For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவை எப்படித்தான் அழைப்பது?-சபாநாயகர்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தான் ஏறிய விமானத்தில் ஏறிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலத்தை இறக்கி விட்டது உங்கள் 'அம்மா' ஜெயலலிதா என்று அதிமுகவினரை நோக்கி சட்டசபையில் திமுகவினர் கேள்வி கூறியதால் அமளி ஏற்பட்டது.

சட்டசபையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

கருப்பசாமி (அதிமுக): எனது தொகுதியில் பாம்பு கடித்து இறந்தவர்கள், மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் தரப்படவில்லை.

முதல்வர் கருணாநிதி: சிலருக்கு நிவாரண நிதி தரப்படவில்லை என்கிறார். முதல்வர், துணை முதல்வரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தாரா? அப்படி தகவல் தெரிவித்த பிறகு அதற்கு இல்லை என்று நாங்கள் பதிலளித்து இருக்கிறோமா?

கருப்பசாமி: இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அது 6 மாதங்களாக நிலுவையில் உள்ளது. அதனால்தான் இங்கு அதுபற்றி பேசினேன்.

சபாநாயகர் ஆவுடையப்பன்: உங்கள் பகுதியில் சமீபத்தில் குளத்தில் மூழ்கி 6 பேர் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுத்தவர் முதல்வர்தான்.

கருப்பசாமி: அந்தத் தொகையை உயர்த்திக் கொடுங்கள். தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி என்று கூறிக் கொள்கிறீர்கள். ஆனால், அவர்களுக்கு எதையும் நீங்கள் செய்யவில்லை.

நீங்கள் வழக்கம் போல் பாட்டு பாடுங்கள்:

துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி: நீங்கள் வழக்கம் போல் பாட்டு பாடிவிட்டு செல்லுங்கள்.

சபாநாயகர் ஆவுடையப்பன்: கருப்பசாமி, கொஞ்சம் கட்டுப்பாட்டோடு பேசுங்கள். இதுபற்றி உங்கள் கொறடாவிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

அமைச்சர் மதிவாணன்: முதல்வர் தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தியாக இருப்பதால்தான், அந்த சமூகத்தைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகரையும் அறிவித்து இன்றைக்கு நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கருப்பசாமி: ஆதிதிராவிடர்களுக்காக பல திட்டங்களை 'அம்மா' கொண்டு வந்தார். அதை நீங்கள் விட்டுவிட முடியாது என்பதற்காகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எத்தனை திட்டம் கொண்டு வந்தீர்கள்? ஆதிதிராவிடர்கள் அனைவருக்கும் இலவச டி.வி போன்றவை வழங்கப்பட்டுவிட்டதா? பேரவைத் தலைவரே கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். மக்கள் உங்கள் மேல் வெறுத்துப் போய் இருக்கிறார்கள்.

அமைச்சர் பரிதி இளம்வழுதி: ஆதிதிராவிடர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் செய்யப்பட்ட நன்மைகள் பற்றி சாதனை புத்தகம் அச்சடித்து அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் படித்து பார்த்துவிட்டு பேசலாம்.

அந்த மாண்புமிகு அமைச்சர் யார்?:

யசோதா (காங்கிரஸ்): ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக கருப்பசாமி இருந்தார். அப்போது தாட்கோவுக்கு தர வேண்டிய கேப்பிட்டேஷன்' தொகை ரூ.23 கோடியை 2003ம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைத்த மாண்புமிகு அமைச்சர் யார் என்பதை அவர் சொல்வாரா?

அமைச்சர் துரைமுருகன்: கருப்பசாமி வம்புக்காக பேசுகிறார் என்று தெரிகிறது. இங்கிருக்கும் ஆட்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் என்று பேசுகிறார். இங்கு இருப்பது ஆட்கள் அல்ல. உறுப்பினர்கள்.

'அம்மா' ..'அம்மா' ..'அம்மா' :

கருப்பசாமி: 'அம்மா' ஆட்சியில்தான் அதிக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பல லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் வேலை கிடைக்காதவர்களுக்கு உதவித் தொகை எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள்? அவர்களில் ஆதிதிராவிடர் எத்தனை பேர்? சொல்ல முடியுமா? விமானப் பணிப்பெண் பயிற்சி அளித்தீர்கள்...

அமைச்சர் தா.மோ.அன்பரசன்: இந்தக் கேள்வியை தொடர்ந்து அவரது 'அம்மா'வில் இருந்து அனைவருமே கேட்டுவிட்டனர்.

கருப்பசாமி: தாழ்த்தப்பட்டோருக்கு சலுகைகளை தாராளமாக வழங்குவதாக வாய்கிழிய தம்பட்டம் அடிக்கும் உங்கள் ஆட்சியில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எனக்கு இந்த அவையில் கூடுதலாக சுதந்திரமாக பேசுவதற்கு வாய்ப்பை மறுத்து குதர்க்கம் செய்கிறீர்களே?....(அவர் பேசிய சில வார்த்தைகள் அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன).

இதையடுத்து ''அம்மா'' என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென்று அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சபாநாயகர் ஆவுடையப்பன்: 'அம்மா' என்ற வார்த்தை அவையில் பேசக் கூடாத வார்த்தையா? இங்கு 'அம்மா' என்று பேசக் கூடாதா? அது அவதூறான வார்த்தையா?

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): வித்தியாசமான தொனியில் 'அம்மா'வை குறிப்பிட்டார். அதனால்தான் அதை நீக்க வேண்டுமென்று கேட்டோம்.

சின்னப்பன் (அதிமுக): பாயின்ட் ஆப் ஆர்டர்' (ஒழுங்குப் பிரச்சனை கொண்டு வருவதாக சொல்லி).

பாயின்ட் ஆப் ஆர்டர் என்றால் என்ன?:

சபாநாயகர் ஆவுடையப்பன்: பாயின்ட் ஆப் ஆர்டர் என்றால் என்ன என்று தெரியுமா?

சங்கரி நாராயணன் (திமுக): தான் ஏறிய விமானத்தில் இருந்து தாழ்த்தப்பட்ட ஒருவரை இறக்கி விட்டது உங்கள் 'அம்மா'தானே.

(அதிமுகவினர் கடும் எதிர்ப்பு)

ஓ.பன்னீர்செல்வம்: 'அம்மா'வின் பெயரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். எனவே அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குங்கள்.

அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

அமைச்சர் துரைமுருகன்: விமானத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் அருணாசலத்தை இறக்கி விட்டார் என்று, உங்கள் 'அம்மா' பெயரை சொல்லாமல்தான் பேசி இருக்கிறார்.

இணைந்து செயல்பட கருணாநிதி வேண்டுகோள்:

முதல்வர் கருணாநிதி (குறுக்கிட்டு): ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள், அடித்தட்டு மக்கள், இவர்களைப் பற்றிய விவாதம் நடைபெறும்போது, ஆளுங்கட்சி செய்தவற்றைப் பற்றிக் குறிப்பிட்டு இவை போதாது; இன்னும் செய்ய வேண்டும்'' என்று சொல்கின்ற நிலைமையிலே எதிர்க்கட்சியும் அல்லது ''செய்தவை தவறு; அவை திருத்தப்பட வேண்டும்'' என்று சொல்லக்கூடிய நிலையிலே எதிர்க்கட்சி விளங்கி அதற்கு நிதானமான முறையில், அமைதியான முறையில் ஆளுங்கட்சி சார்பில் விளக்கமளிப்பதுதான், அந்தச் சமுதாயத்தைச் சார்ந்த அனைவருக்கும் நாம் செய்கின்ற சேவையாகும்.

அதைவிட்டுவிட்டு, நாளைய தினம் ஆதிதிராவிடர் மானியம் விவாதிக்கப்படும்போது, அமளி, துமளி' என்று பத்திரிகைகளில் செய்தி வருவது அந்த மக்கள் பார்த்து மகிழ்ச்சியடைக்கூடிய செய்தியாக இருக்காது.

எவ்வளவோ துன்ப நிலைகளை ஏற்றுக் கொண்டு, சமுதாயத்திலே உழன்று கொண்டிருக்கின்ற ஏழையெளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அடித்தட்டு மக்கள் கூன் விழுந்தவர்கள் நிமிர வேண்டுமென்பதற்காக எடுக்கின்ற முயற்சி ஆளுங்கட்சியின் முயற்சியாகவும், எதிர்க்கட்சியின் முயற்சியாகவும், இரண்டும் இணைந்த முயற்சியாகவும் இருக்க வேண்டும்.

இதிலே ஒருவருக்கொருவர் போட்டி போட்டிக் கொண்டு அவர்களுக்காகப் பணியாற்ற வேண்டுமேயல்லாமல், எதிர்க்கட்சியை இந்த நேரத்திலே தாக்கியதாக வேண்டும் என்று ஆளுங்கட்சியோ அல்லது ஆளுங்கட்சியை எப்படியும் இந்த நேரத்திலே தாக்கியதாக வேண்டும் என்று எதிர்க்கட்சியும் நினைப்பது அதற்கு இரு தரப்பிலே உள்ள தலைவர்களும் நானும் என்னைச் சேர்த்துச் சொல்கிறேன், இடமளிப்பது, அந்த மக்களுக்கு செய்கின்ற உதவியாக இருக்காது.

ஆகவே, அந்த மக்கள் நம்மைப் பார்த்து நகையாடாமல் இருப்பதற்கு, அமைதியான முறையிலே இந்த மானியத்தை நீங்கள் விவாதித்து, நிறைவேற்றித் தர வேண்டும் என்று இரு தரப்பிலே உள்ள உறுப்பினர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

சபாநாயகர் ஆவுடையப்பன்: 'அம்மா' என்றும் பேசக் கூடாது என்கிறீர்கள், பெயரையும் சொல்லக் கூடாது என்கிறீர்கள், பின்பு அவரை எப்படித்தான் அழைக்க வேண்டும்?

முதல்வர் கருணாநிதி: எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை சங்கரி நாராயணன் குறிப்பிட்டிருந்தால் அதை நீக்கிவிடலாம்.

இதையடுத்து அதை நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.

பெயரை மாற்ற வேண்டும்:

ராம்பிரபு (காங்கிரஸ்): கடந்த 24.1.07 அன்று அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. அதில் அனைத்து பிரிவினரையும் ஒன்று சேர்த்து ஆதிதிராவிடர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் 76 பிரிவுகள் உள்ளன. அதில் ஆதிதிராவிடர், தேவேந்திரகுல வேளாளர் தனித்தனி பிரிவாகும். பல பிரிவுகளை ஒரே சாதியாகக் காட்டி இருப்பது மற்ற 56 பிரிவினருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். முதல்வர், துணை முதல்வசர் ஆகியோருக்கு கடிதமும் எழுதி இருக்கிறோம். அதுபோல் ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினர் நலத் துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

2009-10ம் ஆண்டில் தொழில் படிப்பில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் கிடைத்திருந்தாலும், 250 பேர் பொறியியல் கல்வியையும், 5 பேர் மருத்துவக் கல்வியையும் வறுமை காரணமாக தொடர முடியாமல் போய்விட்டது. எனவே தாழ்த்தப்பட்டோர் அனைவருக்கும் ஆகும் கல்விச்செலவை அரசே ஏற்க வேண்டும்.

தாட்கோ நிறுவன டெண்டர்களில் மற்ற சாதியினரும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே அந்த டெண்டர்களின் பங்கேற்க வகை செய்ய வேண்டும்.

வால்மிகி சாதியை மற்ற தென் மாநிலங்களில் எஸ்.டி பிரிவில் வைத்துள்ளனர். இங்கும் அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும்.

கணபதி (அதிமுக): சென்னை நகரை அழகுபடுத்துவதற்காக, இங்கு பலஆண்டுகளாக வசித்து வந்த ஏழைத் தொழிலாளர்கள் காலி செய்யப்பட்டு, 40 கிலோ மீட்டர் தொலைவில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். அந்த மக்கள் தொழில் செய்யும் இடத்தில் இருந்து தொலை தூரத்தில் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு சென்னையிலேயே குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும்.

மாநில அளவிலான ஆதிதிராவிடர் ஆணையம் இன்னும் அமைக்கப்படாமல் இருப்பது ஏன்?. தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் சாதிச்சான்று பெறுவதற்கு தாமதமாகிறது. சான்றிதழ் தரும் அதிகாரிகள் அலுவலகத்தில் இருப்பதே இல்லை. எனவே, சாதிச்சான்று, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்று தருவதற்கு தனி துறையை உருவாக்கவேண்டும். அதில், பிறப்பு, இறப்பு போன்றவற்றையும் பதிவு செய்யலாம்.

மகேந்திரன் (மார்க்சிஸ்ட்): மதம்மாறிய கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆதிதிராவிடர், உயர்கல்வி கற்க கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு ஆதிதிராவிடர்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.

போளூர் வரதன் (காங்கிரஸ்): ஆதிதிராவிடர் துறைக்கு மத்திய அரசு தரும் நிதியின் ஒரு பகுதி மற்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுவிடுகிறது. அப்படி செய்தால் ஆதிதிராவிடர்கள் எப்படி வளர்ச்சி பெறுவார்கள்?

டாக்டர் சதன்திருமலைகுமார் (மதிமுக): ஆதிதிராவிடர் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ள கிராமங்களுக்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். சுயநிதி பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கையில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X