கூட இருந்தே உறவாடிக் கெடுப்பவர்களிடம் கவனம் தேவை - கருணாநிதி

இதுதொடர்பாக கேள்வி - பதில் பாணியில் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
கேள்வி: உங்கள் கலைத்துறை வளர்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது?
பதில்: 13-வது வயதில், எண்பது பக்க நோட்டு புத்தகம் ஒன்றில் "செல்வச்சந்திரா'' என்ற கதையை நான் எழுதி - அதைப் பலரிடமும் படிக்கக் கொடுத்து அவர்களுடைய பாராட்டினைப் பெற்றேன். அப்போது நான் எழுதிய எழுத்து, அதாவது கையெழுத்து எப்படியிருந்தது என்பதை அந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து "காப்பி'' எடுத்து "கவிதை மழை'' புத்தகத்திலே வெளியிட்டுள்ளேன்.
"செல்வச்சந்திரா'' புதினத்தைப் படித்தவர்கள் "நன்றாக எழுதியிருக்கிறாய்; இன்னும் நிறைய படித்துவிட்டு பிறகு கதை, கவிதைகள் எழுதத் தொடங்கு'' என்று அறிவுரை கூறினார்கள். அப்படி அறிவுரை கூறியவர்களில் முக்கியமானவர்கள் தமிழின்பால் எனக்கு உணர்வூட்டிய முத்துகிருட்டிண நாட்டார், தண்டபாணி தேசிகர், பாலகிருஷ்ண அய்யர் போன்றவர்களாகும்.
அதன் பிறகுதான் 1942-ல் எனது 18-வது வயதில் அண்ணாவை திருவாரூரில் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். அவரை சந்திப்பதற்கு முன்பு நான் எழுதிய "இளமைப்பலி'' என்ற கட்டுரை, அவர் தொடங்கியிருந்த "திராவிட நாடு'' இதழில் வெளிவந்திருந்தது. அதனால்தான் திருவாரூக்கு அவர் வந்திருந்தபோது என்னை சந்திக்க விரும்பினார். நானே நேரில் சந்தித்து என்னை டி.என்.ராமன் மூலம் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
"இளமைப்பலி'' கட்டுரையைப் படித்தேன் - நன்றாக இருக்கிறது - நீ படிப்பைக் கெடுத்துக்கொண்டு இப்படி தொடர்ந்து எழுத வேண்டாம் - முதலில் நன்றாக படி என்றார். அண்ணா சொன்னதில் நான் அது ஒன்றைத்தான் கேட்கவில்லை. தொடர்ந்து அண்ணாவின் கருத்துக்களை- அண்ணாவின் குருவான பெரியாரின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து எழுதிக்கொண்டே இருந்தேன்.
"மந்திரி குமாரி'' என்று ஒரு புகழ் பெற்ற திரைப்படம் வெளிவந்தது அல்லவா? அதை முதலில் "குண்டலகேசி -மந்திரி குமாரி'' என்ற தலைப்பில் சிறிய நாடகமாக எழுதி, திருச்சி வானொலிக்கு அனுப்பிவைத்தேன். அடுத்த வாரமே அந்த நாடகம் எனக்கு திரும்பி வந்துவிட்டது. அப்படி திரும்பி வந்த அந்த நாடகத்தைத்தான் "குண்டலகேசி-மந்திரி குமாரி'' என்ற அதே தலைப்பில் தேவி நாடக சபையினருக்கு அனுப்பினேன்.
நாடக உரிமையாளர், கே.என்.ரெத்தினம் அதைப் பெற்றுக்கொண்டதற்கு பதில் அனுப்பியதோடு -தனது கம்பெனியில் நாடகமாக நடத்துவதற்கும் முன்வந்தார். அந்த நாடகம் கும்பகோணத்தில் அரங்கேறியது. அந்த நாடகத்தை காண்பதற்கு சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், கவி.கா.மு.ஷெரீப், கவிஞர் மருதகாசி ஆகியோர் வந்தார்கள். டி.ஆர்.சுந்தரத்துக்கு நாடகம் மிகவும் பிடித்துப் போயிற்று.
ஷெரீப் மூலமும் - மருதகாசி மூலமும் என்னுடன் பேசி என்னை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்க்கு வருமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு முன்பு கோவை ஜுபிடர் பிக்சர்ஸில் எனக்கேற்பட்ட அனுபவத்தின் காரணமாக சேலம் செல்வதற்கு தயங்கினேன். பிறகு டி.ஆர்.சுந்தரம் அளித்த உறுதியின் பேரில் சேலத்திற்கு சென்று "மந்திரி குமாரி'' நாடகத்தை திரைப்படத்திற்கேற்றதாக திரைக்கதை வசனம் எழுதி தந்தேன்.
"மந்திரி குமாரி'' திரைப்படத்தை சேலத்தில் பார்த்த அடுத்த நாளே என்.எஸ்.கே. அவர்களும் - உடுமலை நாராயணக் கவி அவர்களும் - செல்லமுத்து அவர்களும் சேலத்திலே என்னை சந்தித்து "மணமகள்'' படத்திற்கு என்னை திரைக்கதை வசனம் எழுத ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.
இப்படி படிப்படியாகத்தான் பல நெருக்கடிகளுக்கிடையே - எதிர்ப்புகளுக்கிடையே - ஏமாற்றங்களுக்கிடையே என்னுடைய கலைத்துறை வளர்ச்சி நிகழ்ந்தது.
மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, ராஜகுமாரி, மணமகள், பராசக்தி, பணம், மலைக்கள்ளன், மனோகரா என்று இப்படி வெற்றி கொடி பிடித்த திரைப்படங்கள் 1945 முதல் இதுவரையில் 75-க்கு மேற்பட்டவையெனினும் நான் திரையுலகில் அல்லது கலையுலகில் உச்சகட்டத்தை அடைந்துவிட்டதாக கருதவில்லை.
அப்படி கருதாத காரணத்தால் தான் எந்த விதமான ஆணவமும், அகம் பாவமும் என்னை அணுகாமல் அடக்க ஒடுக்கமாக இந்த துறையில் இதுவரையில் நடமாடி கொண்டிருக்கிறேன். இன்னமும் எழுதி கொண்டே இருக்கிறேன். அந்த எழுத்து மூலம் வரும் ஊதியத்தை நலிந்தோருக்கும், நல்ல பல காரியங்களுக்குமாக தொடர்ந்து வழங்கி வருகிறேன்.
திரைத்துறையை விட தமிழகத்தில் மக்களின் பொது வாழ்வுக்காக - பகுத்தறிவு வாழ்வுக்காக - சுயமரியாதை வாழ்வுக்காக நான் ஏற்றுக்கொண்ட அரசியல் துறையிலும் - நான் ஏற்கனவே கலைத்துறை வளர்ச்சியின்போது கற்றுக்கொண்ட அடக்க ஒடுக்கம் எனக்கு நினைவூட்டத் தவறாமல், என் உணர்வோடு கலந்துவிட்ட காரணத்தால்தான் - என்னை ஆட்கொண்ட கலைத்துறையும், நான் ஒன்றிக் கலந்து விட்ட அரசியல் துறையும் ஒன்றோடு ஒன்று போட்டிப்போட்டு கொண்டு என் வளர்ச்சிக்கு வலிமை வழங்கியுள்ளன என்பதை தவிர என்னுடைய தனிப்பட்ட "பிரதாபம்'' எதுவும் இதிலே இல்லை.
கேள்வி: கலைத்துறை வாழ்வுக்கும் - அரசியல் வாழ்வுக்கும் இடையே நீங்கள் கண்ட அல்லது காணுகின்ற வேறுபாடுகள் யாவை? அதிலே வெற்றி காண்பதற்கு உங்களின் அறிவுரை என்ன?
பதில்: என்னை பொறுத்தவரையிலும் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க - ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கிட விரும்பவில்லை. ஆனால் எந்தவொரு துறையானாலும் - அந்த துறையில் ஒருவர் முன்னுக்கு வந்துவிட்டால் அவரை சுற்றி நான்கைந்து பேர் கூடுவார்கள். அவர்கள் நண்பர்களாகவும் இருப்பார்கள் - அல்லது நம்மை உசுப்பிவிட்டு உறவாடி கெடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்களிடத்திலே எச்சரிக்கையாக இருந்து - நாணயத்தோடும், பெருந்தன்மையோடும் - "இந்திரனே!'' "சந்திரனே'' என்றெல்லாம் புகழ்ந்து, உங்களை தூக்கி நிறுத்துபவர்கள், அதே வேகத்தில் உங்களை கீழே தூக்கிப்போடுபவர்களாகவும் இருப்பார்கள் என்பதை மனதிலே கொண்டு - அவர்கள் உங்கள் காதருகே பேசும்போதெல்லாம் நீங்கள் செவிடர்களாகிவிட வேண்டும்.
மற்றவர்களைப் பற்றி உங்களிடம் அவர்கள் கோள்மூட்டும் போதெல்லாம் நீங்கள் ஊமைகளாகி விட வேண்டும். இப்படி ஒரு விரதத்தைக் கடைப்பிடிப்பீர்களேயானால், கலை உலகிலும் சரி, அரசியல் வட்டாரத்திலும் சரி - மொத்தத்தில் பொது வாழ்க்கையிலே உயர்ந்ததோர் இடம் உங்களுக்கு கிடைத்தே தீரும்.
இல்லையேல் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் பறவைகளை துரத்தவும் முடியாமல் - தூக்கி வைத்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அந்த கோபுர கலசத்தின் நிலை தான் உங்களுக்கு ஏற்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications