For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மழைக்குப் பலியானோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கன மழையில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக அளவிலான உயர்ச்சேதம் நீலகிரி மாவட்டத்தில்தான் ஏற்பட்டுள்ளது.

புயல் சின்னம் அரபிக் கடலில் குஜராத் - கொங்கன் கடற்கரையை நோக்கி மேலும் நகர்ந்துள்ளதால் தற்போது மழையின் அளவு சற்று குறைந்துள்ளது.

மழைக்கு இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 42 பேர் இறந்துள்ளனர். பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கிக் கிடந்த மழை நீர் தற்போது வடியத் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிரம்பும் அணைகள் - குளங்கள் - ஏரிகள்

தமிழகம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கன மழையால் வேகமாக நிரம்பி வருகின்றன.

மேட்டூர் அணைக்கு தண்ணீர் தரக்கூடிய நீர்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அங்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. அதேநேரத்தில், பரம்பிக்குளம், ஆழியாறு, குண்டாறு உள்ளிட்ட பல அணைகள் நிரம்பிவிட்டன.

தமிழகத்தில் இதுவரை 13 அணைகள், 2 ஆயிரத்து 753 ஏரிகள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 81 அணைகள் உள்ளன. இதில், பரம்பிக்குளம், ஆழியாறு, குதிரையாறு, வரதமாநதி, கிருஷ்ணகிரி, கலவரப்பள்ளி, சின்னாறு, சோத்துப்பாறை, குண்டாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி உள்பட 13 அணைகள் நிரம்பி வழிகின்றன.

வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி. தற்போதைய நீர்மட்டம் 67.32 அடியாக உள்ளது. அணை வேகமாக நிரம்பி வருவதால், வைகை நதியோரத்தில் வசிப்பவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 710 ஏரிகள் உள்ளன. இதில், திருச்சி மண்டலத்தில் 417 ஏரிகளும், சென்னை மண்டலத்தில் 393 ஏரிகளும், பொள்ளாச்சி மண்டலத்தில் 54 ஏரிகளும், மதுரை மண்டலத்தில் 1,889 ஏரிகளும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 753 ஏரிகள் நிரம்பியுள்ளன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 938 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 535 கனஅடியும், புழல் ஏரிக்கு வினாடிக்கு 726 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,116 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்று பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X