For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் விட்டுப் போக மனமில்லாத துறைகள் அரசியலும் சினிமாவும்! - கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: நான் விட்டுப் போக மனமில்லாத துறை அரசியல் மட்டுமல்ல, சினிமாவும்தான்" என்றார் முதல்வர் கருணாநிதி.

முதல்வர் கருணாநிதி பெண் சிங்கம் என்ற புதிய திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி இருக்கிறார். இந்த படத்திற்கு கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பா.விஜய் ஆகியோருடன் கருணாநிதியும் 'ஆகா வீணையில் எழுவது வேணு கானமா?' என்ற ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.

பெண் சிங்கம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட, அதை நடிகர் கமல் ஹாசன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:

இங்கே நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஒரு ஆசையை நடிகர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் வாலி, தயாரிப்பாளர் ராமநாராயணன் ஆகியோரும் மற்றும் வாழ்த்தியவர்கள் அனைவருமே வெளியிட்டார்கள். ஏன் அவர்களுக்கு என் மீது இவ்வளவு கோபமோ தெரியவில்லை. நான் வாழ்ந்தது போதாதா? இப்போது வாழ்ந்த 86 ஆண்டு காலத்தில் இடையிடையே பட்ட துன்பங்கள் போதாதா?

என்னால் ஏற்பட்ட நல்ல விளைவுகளை, என்னால் ஏற்பட்ட நல்ல நிலைமைகளை, அண்ணாவின் கொள்கையை நிறைவேற்றி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். அதுபோதாதா? சாதனைகள் போதாதா? இன்னும் சாதனைகளைச் செய்ய இன்னும் பல செயல்களை புரிய மற்றவர்கள் வரக் கூடாதா என்றெல்லாம் நான் எண்ணுகின்ற அதே நேரத்தில் என்னை நீங்கள் போகச் சொன்னாலும் போக மனம் இல்லாத ஒரு துறை உண்டென்றால் அது பொதுத்துறை சம்பந்தப்பட்ட அரசியல் துறை மாத்திரமல்ல, கலைத்துறையும் கூட.

பெயரைப் போட மறுத்தவர்கள்!

இந்தக் கலைத் துறையிலே நான் அடியெடுத்து வைத்த போது வேதனையோடு சொல்லுகிறேன் - இன்றைக்கு கை தட்டுகிறீர்களே, என்னுடைய வசனத்தை, வார்த்தைகளை கேட்டு! ஒரு காலத்தில்- நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை-அது மரியாதையும் ஆகாது, நாகரிகமும் ஆகாது. ஒரு படக் கம்பெனிக்காரர்கள், அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய என்னுடைய பெயரை வெளியிட தயங்கியபோது, மயங்கியபோது நான் ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், விளம்பரமானவர்கள் பெயரைத்தான் டைட்டிலிலே நாங்கள் போட முடியும், அப்போதுதான் எங்களுக்கு படம் வியாபாரம் ஆகும் என்றார்கள். ஆனால் ஆண்டுகள் உருண்டன. தமிழ்ச் சமுதாயத்திலே ஏற்பட்ட மாறுதல்கள் ஒளிவிடத் தொடங்கின. அப்படி டைட்டிலிலே என் பெயரைப் போட மறுத்து அந்த அளவிற்கு நீ விளம்பரம் ஆகவில்லை என்று சொன்னவர்கள் 'கதை என்று எதையாவது எழுதிக் கொள்கிறோம், உங்களுக்கு சிரமம் இருந்தால் ஆனால் கதை வசனம் கருணாநிதி என்று டைட்டில் மாத்திரம் போட்டுக் கொள்கிறோம்' என்று என்னிடம் பிறகு கேட்டவர்கள் எல்லாம் உண்டு.

அது யார் யார் என்று என்னிடம் பழகிய கலையுலக நண்பர்களுக்கெல்லாம் நன்கு தெரியும். ஆகவே இந்த உலகம் வியாபார உலகம் தான், வர்த்தக உலகம்தான். ஆனாலும் கலை உணர்வு உள்ளவர்கள் நிரம்ப உண்டு.

'கலைஞர் திரை ஊர்' என்ற ஒன்று திரைப்படத் தொழிலாளர்களுக்காக அமைகிறது என்று இங்கு சொன்னார்களே, அதனை அமைத்துக் கொடுக்கின்ற அளவிற்கு நான் இந்தத் திரையுலகத்திலே உங்கள் அனைவராலும் போற்றப்படுகிற ஒருவனாக ஆகியிருக்கிறேன்.

இங்கே இயக்குனர் பாலி ஸ்ரீரங்கம் சொன்னாரே, அதைப்போல அந்தக் காலத்திலே இந்த நிலைக்கு நான் வருவேனா என்று நான் பேனா எடுத்தபோது நினைத்ததில்லை. ஆனால் இன்றைக்கு திரைப்படத் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் வாழ்வதற்கேற்ற ஒரு இடத்தைத் தருவதற்கு உத்தரவு விடுகின்ற பேனா என் கைக்கு வருவதற்கு நீங்கள் தான் காரணம் என்பதை நான் மறக்க முடியாது.

கவிஞர் வாலி பென்னாகரம் என்பதற்கு விளக்கம் சொன்னார். அதைப் பற்றி நடிகர் கமல்ஹாசனிடம் அதைப் பற்றிக் கூறிச் சிரித்தேன். கேலியாக அல்ல, பாராட்டாகத்தான்.

'பென்னாகரம்'தான் அதற்குக் காரணம் என்று வாலி சொன்னார். அது ஒரு தொகுதி. தமிழ்நாட்டிலே 234 பென்னாகரங்கள் இருக்கின்றன. அதிலே 200 பென்னாகரங்களையாவது பிடித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும். ஒரு பென்னாகரத்தைச் சொன்னார்... அதுவும் தமிழோடு இரண்டு மொழிகளைக் கலந்து சொன்னார்.

தமிழுக்காக பயன்படுத்த வேண்டும்

முதலில் 'பென்', அடுத்து 'நா', அடுத்து 'கரம்' என்று மூன்றையும் சேர்த்து பென்னாகரம் என்றார். என்னுடைய எழுத்து, பேச்சு - அதற்கு அடுத்து 'கரம்' என்று கையைச் சொன்னார். நான் அவரை திருத்துவதாகவோ தாக்குவதாகவோ யாரும் கருதக்கூடாது. கரத்திலே பேனா இருப்பவர்கள் எல்லாம் ஒழுங்காக எழுதுவதில்லை. பேனா பிடித்தவர்கள் எல்லாம் தமிழுக்காக சிந்திப்பதும் இல்லை, தமிழுக்காக அதைப் பயன்படுத்துவதும் இல்லை. அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற அந்த எண்ணம் எனக்கு பாலப் பருவத்திலேயே ஏற்பட்டது.

அப்படி ஏற்பட்ட காரணத்தால்தான் இன்றைக்கு உங்களுடைய அன்புக்கும், நம்பிக்கைக்கும் உங்களால் ஏற்றப்படுகின்ற உயர்ந்த பதவிக்கும் உரியவனாக நான் இருக்கின்றேன். அதனால் தான் வாலிக்குச் சொல்கிறேன். பென் மாத்திரமல்ல, நா மாத்திரமல்ல, நா என்று தமிழிலும், கரம் என்று சமஸ்கிருதத்திலும் இங்கே வாலி சொன்னார். 3 மொழிகளைக் கலந்து இந்த மூன்று மொழிகளுக்கு உரியவனாக நான் விளங்குவதாக வலியுறுத்தினார்கள்.

100-வது படம் வரை எழுதிவிடுவேன்...

100-வது படம், 101-வது படம், 99-வது படம் என்றெல்லாம் சொன்னார்கள். 100-வது படம் எடுக்கின்ற வரையிலே நான் இருக்க வேண்டுமென்ற ஆசையிலே சொன்னார்கள். நூறாவது படம் எடுக்கின்ற வரையிலே என்று குறிப்பிட்டு ஒரு அளவை வைத்தால், இப்போது 87 வயது என்றால், 90-வது வயதிற்குள் 25 படங்கள் தயாரிக்கப்பட்டு விட்டால் 100 படம் ஆகி விடும். ஆனால் எழுத வல்லமை இல்லாமல் இல்லை. எழுதி விடுவேன்.

இன்றைக்கும் இந்த நிலையில் என்னுடைய கையிலே என்னுடைய பேனா வசப்பட்ட படங்கள் வெளி வருகின்ற இந்த 'பெண் சிங்கம்' -அடுத்து வருகின்ற 'பொன்னர் சங்கர்' - அடுத்து வருகின்ற 'இளைஞன்' என்று இந்த மூன்று படங்கள் இப்போது என் கையிலே இருக்கின்றன. இது வியாபார அறைகூவல் அல்ல. இன்று மூன்று படங்களின் மூலம் எனக்குக் கிடைக்கின்ற வருவாய், ஊதியத்தை நான் எனக்காக வைத்துக் கொள்வதில்லை என்பதும், அதனையெல்லாம் மாற்றுத் திறனாளிகளுக்கும், அருந்ததியர்களுக்கும், கலைத் துறையினருக்கும் நான் வழங்கி விட்டேன் என்பதை நீங்கள் அறியாதது அல்ல.

நடிகர் லாரன்ஸ் நூற்றுக்கணக்கான குழந்தைகளை, இளைஞர்களைக் காப்பாற்றி வருகின்ற சமுதாய நலத் தொண்டை ஆற்றி வருகிறவர். அத்தகைய லாரன்ஸ் என்னை வாழ்த்துகிறார் என்றால், அவர் வாயால் என்னை வாழ்த்துகிறார் என்றால், அந்தக் குழந்தைகளை, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிழைத்த அந்தக் குழந்தைகளின் பெற்றோர், உறவினர் என்று அத்தனை பேருடைய வாழ்த்தையும் நான் பெறுகிறேன்.

லட்சக்கணக்கானவர்களுக்கு ஓராண்டு காலத்தில் இதய அறுவை சிகிச்சையும், கண் அறுவை சிகிச்சையும், உயிர் காக்கின்ற அளவிற்கு மருத்துவ வசதிகளையும் தரக்கூடிய சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கி, அதன் மூலமாக அவர்கள் எல்லாம் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாழ்த்துக்களோடு இணைத்து நீங்கள் இங்கே தந்திருக்கின்ற வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்கிறேன்..." என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X