For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களே கவனம்!-போலீஸ் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: குடும்பப் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் கேமரா செல்போனில் படம் பிடித்து அவற்றை ஆபாச கோணத்தில் இன்டர்நெட்டில் வெளியிடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸார் எச்சரித்துள்ளனர்.

கள்ளம் கபடம் இல்லாமல், தங்களுடன் சகஜமாக பேசும் குடும்பப் பெண்களை, அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமரா செல்போன் மூலம் ஆபாச கோணத்தில் படம் பிடித்து அதை இன்டர்நெட்டிலும், செல்போன் எம்எம்எஸ்கள் மூலமும் சுற்றுக்கு விடுகிறார்களாம் சிலர். குறிப்பாக மாணவர்கள்தான் பெருமளவில் இந்த அசிங்க வேலையில் ஈடுபடுவதாக காவல்துறை கூறுகிறது.

அத்தோடு நில்லாமல் அவர்களின் புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிட்டு அவர்களின் போன் நம்பர்களையும் பிரசுரித்து உல்லாசத்திற்குத் தயார் என போட்டு விடுகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட பெண்கள் பெரும் சிக்கல்களில் மாட்டி பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகி வருகிறார்களாம்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஒரு பொறியியல் கல்லூரி மாணவி மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனைச் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், நான் கல்லுரியில் இருந்து சுற்றுலா சென்ற போது எடுத்த படத்தை இண்டர்நெட்டில் வெளியிட்டு தன்னுடைய செல்போன் நம்பரை குறிப்பிட்டு உல்லாசத்துக்கு தயார் என்ற ஆபாச வாசகத்தோடு சிலர் பரப்பியுள்ளனர்.

இதனால் எனக்கு நிறைய பேர் போன் செய்து அசிங்கமாக பேசுகின்றனர். தவறு செய்த நபரைப் பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் சுதாகர் தலைமையில் போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் அந்த மாணவியுடன் படிக்கும் சக மாணவரே இவ்வாறு செய்தது தெரிய வந்தது. ஒரு தலைக்காதலால் இந்த அசிங்கத்தை அவர் செய்ததும் தெரிய வந்தது.

அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, படிப்பு கெட்டு விடுமே என்ற ஆதங்கத்தில் அந்த மாணவரை மன்னித்து விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில், மாணவரை கடுமையாக எச்சரித்து போலீஸார் அனுப்பியுள்ளனர்.

இதேபோல தனது சக ஊழியை ஒருவரின் படத்தை ஒரு நபர் இன்டர்நெட்டில் வெளியிட்டு சிக்கினார். பக்கத்து வீட்டுப் பெண்ணின் படத்தை வெளியிட்ட ஒரு மாணவரும் சிக்கினார்.

இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபட்டதாக இதுவரை 2 மாணவர்கள் உள்பட 6 பேரை போலீஸார் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து உதவி ஆணையர் சுதாகர் கூறுகையில்,

இண்டர்நெட் மூலம் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களை தடுப்பதில் போலீசார் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குடும்ப பெண்களின் படத்தை செல்போன் நம்பர்களுடன் வெளியிட்டு தவறான வகையில் அவதூறு பரப்பும் நபர்கள் தப்ப முடியாது. கடந்த 2 வருடத்தில் இதுபோன்று 6 புகார்கள் வந்தது.

இதில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் சிக்கினர். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இயல்பாக, சகஜமாக, வெள்ளந்தியாக, மனதில் எந்தவித எண்ணமும் இல்லாமல் பழகும் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் தவறான முறையில் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

பெண்கள் விருப்பப்படியே அவர்களை எச்சரித்து அனுப்பி விடுகிறோம். புகார்தாரர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்படுகிறது. சமீபத்தில் கூட மாணவியின் படத்தை அவதூறாக பரப்பிய கல்லூரி மாணவர் சிக்கினார்.

இப்படிப்பட்ட பிரச்சினைக்குள்ளாகும் பெண்கள் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், சென்னை சைபர் கிரைம் போலீஸை அணுக வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுத் தர முடியும். இத்தகைய குற்றமும் குறையும் என்றார் அவர்.

பெண்கள் உதவிக்கு...

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரடியாக போய் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டால் 1091 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு காவல்துறைக்குத் தெரிவித்தால் உடனடி உதவி கிடைக்கும்.

அதேபோல சைபர் கிரைம் உள்ளிட்ட அனைத்துப் புகார்களையும் ஆன்லைன் மூலமும் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிவாரணம் பெறலாம்.

ஆன்லைன் முகவரி...

http://www.tnpolice.gov.in/mailcomplaint.php

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X