For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு பொருப்பும் இல்லாத கார்த்தி!- விளம்பர படோடபம்!!

Google Oneindia Tamil News

Karthi
சென்னை: காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக மட்டுமே பொறுப்பு வகித்து வரும், ப.சிதம்பரம் கோஷ்டியின் 'இளைய தளபதி'யான கார்த்தி சிதம்பரத்தின் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் செய்துள்ள விளம்பர படோடபங்கள் மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இப்படி ஒரு கோஷ்டிப் பூசலை காந்தி காலத்தில் கூட காங்கிரஸ் கட்சி பார்த்திருக்காது. அந்த அளவுக்கு தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு கோஷ்டியில்தான் போய் விழ வேண்டும். காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய வேகத் தடைகளாக மாறி உள்ளனர் இந்த வேதனைத் தலைவர்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில்தான் திருநாவுக்கரசர் காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்களும் காங்கிரஸில் இணையவுள்ளனர். நிச்சயம் இது ஒரு கோஷ்டியாகத்தான் செயல்படும்.

இப்படி கோஷ்டிகளின் எண்ணிக்கைப் பல்கிப் பெருகிக் கொண்டே போவதால், ஒவ்வொரு கோஷ்டித் தலைவரும், தனது பலத்தையும், ஆதிக்கத்தையும், இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும், மேலிடத்திற்குக் காட்டவும் என்ன செய்கிறோம் என்ற விவஸ்தையே இல்லாமல், எதையாவது தாட்பூட் தஞ்சாவூராக செய்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் - கட்சியை தேற்றுவதில் கவனம் செலுத்தாமல்.

ப.சிதம்பரம் கோஷ்டியின் 'தமிழக தலைவரான' கார்த்தி சிதம்பரத்திற்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் செய்துள்ள ஆர்ப்பாட்டங்களைப் பார்த்து மக்கள் முகம் சுளித்து வருகின்றனர்.

சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள்தான். கார்த்தி சிதம்பரத்தை விதவிதமான போஸ்களில் நிறுத்தி வைத்து அந்த போஸ்டர்கள் கச்சை கட்டி பறக்கின்றன.

அதேபோல பத்திரிக்கைளில் ஏகப்பட்ட விளம்பரங்கள் - கார்த்தியை வாழ்த்தி. தமிழ் பத்திரிக்கைகளின் பெங்களூர் பதிப்புகளில் கூட ஏகப்பட்ட விளம்பரங்கள். ஒருவேளை அங்கும் யாரையாவது வைத்து கார்த்தி சிதம்பரம் கோஷ்டியின் கிளையை கர்நாடகத்தில் பரப்பும் திட்டமோ என்னவோ.

குறிப்பாக சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளான கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி ஏகப்பட்ட வாழ்த்து விளம்பரங்களைக் கொடுத்து அசத்தியுள்ளார்.

சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொள்ள வந்த விழாவுக்காக வைக்கப்பட்ட விளம்பரத்தில் அசோக சக்கரத்தை தூக்கி விட்டு அங்கு ராகுல் காந்தியையும், ப.சிதம்பரத்தையும் போட்டு அக்கப் போர் செய்தது கார்த்தி சிதம்பரம் கோஷ்டி.

திமுகவில் எம்.பியாக உள்ள ஜே.கே. ரித்தீ்ஷ்தான் இப்படி விளம்பரங்களைப் போட்டு அதிலேயே வாழ்வதில் பெரும் சாதனை படைத்தவர். தற்போது அவரைத் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட ஆரம்பித்துள்ளது கார்த்தி சிதம்பரம் கோஷ்டி.

கோஷ்டியின் வலிமையைக் காட்டும் வகையிலேயே இந்த அட்டகாசங்கள் நடைபெறுவதால் மூத்த காங்கிரஸார் வேதனைப்படுகின்றனர். மக்களோ ;ஏன் இந்த கொலை வெறி; என்று வடிவேலு பாணியில் முகம் சுளிக்கின்றனர்.

கார்த்தி சிதம்பரம் ஒரு திணிக்கப்பட்ட தலைவர் என்பது எல்லோருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியில் அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். கருத்து என்ற பெயரில் கனிமொழியுடன் சேர்ந்து ஒரு அமைப்பை நடத்தி வந்தார்.

ப.சிதம்பரத்தின் பிரதிநிதியாக, அவரது ஆதரவாளர்களுக்கான ஒரு பிளாட்பார்ம் ஆக தமிழகத்தில் செயல்படுகிறார்.

காங்கிரஸ் கட்சிக்காகவோ அல்லது மக்கள் நலனுக்காகவோ எந்த ஒரு போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டதாக நினைவில்லை. ஆனாலும் திடீர் திடீரென இப்படி போஸ்டர் பிரளயத்தை ஏற்படுத்தி நாங்களும் இருக்கோம் என்று காட்டிக் கொண்டு வருகிறாகள் கார்த்தி கோஷ்டியினர்.

கார்த்தி சிதம்பரம் பிறந்த நாளையொட்டி, சென்னையில் தடபுடலாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

எழும்பூர் கவுன்சிலர் ருக்மாங்கதன் தலைமையில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் சாய் நகரில் இன்னவோ பிரைவேட் லிமிடெட் சார்பில் 500 ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் வழங்கி 3 மாத இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.பி. அழகிரி கலந்து கொண்டு இலவச கம்ப்யூட்டர்களை வழங்கி வாழ்த்தி பேசுகிறார்.

அதேபோல எழும்பூர் மேகாலட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து ஏழை எளியோருக்கு வேட்டி- சேலை வழங்குகிறார். பெரம்பூர் சம்பத் என்பவர் 500 விளையாட்டு வீரர்களுக்கு இலவச உடைகள் வழங்குகிறார்.

பட்டாளம் சுந்தரம் என்பவர் ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச சீருடையும், குமாரமுருகன் 300 மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகமும் வழங்குகிறார்.

மந்தவெளி மூர்த்தி என்பவர் 1000 பேருக்கு அன்னதானமும், எம்.எம்.டி.ஏ. ரகு, அசோகன் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச பல் மருத்துவ முகாம் நடத்தி பேஸ்ட் பிரஷ் வழங்குகின்றனர்.

காங்கிரஸ் மகளிர் அணியைச் சேர்ந்த வெண்ணிலா சி.எஸ்.ஐ. சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை செய்து இனிப்பு வழங்குகிறார்.

சேத்துப்பட்டு ரமேஷ், நரேன் ஆகியோர் சேத்துப்பட்டு மகப்பேறு மருத்துவமனையில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்குகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிவக்குமார் ரமேஷ் வலசை நெப்போலியன் ஆகியோர் அனாதை இல்லத்தில் மதிய விருந்து அளிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் ஸ்பான்சர் செய்பவர் எழும்பூர் கவுன்சிலர் ருக்மாங்கதன்.

அதேபோல, பல்லாவரம் சோனியா பேரவை சார்பில் பம்மலில் இன்று மாலை 4 மணிக்கு 100 ஏழை பெண்களுக்கு சேலை வழங்கப்படுகிறது. மாநில பொதுக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான ஆர்.எஸ். செந்தில்குமார் இதை வழங்குகிறார்.

பல்லாவரத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரொட்டி, பால், பிஸ்கட் வழங்குகிறார். தாம்பரம் அனாதை இல்லத்தில் உள்ள 250 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. முதியவர்கள், பள்ளி மாணவர்கள், ஏழைப் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆர்.எஸ். செந்தில் குமார் வழங்குகிறார்.

கட்சிப் பணியிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி இதுவரை பெரிய அளவில் எந்த சாதனையும் படைக்காத நிலையில் கார்த்தி பிறந்த நாளா அல்லது காந்தி பிறந்த நாளா என்று சந்தேகம் வரும் அளவுக்கு படு அமோக ஆர்ப்பாட்டமாக இருக்கிறது கார்த்தி சிதம்பரத்தின் பிறந்த நாள்.

இதையெல்லாம் விட்டு விட்டு முல்லைப் பெரியாறு அணைக்காகவும், இன்ன பிற தமிழக மக்களின் உயிர்நாடிப் பிரச்சினைகளுக்காகவும் பெரும் போராட்டங்களையும், டெல்லி வரை சென்று போராட்டம் நடத்தும் துணிச்சலையும் இந்த அரசியல்வாதிகள் பெற்றால் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, அப்பாவி பொதுமக்களும் கூட கஷ்டப்பட்டு கடனை உடனை வாங்கியாவது போஸ்டர் அடித்து நிச்சயம் வாழ்த்துவார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X