும் மத்திய அரசையும், சுப்ரீம் கோர்ட்டையும் அணுகி வாதாடிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு மாநில முதல்வர், இன்னொரு மாநில முதல்-அமைச்சரைப் பற்றி அபாண்டமாக குற்றஞ்சாட்டுவதற்குப் பெயர்தான் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி.

தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையினால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவித்த பிறகும், 40 லட்சம் மக்களின் உயிர் பற்றிய பிரச்சினை என்ற ஒரே காரணத்தைத் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே கூறி, வீணாக வதந்தியைப் பரப்பி, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி அதிலே ஆதாயம் தேடும் முயற்சியிலே கேரள அரசுதான் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

23.11.1979 அன்று மத்திய நீர் ஆணையத் தலைவர் டாக்டர் கே.சி. தாமசும், இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த என்ஜினீயர்களும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு, செய்தியாளர்களிடம், அணைக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று அறிவித்தார்.

மீண்டும் 25.11.1979 அன்று திருவனந்தபுரத்தில் இரு மாநில அதிகாரிகளையும் கலந்தாலோசித்த பிறகு, டாக்டர் கே.சி. தாமஸ், முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று அறிவித்தார்.

இருந்த போதிலும், அணையைப் பலப்படுத்துவதற்கு 3 கட்டங்களாக நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அறிவுரை வழங்கினார். அவ்வாறே அணையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் 29.4.1980 அன்று டெல்லியில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் இரண்டு மாநிலப் என்ஜினீயர்களுடன் அணையைப் பலப்படுத்தியது பற்றி ஆய்வு செய்து விட்டு, பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன் அணையின் நீர் மட்டத்தை 145 அடி வரை உயர்த்தலாம் என்று தெரிவித்தார்.

8.6.1985 அன்று மத்திய நீர்வள ஆணையத்தின் உறுப்பினர் அணையை ஆய்வு செய்த பிறகு, அணை பாதுகாப்பாக உள்ளது, எனவே 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்கி வைக்கலாம் என்று தன் சோதனை அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார். எனவே, அணை பாதுகாப்பாக இல்லை என்று கூறி பிரச்சினையை திசை திருப்புவது எந்தவிதத்திலும் ஏற்கத் தக்கதல்ல.

2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அன்று டெல்லிக்கு முதல் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த என்னை பிரதமர் மன்மோகன் சிங் அழைத்து இரண்டு மாநில முதல்வர்களும் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தும்படி யோசனை கூறினார். அதையேற்று டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் நானும் கேரள முதல்வர் அச்சுதானந்தனும், இரண்டு மாநில பாசனத் துறை அமைச்சர்களும் கலந்து பேசினோம்.

அப்போது நான், முல்லைப் பெரியாறு அணையில் நீர்க்கசிவு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து உண்மையைக் கண்டறிந்திட, இரு தரப்பினருக்கும் பொதுவாக மத்திய அரசே இரு மாநிலத்தையும் சேராத பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு கணக்கெடுத்துக் கூறட்டும், தமிழ்நாட்டிற்கு அதிலே ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தேன்.

ஆனால் கேரள முதல்வர், அது குறித்து பரிசீலிப்பதாகவும், அதிகாரிகளை கலந்து கொண்டு முடிவினை தெரிவிப்பதாகவும் கூறினார். ஆனால் எந்த பரிசீலனையும் கேரள அரசினால் நடத்தப்படவில்லை; அதற்கு மாறாக அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டைத்தான் நம்மீது சுமத்த முடிகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

நிலநடுக்கம் வந்தாலும் அணைக்கு பாதிப்பு ஏற்படாது:

இந் நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக அரசின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.

நீதிபதிகள் டி.கே.ஜெயின், முகுந்த் சர்மா, ஆர்.எம்.லோதா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மக்களின் நலன் மிகவும் முக்கியம் என்றனர்.

இதையடுத்து வாதாடிய தமிழக அரசின் வக்கீல் வி.ஏ.பாப்வே,

முல்லைப் பெரியாறு அணை இயற்கையாகவே மலைகளால் சூழப்பட்டு இருப்பதால் கூடுதலாக நீரை தேக்கி வைக்கும் வகையில் பலம் பொருந்தியதாக உள்ளது. நில நடுக்கம் குறித்து கேரள அரசால் நியமிக்கப்பட்ட குழு அளித்த விவரங்கள் அபத்தமானதாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் உள்ளது. மேலும் அணைப்பகுதியில் இருந்து பல நூறு கிலோ மீட்டருக்கு அப்பால்தான் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கேரள அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தின் காரணமாகவோ அல்லது மேற்கு தொடர்ச்சி மலையில் கூடுதலாக பெய்யும் மழையினால் வரும் நீரின் காரணமாகவோ முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கேரள அரசுக்காக ஐ.ஐ.டி. நிபுணர்கள் அளித்த அறிக்கையில், அதிக மழை பொழியும் பட்சத்தில் அணைக்கு ஆபத்து ஏற்படும் என்று ஊகத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருப்பது தவறான கருத்து ஆகும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X