For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீரிய பணியாற்றும் காவல்துறையினரை போற்றிப் பாராட்டிட வேண்டும் - கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: காவல் துறையினர் ஆற்றி வரும் கடமையைப் பொதுவாக நாம் போற்றிட வேண்டும். அங்கொன்றும், இங்கொன்றுமாக நேர்ந்துவிடும் நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, காவல் துறையினரையே குற்றஞ் சொல்லிக் குறை காண்பது, அவர்களின் நீண்ட நெடிய தொண்டற வாழ்க்கையில் திடீரென்று ஒரு கறும்புள்ளியைக் குத்தி அவர்கள் தொடர்ந்து சீரிய பணியாற்றுவதற்கு தயக்கம் ஏற்படுத்த முயல்வதும் வரவேற்கத்தக்க ஒன்றல்ல என்பதோடு; சமுதாயக் கேடாகவே அமையும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது...

காவல் துறையைப் பொறுத்தவரையில் என்னுடைய கருத்து; எதிர்க் கட்சியில் நான் இருக்கும்போது ஒரு விதமாகவோ, ஆளுங்கட்சியில் இருக்கும்போது இன்னொரு விதமாகவோ என்றைக்கும் இருந்ததில்லை.

பொதுவாக நம்முடைய நாட்டில் அரசியல்வாதிகள் சிலருக்கு; ஏன்; இன்னும் சொல்லப் போனால் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கே போலீஸ் என்றால் ஒரு காழ்ப்பு - ஒரு வெறுப்பு - அவர்களைக் கண்டனம் செய்வதிலே தனி விருப்பு என்ற நிலை இன்னும் கூட மாறாமல் இருக்கின்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இதற்கு மாறாக, ஆளுங்கட்சியாக இருந்த போதிலும்; எதிர்க்கட்சியாக இருந்த நிலையிலும் காவல் துறையினர் பற்றி கொண்டிருந்த கருத்துகளை முகப்பிலேயே தொகுத்தளிக்க விரும்புகிறேன்.

தியாக சீலர்கள்...

1962-ம் ஆண்டு எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்தபோது காவல்துறை மானியத்தில் சட்டமன்றத்தில் 12.7.1962 அன்று நான் பேசியது வருமாறு:

கடும் மழையிலும், கொடிய வெயிலிலும், நள்ளிரவிலும் தங்கள் பணியினை கொலைகாரர்கள் மத்தியிலும், கள்வர்களிடையிலும் தங்கள் உயிரைப் பற்றிய கவலை இல்லாமல் மரணத்தைத் துச்சமாக மதித்து கடமைக்காகப் போராடி வருகின்ற அந்தத் தியாக சீலர்களை தி.மு.க. பாராட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கிறது

இந்த என் கருத்தை யார் மறந்தாலும் காவல்துறை நண்பர்கள் மறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காவல் துறையினரின் வாழ்க்கைத் தரம் குறித்து தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, "உதயசூரியன்'' நாடகத்திற்காக போலீசாருக்குச் சார்பாக நான் இயற்றி, தடை செய்யப்பட்டிருந்த ஒரு தாலாட்டுப் பாட்டையே பேரவையிலே பதிவு செய்ய அங்கே பாடிக் காட்டினேன்.

போலீஸ் கமிஷன் அமைத்தேன்...

இதன் தொடர்ச்சியாகத் தான் 1969-ம் ஆண்டு நான் முதல்வராகப் பொறுப்புக்கு வந்ததும், காவலர் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்த வேண்டுமென்று கருதி, தமிழ்நாட்டிலே வெள்ளைக்காரன் காலத்திலிருந்து அதுவரை உருவாக்கப்படாத காவல் துறைக்கான தனிக் குழு (போலீஸ் கமிஷன்) ஒன்றையே ஏற்படுத்தி, அதன் பரிந்துரைகளைப் பெற்று நடைமுறைப்படுத்தினேன்.

அதற்குப் பிறகும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் மேலும் இரண்டு முறை காவல் துறைக்கான கமிஷன் அமைக்கப்பட்டது. இவற்றின் பரிந்துரைகளின் விளைவாகத்தான் 1967-ம் ஆண்டிலே காவலர்களுடைய அடிப்படை சம்பளம் ரூ.70 ஆகவும், பஞ்சப்படி ரூ.59 ஆகவும் இருந்தது; தற்போது காவலர்களுடைய அடிப்படை சம்பளம் ரூ.7,300 ஆகவும், அகவிலைப்படி உள்பட; மொத்தம் ரூ.10,300 என உயர்ந்துள்ளது.

மக்கள் தொண்டில் 150-ம் ஆண்டினைக் கொண்டாடும் தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து மாநிலத்தில் பெரிய அளவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் ஊனம் ஏதும் நிகழாமல் காத்திட தன்னால் இயன்ற அளவிற்குப் பாடுபட்டு வருகிறது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.

சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்கள் ஏதுமின்றி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டதற்கு பெரிதும் காரணம் காவல்துறை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

நக்சலைட்டுகளை முறியடித்தனர்..

கொடைக்கானல் வனப்பகுதியில் பயிற்சி முகாம் ஒன்றை அமைக்க முற்பட்ட தீவிரவாதிகளின் முயற்சிகளை தமிழ்நாடு காவல் துறையினர்தான் முறியடித்தனர்.

சரியான தருணத்தில் 22 பேரை கைது செய்து, அவர்களில் 12 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததன் மூலம் பிரிவினை சக்திகள் மேற்கொண்ட மத நல்லிணக்கத்தைத் தகர்க்கும் வன்முறை முயற்சிகளை காவல் துறையினர்தான் தடுத்துள்ளனர்.

மக்கள் போர்ப்படை குழுவின் நிறுவனரும், நான்கு நிலக்கிழார் கொலைகளில் சம்பந்தப்பட்டு, கடந்த 37 வருடங்களாக தலைமறைவாக இருந்தவருமான நக்சலைட் தீவிரவாதி தமிழ்வாணனை 12.04.2009 அன்றும், 1980-ல் ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் மற்றும் மூன்று நக்சலைட்டுகளை கொன்றுவிட்டு, காவலில் இருந்து தப்பித்து, கடந்த 38 வருடங்களாக தலைமறைவாக இருந்த ஜோலார்பேட்டையைச் சேர்ந்த நக்சலைட் தீவிரவாதி சிவலிங்கம் (எ) சிவா என்பவரையும், அவரது சகா சாமி (எ) சாமிநாதன் ஆகியோர்களை 10.05.2009 அன்றும், ஆயுள் தண்டனை அடைந்து, பரோலில் சென்று, கடந்த 22 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த நக்சலைட் தீவிரவாதி என்.கே.கோபால் என்பவரை 24.6.2009 அன்றும் காவல் துறையினர் கைது செய்தனர்.

குற்றவாளிகளை உடனே பிடிக்கிறார்கள்...

குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து வருவதாலும், நமது மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு; அதனால், 2006-ம் ஆண்டு 89 சதவீத குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, களவுபோன சுமார் 34.8 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இதே போன்று, 2007-ம் ஆண்டு 87 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 48.7 கோடி ரூபாய் மதிப்புள்ள 83 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டும், 2008-ம் ஆண்டு 82 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 47.61 கோடி ரூபாய் மதிப்புள்ள 76 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டும், இவ்வாண்டும் செப்டம்பர் வரை 72 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 39.7 கோடி ரூபாய் மதிப்புள்ள 66 சதவீத சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஒரு சில வழக்குகள்:

சென்னை நகரில், மின்ட் தெருவிலுள்ள சந்திரபிரபு ஜெயின் கோவிலில், பூசாரி ஒருவரை கொலை செய்து, சுமார் 1.2 கோடி மதிப்புள்ள 22 கிலோ கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், ஆறு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு, 9.2 கிலோ தங்க நகைகள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னையில் கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, 15 வருடங்களாக தலைமறைவாக இருந்த தண்டையார் பேட்டையைச் சேர்ந்த குப்பன் என்பவரும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த மன்னார் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த மணியரசு ஆகியோரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து, 88 சவரன் தங்க நகைகள் உள்பட சுமார் 21 லட்சம் மதிப்புள்ள களவு போன பொருட்கள் மீட்கப்பட்டன.

சென்னை, பூக்கடை, சவுகார்பேட்டை நகை வியாபாரி சுரேஷ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 2.15 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளி நேமிசந்த் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து, களவு போன சொத்துகள் கைப்பற்றப்பட்டன.

சென்னை, சவுகார்பேட்டையில் ரத்தன் ஆர்.ஜெயினி என்பவரிடமிருந்து ரூ.50 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கொள்ளையடித்து சென்ற வழக்கில் ஆறு எதிரிகள் கைது செய்யப்பட்டு, ரூ.44.5 லட்சம் கைப்பற்றப்பட்டது.

சென்னை நகரில், கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு இடங்களில் நடந்த திருட்டு மற்றும் கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரி சுஹேல் அகமது என்பவர் கைது செய்யப்பட்டு, 25 வழக்குகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 301 சவரன் தங்க நகைகள், 14 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.

சென்னை காவல் துறையினர், கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த மலர்மன்னன் என்ற குற்றவாளியை கைது செய்து, 45 வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 325 சவரன் தங்க மற்றும் வைர நகைகள் மற்றும் 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர்.

சென்னை, அண்ணாநகரில் அசோக் மால்பானி மற்றும் அவரது மனைவியிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் பணம் ரூ.10 லட்சம் ஆகியன கைப்பற்றப்பட்டன.

சென்னை, தியாகராயநகர், பிராட் லைன் கம்ப்யூட்டர்ஸ் சிஸ்டம்' என்ற நிறுவனத்திலிருந்து வெஸ்கோஸ் ப்ராபர்டிஸ் அன்ட் டெவலப்பர்ஸ்' உரிமையாளர் சரவணன் என்பவர் மோசடி செய்து பெற்ற ரூ.1.27 கோடி மதிப்புள்ள 250 கணினிகளையும், 300 மடிக் கணினிகளையும் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் எதிரியை கைது செய்து, அப்பொருட்களை கைப்பற்றினர்.

சென்னை புறநகர் காவல் துறையினர், 52 கன்னக்களவு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஸ்ரீகாந்த் மற்றும் ஆறு குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.34 லட்சம் மதிப்புள்ள 300 சவரன் நகைகளை கைப்பற்றினர்.

சென்னை புறநகர் காவல் துறையினர், வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஸ்ரீதர் மற்றும் ஐந்து நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நான்கு கார்கள், நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினர்.

சென்னை புறநகர் காவல் துறையினர், உமா மகேஸ்வரி மற்றும் மூன்று நபர்களை கைது செய்து, சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தொன்மை வாய்ந்த 24 ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர்.

200 வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஏற்கனவே ஜந்து முறை குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷையும், அவருடன் சேர்ந்த மற்ற மூன்று குற்றவாளிகளையும் 20.5.2009 அன்று சென்னை புறநகர் காவல் துறையினர் கைது செய்து 70 சவரன் தங்கநகைகளையும், வெள்ளி ஆபரணங்களையும் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில், வேப்பூர் அருகில் திருச்சியிலிருந்து வந்த லாரியை வழிமறித்து ரூ.3.72 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், இருளாண்டி மற்றும் 12 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.2.85 கோடி பணத்தைக் கைப்பற்றினர்.

கோவை மாவட்டத்தில் 15 வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட, ஆண்டிப்பட்டி முத்து என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 100 சவரன் நகைகளும், நான்கு கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட யோகேஷ், சரவணன், குணா, மனோகரன் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன.

திருச்சி மாவட்ட காவல் துறையினர், ஹவுரா விரைவு ரயில் வண்டியில் கடத்தி செல்லப்பட்ட ரூ.5.5 கோடி மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி சகாயராஜ் உள்ளிட்ட இரு எதிரிகளை கைது செய்தனர்.

கரூர் மாவட்ட காவல்துறையினர் ஒரு வெடிமருந்து கடையில் இருந்து 32,522 மின் டெட்டனேட்டர்கள் மற்றும் 4,532 சாதாரண டெட்டனேட்டர்களை திருடிய எட்டு குற்றவாளிகளை கைது செய்து, வெடிபொருட்களை மீட்டனர்.

ரயில்வே காவல்துறையினர், ராஞ்சியை சேர்ந்த ராஜன் ராம் மற்றும் அமர்நாத் ஜெய்ஸ்வால் ஆகியோரை கைது செய்து 34 ரெயில் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300 சவரனுக்கும் அதிகமான தங்க நகைகள் கைப்பற்றினர்.

விஜயன் கொலை வழக்கில் திறமையான விசாரணை..

மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையினர், திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கரன் என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை வழக்கிலும் திறமையாக புலன் விசாரணை செய்து எதிரிகளை கைது செய்தனர்.

மேலும், கோல்டு குவெஸ்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' சம்பந்தப்பட்ட தங்கக்காசு மோசடி வழக்கில் இத்துறையினர் திறமையாக விசாரணை செய்து, 25 எதிரிகளை கைது செய்து, சுமார் ரூ.192 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி வைத்து, எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பொருளாதார குற்றப்பிரிவினர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் வலங்கைமானைச் சேர்ந்த செந்தில் ஆகியோரை கைது செய்து, திருவாரூர், திருத்துறைப்பூண்டி அருள்மிகு மருந்தீஸ்வரர் உடனுறை பெரிய நாயகி அம்மன் கோவிலில் எட்டு மாதங்களுக்கு முன்பு களவு போன கோடிக்கணக்கில் மதிப்புள்ளதெனப்படும் தொன்மைவாய்ந்த மரகதலிங்கத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மூன்றாண்டு காலக்கட்டத்திலேயே தங்கள் உயிரைப் பணயம் வைத்து சமூக எதிரிகளோடும், கள்வர்களோடும் போராடி, காவல் துறையினர் பெற்றிருக்கும் வெற்றிகளின் காரணமாக விளைந்துள்ள சாதனைகளை நாம் பாராட்டிட வேண்டும்.

போற்றிடத்தான் வேண்டும்...

சமுதாயப் பாதுகாப்புக்காக - சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பதற்காக - மனித உயிர்களையும் உடைமைகளையும் காப்பதற்காக; காவல் துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் எண்ணற்றவை மட்டுமல்ல; எண்ணிப் பார்த்திடவே இயலாதவை. குற்ற நிகழ்வுகளில் கடைப்பிடிக்கப்படும் உயர் தொழில்நுட்பங்கள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.

எனவே காவல் துறையினர் ஆற்றி வரும் கடமையைப் பொதுவாக நாம் போற்றிடத்தான் வேண்டும். அங்கொன்றும், இங்கொன்றுமாக நேர்ந்துவிடும் நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, காவல் துறையினரையே குற்றஞ் சொல்லிக் குறை காண்பது, அவர்களின் நீண்ட நெடிய தொண்டற வாழ்க்கையில் திடீரென்று ஒரு கறும்புள்ளியைக் குத்தி அவர்கள் தொடர்ந்து சீரிய பணியாற்றுவதற்கு தயக்கம் ஏற்படுத்த முயல்வதும் வரவேற்கத்தக்க ஒன்றல்ல என்பதோடு; சமுதாயக்கேடாகவே அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுவது எனது கடமையென்பதால் இந்த நீண்ட கடிதம் எழுத நேரிட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் - போலீஸ் மோதல் தொடர்பாக நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் காவல்துறையின் சிறப்புகள், சேவைகள் குறித்து முதல்வர் வெகுவாகப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X