For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது-கரு​ணா​நிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: திராவிட இயக்கம் எந்தக் காலத்திலும் யாராலும் பிளவுபடுத்தப்பட்டாலும், சீர்குலைக்கப்பட்டாலும் மீண்டும் ஒன்று சேரும், இந்த இயக்கத்தை யாராலும் குலைக்க முடியாது, யாராலும் வீழ்த்த முடியாது என்று முதல்​வர் கரு​ணா​நிதி கூறினார்.​

ஜெயல​லிதா அமைச்​ச​ர​வை​யில் அமைச்​ச​ராக இருந்த கரூர் சின்​ன​சாமி தனது ஆயி​ரக்​க​ணக்​கான ஆத​ர​வா​ளர்​க​ளு​டன் முதல்​வர் கரு​ணா​நிதி முன்​னி​லை​யில் திமு​க​வில் இணைந்தார். இதற்​கான விழா திமுக அலு​வ​ல​க​மான அண்ணா அறி​வா​ல​யத்​தில் உள்ள கலை​ஞர் அரங்​கில் நடை​பெற்​றது.​

அதில் கரு​ணா​நிதி பேசி​யதாவது:

அருமைத் தம்பி சின்னச்சாமி பேசும்போது என்னைப் பற்றி, என் தலைமையிலே உள்ள கழகத்தைப் பற்றி, அண்ணா அவர்கள் எப்படி எல்லாம் சிறப்பாகப் பேசினார்- எப்படியெல்லாம் என்னைப் பாராட்டினார். எப்படியெல்லாம் என்னைப் புகழ்ந்தார் என்பதையெல்லாம் இங்கே எடுத்துச் சொன்ன போது, அதற்கெல்லாம் பிறகுமா இவ்வளவு காலம் இங்கே வராமல் இருந்தீர்கள்?' என்று கேட்க எனக்குத் தோன்றியது. பிறகு ஒரு ஆறுதல்- பரவாயில்லை, இப்போதாவது வந்தீர்களே, என்ற ஒரு ஆறுதல்.

அவர்கள் அதிமுகவிலே இருந்து, பணியாற்றி, அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் நான் அந்த வட்டாரத்திலே உள்ள திமுக தோழர்கள் மூலமாக அவரைப் பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர்கள் என்னிடத்திலே சொல்வார்கள், சின்னசாமி ஒரு அருமையான செயல்வீரர். அந்த வட்டாரத்திலே உள்ள அதிமுக தொண்டர்களை யெல்லாம் அணி திரட்டக் கூடிய தளபதியாக விளங்கக் கூடியவர். அவர் மாத்திரம் இங்கேயிருந்தால், நம்மோடு இருந்திருப்பாரேயானால், கரூர் வட்டாரத்திலே திமுக இன்னும் ஓங்கி வளர்ந்திருக்கும், உயர்ந்து வளர்ந்திருக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.

அவர்களுடைய ஆசைகளையெல்லாம் நிறைவேற்றக்கூடிய வகையில், அவர்களுடைய எண்ணமெல்லாம் பலிக்கக்கூடிய வகையில், இன்றைக்கு நம்முடைய சின்னச்சாமி இங்கே அமர்ந்திருக்கின்ற காட்சியை நீங்களும் காணுகின்றீர்கள், நானும் காணுகிறேன்.

அவர்களைப் பிரிந்து நொந்திருப்பவர்களும் கேள்விப்படுவார்கள். ஒருவேளை கேள்விப்பட்டு மகிழ்வார்களா அல்லது மனம் வெதும்புவார்களா என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

ஆனால், ஒன்றை மாத்திரம் நான் சொல்ல விரும்புகிறேன். திராவிட இயக்கம் எந்தக் காலத்திலும் யாராலும் பிளவுபடுத்தப்பட்டாலும், சீர்குலைக்கப்பட்டாலும் மீண்டும் ஒன்று சேரும், இந்த இயக்கத்தை யாராலும் குலைக்க முடியாது, யாராலும் வீழ்த்த முடியாது என்பதற்கான அடையாளங்களிலே ஒன்று தான் இன்றைய நிகழ்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு ஆறு புறப்பட்ட இடத்திலேயே இருக்குமென்று சொல்ல முடியாது. அது ஓடிக் கொண்டிருக்கும். அப்படி ஓடும்போது கிளைகளாகப் பிரியும். அதற்கு கிளை நதிகள் என்று பெயர். எல்லா கிளைகளும் ஆங்காங்கு பரவி ஓடிக் கொண்டிருந்தாலும், இறுதியாக ஒன்று சேருகின்ற இடம் உண்டு. ஒன்றாகச் சேர்ந்த பிறகு அந்த ஆற்றைப் பிரித்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

அதைப் போல திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்தப் பேராறு, சில பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடினாலுங்கூட, எப்படி கடலிலே கலக்கும்போது எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கலக்கின்றதோ, அதைப்போல எல்லாம் ஒன்றாகச் சேருகின்ற காலக் கட்டம், இந்தக் காலக் கட்டம்.
அது தான் இன்றைக்கு கரூர் மாவட்டத்திலேயிருந்து சின்னசாமி தலைமையிலே 12,000 பேர் வந்து கலந்து கொண்டிருக்கின்ற நிகழ்ச்சியாகும்.

நீங்கள் சற்று கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்ப்பீர்களேயானால் இன்றைக்கு திராவிட இயக்கம் என்ற பெயரை ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சில கட்சிகள், அது தேய்ந்து மாய்ந்து போகின்ற நிலையிலே இருந்தாலுங்கூட, 'திராவிட' என்ற சொல்லை ஒட்ட வைத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால்தான், தத்தித்தத்தி நடமாடவாவது முடிகிறது.

வேறு சில கட்சிகள் என்று பார்த்தால், நண்பர் சம்பத் தலைமையிலே பிரிந்த 'தமிழ் தேசியக் கட்சி' இன்று எங்கே போனது. ஆனால் திராவிடத்தை இழந்து விட்டு அவர்கள் செயல்பட்டக் காரணத்தால் கட்சியை இழந்தார்கள், ஆட்களை இழந்தார்கள், அவர்களுடைய எதிர்காலத்தை இழந்தார்கள்.

ஒன்றிரண்டு கட்சிகள் இன்றைக்கு விழித்துப் பார்த்து, நாங்களும் இருக்கிறோம் என்று நம்மிடத்திலே சொல்லுகின்ற நிலைமை இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் இன்னும் 'திராவிட' என்ற சொல்லை அவர்கள் விடாமல் இருப்பது தான்.

இதைத் தான் பெரியார் அழுத்தந்திருத்தமாக அடிக்கடி சொல்வார்கள். தமிழ் என்பது திராவிடத்துக்குள் அடக்கம் தான். திராவிடர் என்று சொன்னாலே அதிலே 'தமிழர்' இருக்கிறது. 'தமிழ்' என்று சொன்னால் அதிலே 'திராவிடம்' இல்லை. திராவிடம் என்று சொன்னால் அதிலே 'தமிழ்' இருக்கிறது. ஆகவே தான் திராவிடம் என்று சொல்கிறோம் என்று பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் பார்ப்பீர்களேயானால், திமுகவிலே இருந்து பிரிந்து சென்றவர்கள், அழுத்தந்திருத்தமாக இந்தப் பெயரை விடாமல் கொஞ்ச நஞ்சமாவது பிடித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், மீண்டும் இணைவதற்கு இந்தச் சொல்லையும் விட்டு விட்டால் இணைய முடியாமலே போய் விடும் என்பதற்காகத் தான் இந்தச் சொல்லைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படித்தான் என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக- அந்தக் காரணங்களைப் பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை- மறைந்த ஒரு நண்பர், நம்மோடு இருந்த நண்பர், அவரும் நானும் சேர்ந்து இந்தக் கழகத்தை எப்படியெல்லாம் வளர்த்தோம் என்பது எனக்குத் தெரியும். அவருக்குத் தெரியும். எங்கள் இருவரையும் விட நன்றாக அண்ணாவுக்குத் தெரியும். உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் தெரியும்.
அப்படிப்பட்ட நண்பர், திமுகவில் இருந்து பிரிய நேரிட்டபோது, அப்படிப்பட்ட சூழ்நிலை உருவானபோது, அது எந்தக் காலக் கட்டம் என்று நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்களேயானால், 'மனோகரா' படம் உங்களுக்கு ஞாபகத்திற்கு வரும்.

மனோகராவில், மனோகரனை அரவணைத்து அவனை தன்னுடைய செல்வ மகனாக ஏற்றுக் கொண்டு, அவனுக்கு முடிசூட்டுகின்ற அளவிற்கு அவனுடைய தந்தை புருசோத்தமன் இருந்தாலுங் கூட, அந்தக் கதையைத் தான் நான் சொல்கிறேன்- இடையிலே வசந்த சேனை வருகின்ற வரையில் மனோகரன், புருசோத்தமன் என்ற இருவரும் ஒற்றுமையோடு இருந்தார்கள்.

வசந்தசேனை வந்த பிறகு, அரண்மனை குடும்பத்திலே ஒரு பிளவு ஏற்பட்டு, மனோகரனை வெளியேற்றுகின்ற வகையில், அவனை வதைக்கின்ற வகையில் நடைபெற்ற போராட்டங்கள், அதிலே அவன் மீண்ட கதைகள் எல்லாம் விளக்குவது தான் மனோகரா திரைக்கதை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அது போன்றதொரு நிகழ்ச்சி, தமிழகத்திலே நடைபெற்றபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தை இயக்கிய எங்களுக்குள் இருந்த ஒற்றுமையைப் பிரிக்க, அந்த உணர்வைப் பிரிக்க, நடைபெற்ற சில காரியங்களில் ஒன்றாக முதல் முயற்சியாக அருமை நண்பர் எம்.ஜி.ஆரை பிரிக்க எண்ணினார்கள்.

எம்.ஜி.ஆர். எங்கள் மீது கொண்ட கோபத்தால் அல்ல, அவருக்கு அன்றைக்கு ஏற்பட்ட வேறு சில உணர்வுகளால், வேறு சில கசப்புக்களால், அவர் பிரிய நேரிட்டது. அவர் பிரிந்தாலும் 'திராவிட' என்ற சொல்லை இழக்க விரும்பவில்லை.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அண்ணா பெயரையும் இணைத்துக் கொண்டு தான் கட்சியைத் தொடங்கினார். அப்படி தொடங்கிய பிறகு கூட, அவர் திமுகவை அழித்து விட வேண்டுமென்றோ, என்னை வீழ்த்தி விட வேண்டுமென்றோ, எனக்கு விரோதமாக செயல்பட வேண்டுமென்றோ எண்ணியவர் அல்ல.

ஏன் என்றால், முதல்வராக நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் முக்கியமானவரே எம்.ஜி.ஆர். தான். அவர் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த போது நான் எதிர்க்கட்சித் தலைவராக பல போராட்டங்களிலே ஈடுபட்டதுண்டு.

அந்தப் போராட்டங்களிலே ஈடுபட்டு ஒருமுறை நான் மதுரையிலேயிருந்து ஒரு நடை பயணத்தை மேற்கொண்டு, திருச்செந்தூர் வரையிலே நடை பயணம், நீதி கேட்டு நெடிய பயணம் என்று சென்ற போது கூட, அது அன்றைக்கிருந்த ஆட்சிக்கு எதிராக நான் நடத்திய பயணம்- அந்தப் பயணத்தை மதுரையில் நான் தொடங்கி சென்று கொண்டிருக்கிறேன், ஒரு நாள் காலை ஆறு மணிக்கு எனக்கு முதல்வர் எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி வருகிறது.

சொன்னார்- ''இந்தப் பயணத்தை நீங்கள் நிறுத்தி விடக் கூடாதா?, உங்களுக்கு இந்தப் பயணத்தால் கால் வலி அதிகமாகி விட்டது என்றும், காலில் கொப்பளங்கள் ஏற்பட்டிருக்கிறது என்றும் நான் கேள்விப்பட்டேனே, தயவுசெய்து நீங்கள் இந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு, சென்னைக்குத் திரும்புங்கள், எல்லோரும் அமர்ந்து பேசிக் கொள்வோம்'' என்று சொன்ன போது கூட- நான் என்ன சொன்னேன் என்றால், நான் ஆரம்பித்து விட்டேன், ஆகவே முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னேனே தவிர உடனே பயணத்தை முடிக்கவில்லை.

அதற்காக அவர் கோபித்துக் கொள்ளவில்லை. ஆனால் அனுதாபத்தோடு உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள், உடம்பு இருந்தால் தான் எல்லாம் செய்ய முடியும் என்று பழகிய சகோதரர்கள் என்பதை ஒரு முறை புதுப்பித்துச் சொல்வதைப் போல அன்றைக்குச் சொல்லி, அந்த நிகழ்ச்சியிலே நான் எவ்வளவு ஜாக்கிரதையாக என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அந்த அறிவுரைகளை யெல்லாம் வேண்டுகோளாக அவர் என் முன்னால் வைத்தார்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நாங்கள் இரு கழகங்களாகச் செயல்பட்டாலுங்கூட, நான் எதிர்க்கட்சித் தலைவராக, அவர் முதல்வராக இருந்தாலும் கூட, இருவரும் திமுகவில் இருந்தவர்கள் என்பதையும், நான் அவரை பொருளாளராக ஆக்குவதற்கு முயற்சித்தேன் என்பதையும், அவர் என்னை முதல்வராக ஆக்குவதற்காக அவரும் அந்த அணியிலே இருந்தார் என்பதையும் அவரும் மறக்கவில்லை, நானும் மறக்கவில்லை.

இன்றைக்கு நம்முடைய கரூர் வட்டாரத்திலே உள்ள தோழர்கள் எல்லாம், செயல்வீரர்கள் எல்லாம், நம்முடைய சின்னசாமி தலைமையில் இங்கே வந்திருப்பதற்கு என்ன காரணம்?. உங்களை மதிப்பதற்கு- 13 ஆண்டுக் காலமாக யாரும் முயற்சிக்கவில்லை, உங்களிடம் அன்பு காட்டுவதற்கு அங்குள்ள தலைமைக்கு இஷ்டமில்லை.
அன்பு காட்டுவதையே தவறு என்று கருதினார்கள். அப்படி கருதிய காரணத்தால் தான் அன்பு காட்டுகின்ற இடம் எது என்பதை எண்ணிப் பார்த்து, சிந்தித்துப் பார்த்து, பழைய இடம் உங்களுக்கு ஞாபகம் வந்த காரணத்தால், பழைய இடம், பழைய இடம் மாத்திரமல்ல, பழகிய இடம் என்ற காரணத்தால்தான் இன்றைக்கு இங்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

சின்னச்சாமி என்னை நன்றாக அறிவார்கள். நான் அவருக்கு உறுதியளிக்கிறேன். அவரோடு வந்திருப்பவர்களுக்கும் உறுதியளிக்கின்றேன். எல்லோரும் பல பொறுப்புக்களிலே உள்ளவர்கள். உங்களுக்கு எந்தச் சேதாரமும் இங்கே வந்துள்ள காரணத்தால் ஏற்படாது. ஒரு துளி சேதாரம் ஏற்பட்டாலும் அதைப் போக்கிப் பாதுகாக்கக் கூடிய உரிமையும், உணர்வும் எனக்கு உண்டு. எங்கள் தோழர்களுக்கும் உண்டு.

நீங்கள், நாங்கள், எங்கள் என்று பேசியதற்காக மன்னிக்க வேண்டுகிறேன், நமக்கு உண்டு என்று சொல்லி, நாம் நாமாக இருப்போம். திமுகவை வீழ்த்த எண்ணுவோர் தங்களுடைய எண்ணம் பலிக்காமல் அவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் நம்மைப் பார்த்து ஏங்குகின்ற அளவிற்கு, நம்மைப் பார்த்து வருத்தப்படுகின்ற அளவிற்கு, வேதனைப்படுகின்ற அளவிற்கு நாம் நம்மை வளர்த்துக் கொள்வோம்.

ஒருவரையொருவர் நேசிப்போம். திராவிடர் இயக்கத்திற்குத் தேவை கட்டுப்பாடு. அந்தக் கட்டுப்பாடு மாத்திரம் நம்மால் காப்பாற்றப்படுமேயானால், தொடர்ந்து காப்பாற்றப்படுமேயானால் நம்மை வீழ்த்த உலகத்திலே யாரும் பிறக்கவில்லை, பிறக்கப் போவதும் இல்லை என்ற உறுதியை உங்களுக்குச் சொல்லி, அந்த உறுதியோடு இந்த மாமன்றத்திலே கூடியிருக்கின்ற உங்களையெல்லாம் நான் வாய்மையோடு வாழ்த்துகிறேன், வருக வருக என்று இரு கரம் நீட்டி உங்களையெல்லாம் வரவேற்கின்றேன் என்றார் கருணாநிதி.

விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
இப்போது இந்த நிகழ்ச்சியில் கரூர் சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார். திமுக என்னும் தாய்கழகத்தில் இணையும் நிகழ்ச்சி தொடர்கதையாக நடக்கிறது. விரைவில் அதிமுக காலியாக போகிறது. இன்னும் பல பேர் திமுகவில் இணைய உள்ளனர். அவர்கள் யார்? யார்? என்று உங்களுக்கு தெரியத்தான் போகிறது. ஜெயலலிதா தனது கட்சிகாரர்களை தக்கவைத்துக்கொள்ள தினமும் ஆர்ப்பாட்டம் என்று அறிக்கை விடுகிறார்.

அதிமுகவில் இருந்து திமுகவில் ஏராளமான பேர் இணைந்து வருகிறார்கள். அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

திமுகவில் இணைந்த கரூர் சின்னசாமி பேசுகையில், அதிமுகவில் 13 ஆண்டுகள் அவமானப்பட்டு தப்பித்து வந்துள்ளோம். திமுக அனைவரையும் சேர்க்கும் கட்சியாகவும், அதிமுக உண்மையான தொண்டர்களை நீக்கும் கட்சியாகவும் உள்ளது என்றார்.

சின்னசாமியுடன் முன்னாள் அதிமுக எம்எல்ஏ அரவக்குறிச்சி எஸ்.ஜெகதீசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கே.எஸ்.சிவமனோகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் கடவூர் கண்ணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் காக்காவாடி சுப்பிரமணியன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பொன்.மருதமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.கிருஷ்ணன், இணை செயலாளர் கூடலூர் கோபால், கரூர் நகராட்சி கவுன்சிலர்கள் கே.கணேசன், பானுமதி, கரூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கே.எம்.தமிழரசன், வளர்மதி, ராஜேந்திரதன் கோகிலாமணி, கே.ஆர்.பழனிசாமி, தாந்தோணி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆர்.நல்லுசாமி, சகுந்தலா, குணசேகரன், கடவூர் ஒன்றிய கவுன்சிலர் கடவூர் சிங்காரம், என்.புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X